அமெரிக்காவை சேர்த்த ஒரு இளம் பெண், தன் வேலைக்காக வாரம்தோறும் விமானத்தில் பயணம் செய்து சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நம்மில் பலர் தினமும் எப்படி வேலைக்குச் செல்வோம்? சிலர் பைக்கில் செல்வார்கள், சிலர் பொதுப் போக்குவரத்து, தனி டாக்ஸி, ஆட்டோ என செல்வதுண்டு. சிலர் நடந்துகூட வேலைக்குச் செல்வார்கள். இதற்கே நமக்கு போதும் போதும் என ஆகிவிடுகிறது.

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த 21 வயதுப் பெண், விமானத்தில் வேலைக்குச் சென்று வருகிறாராம். இதில் இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால் இதனால் தனக்கு அதிக பணம் மிச்சமாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவை சேர்ந்த 21 வயதான சோபியா செலெண்டானோ என்ற பெண், தனது பயண முறைக்காக சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றுள்ளார்.

சோபியா, வர்ஜீனியா பல்கலைகழகத்தில் படித்து வருகிறார், தன் இன்டர்ன்ஷிப் வேலைக்காக வாரம் ஒருமுறை நெவார்க் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

முதலில் அவர் நியூ ஜெர்ஸியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்க முடிவு செய்துள்ளார். ஆனால் அங்கு குடியிருப்பின் விலை 3,400 டாலர்களாக (ரூ.2.78 லட்சம்) இருந்துள்ளது.

அதே நேரம் வாரத்தில் ஒருநாள் சார்லஸ்டனில் இருந்து நெவார்க் வரை வேலைக்குச் சென்று திரும்ப மொத்தமாக 100 டாலர்கள் (ரூ.8,196) மட்டுமே விமானத்துக்குச் செலவாகிறதாம்.

அதனால் வாரந்தோறும் தன் வேலைக்காக விமானத்தில் பறந்து வருகிறார். இதற்காக அதிகாலை 3 மணிக்கே எழும் சோபியா, விமான செக்கிங், அங்குள்ள நடைமுறைகள் என அனைத்தையும் முடித்து, இரண்டு மணி நேர விமான பயணத்துக்குப் பிறகு தன் அலுவலகம் செல்கிறார்.

சோபியா செலெண்டானோ

இதை பற்றி பேசியுள்ள சோபியா, “ எனக்கு பயணம் மிகவும் பிடிக்கும். நான் சாகசத்தை விரும்புகிறேன்.

எனது இந்த வழக்கத்துக்கு மாறான பயணத்துக்கான முழு சுதந்திரத்தை எனக்கு அளித்த என் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்க நினைக்கிறேன். என்னுடைய பயணத்தால் பலர் ஆச்சர்யபடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் இதன் மூலம் நான் மாதம் நிறைய பணத்தை மிச்சம் செய்கிறேன். இது எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகவும் நன்மையாக உள்ளது” என்று பகிர்ந்துள்ளார்.

ஆனால் இவரின் சமூகவலைதள பதிவுக்கு பலர் நேர்மறையான கருத்துகளையும் பலர் எதிர்மறையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply