சென்னை: தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, முதல்முறையாக 2006ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட் வாங்கியது எப்படி, ஜெயலலிதா தேர்வு செய்ததன் பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் இங்கே பார்க்கலாம்.

கரூர் மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலாளராக இருந்த செந்தில்பாலாஜி 2006ஆம் ஆண்டு கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்து பணம் கட்டுகிறார்.

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கரூர் சின்னசாமியும் அந்த தேர்தலில் கரூர் தொகுதியை கேட்டு விருப்பமனு கொடுத்திருந்தார்.

கரூர் சின்னச்சாமி மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, 2006 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க விரும்பாத ஜெயலலிதா, சின்னசாமிக்கு மாற்றாக யாரை நிறுத்தலாம் என யோசிக்க ஆரம்பிக்கிறார்.

அப்போது யாரெல்லாம் சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறார்கள் என்பதை பார்த்த ஜெயலலிதா, அதிலிருந்து 2 பேரை தீர விசாரித்து தன்னிடம் பரிந்துரை செய்யும் பொறுப்பை டிடிவி தினகரன் வசம் ஒப்படைக்கிறார்.

டிடிவி தினகரனும் ராஜா பழனிசாமி, செந்தில்பாலாஜி, சாகுல் ஹமீது என பலர் குறித்தும் நன்கு விசாரிக்கிறார்.

அதில் மற்றவர்களை காட்டிலும் செந்தில்பாலாஜி இளம் வயதுடையவர் என்பதால் ஆக்டிவாக இயங்கக் கூடியவர், கூடவே நன்றி விசுவாசமாகவும் நமக்கு இருப்பார் என நினைத்த டிடிவி தினகரன் செந்தில்பாலாஜியின் பெயரை செலக்ட் செய்து ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்ய முடிவெடுக்கிறார்.

இருப்பினும் அவருக்குள் ஒரு சந்தேகம் இருந்ததால் அப்போதைய அதிமுக மாநில மாணவரணிச் செயலாளரான கலைராஜனிடமும் யாருப்பா இந்த பையன்? ஆள் எப்படி? என தினகரன் விசாரிக்கிறார்.

அவரும், அருமையான பையன், ஆக்டிவான பையன் என சொல்லி வைத்தது போல் செந்தில்பாலாஜிக்காக சர்டிஃபிகேட் தருகிறார்.

அதேபோல் அப்போது கரூரில் பணியாற்றிய தினகரனுக்கு நெருக்கமான முக்கிய அதிகாரி ஒருவரும் செந்தில்பாலாஜிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கிறார்.

பிறகென்ன ஜெயலலிதாவிடம் செந்தில்பாலாஜிக்கு சீட் கொடுக்கலாம் என 2006ஆம் ஆண்டு நேரடியாக பரிந்துரை செய்கிறார் தினகரன்.

அந்த தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும் கரூரில் செந்தில்பாலாஜி ஜெயிக்கிறார். அதுவும் திமுக மாவட்டச் செயலாளரை வீழ்த்தி வெற்றி பெறுகிறார்.

இது போதாதா ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க, பிறகு கட்சியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்த செந்தில்பாலாஜி 2011ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆகிறார்.

இதனிடையே இவருக்கு எம்.எல்.ஏ.சீட்டுக்கு பரிந்துரை செய்த தினகரனை 2007ல் இருந்து போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என தள்ளி வைக்கிறார் ஜெயலலிதா.

 

Share.
Leave A Reply