இலங்கை விவகாரத்தில் இந்தியா கடந்த வருடம் மேற்கொண்ட செயற்பாட்டை ஒருபோதும் மறக்க முடியாது. அதனை மறக்கவும் கூடாது. அது ஏன் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பாரிய பொருளாதர நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையை செய்து கொண்ட நீடிக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக தற்போது இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலையில் இருந்து வெளியே வந்திருக்கின்றது.

தற்போது இலங்கை வங்குரோத்து நாடு அல்ல. ஆனால் இன்னும் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நிலைமையிலே இலங்கை இருக்கின்றது.

எனினும் இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்டு திட்டத்துக்குள் சென்றிருப்பதால் சர்வதேசத்தின் நம்பிக்கை பெறப்பட்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கையை நம்பி தற்போது கடன்களை வழங்குவதற்கு முன் வந்திருக்கின்றது.

அந்தவகையிலேயே தற்போது உலக வங்கியானது இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவிருக்கின்றது.

அது மூன்று தவணைகளில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதற்கான ஒப்புதலை இம்மாதம் 28 ஆம் திகதி உலக வங்கியின் நிறைவேற்று சபை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு தற்போது உதவுவதற்கு முன் வந்திருக்கின்றன.

ஆனால் சர்வதேச நாணயத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை சர்வதேச நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.

அதாவது இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் அந்த கடனை எவ்வாறு இலங்கை மீள் செலுத்துவது என்பது தொடர்பாக ஒரு மறுசீரமைப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும்.

அது ஒக்டோபர் மாதத்துக்குள் செய்து கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. அதேபோன்று உள்நாட்டிலும் கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியாக அது அமைந்திருக்கிறது. எனவே அதற்கான நடவடிக்கையையும் இலங்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பானது வங்கி வைப்பாளர்களுக்கு அல்லது ஊழியர் சேபலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்தவர்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் அரசாங்கம் அதனை எவ்வாறு செய்யப்போகிறது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எப்படியிருப்பினும் தற்போது உள்நாட்டிலும் பொருளாதார மறுசீரமைப்பு செயல்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகின்றது. பொருளாதாரம் சாதகமான சமிக்ஞைகளை வெளிக்காட்டியிருக்கின்றது.

உள்நாட்டு அரச வருமானமும் திருப்தியான முறையில் இருக்கின்றது. வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில் இலங்கை பொருளாதார ரீதியில் தற்போது மீட்சி அடைந்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

எப்படியிருப்பினும் இலங்கை 2022 ஆம் ஆண்டு எதிர்கொண்ட நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதி உதவியை டொலர் கடன் உதவியை மறந்து விட முடியாது. அந்த உதவியே இதுவரை காலமும் இலங்கை மக்கள் மூச்சு விடுவதற்கு உதவியாக அமைந்தது.

இந்தியா இலங்கைக்கு சுமார் 3.8 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன் உதவியை வழங்கியது.

தெற்காசிய நாணய பரிமாற்று ஏற்பாடுகள் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்கள், 500 மில்லியன் டொலர் கடன் ஒன்றை செலுத்துவதற்கான உதவி, 1.5 பில்லியன் டொலர்கள் கடனுதவி, இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடனுதவி நீடிக்கப்பட்டமை. 500 மில்லியன் டொலர் விசேட கடன் என்பன இந்தியாவினால் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது இலங்கைக்கு வழங்கப்பட்டன.

அந்தவகையில் மிகவும் முக்கியமான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது.

அந்த உதவி 2022 ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்காவிடின் இலங்கை இன்று மீட்சி அடையும் நிலையை நோக்கி நகர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.

அதாவது அப்போது இந்தியா வழங்கிய உதவியின் காரணமாகவே கோட்டா முறையிலாவது மக்களுக்கு எரிபொருளை வழங்கக்கூடிய நிலைமை காணப்பட்டது.

அதாவது இருக்கின்ற எரிபொருளை பகிர்ந்து வழங்கக்கூடிய சூழல் அதனால் தான் ஏற்பட்டது.

எனவே இந்தியாவின் உதவி இந்த இடத்தில் மிக முக்கியமானதாக இருக்கின்றது. இந்தியா அந்த நேரத்தில் எந்தவித விடயங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இலங்கைக்கு நேரடியாக 3.8 பில்லியன் டொலர் கடன் உதவியை வழங்கியது.

குறித்த நெருக்கடி காலப்பகுதியில் சர்வதேச நாடுகள் பத்து மில்லியன், 20 மில்லியன் என சிறிய அளவிலான உதவிகளை வழங்கிக் கொண்டிருந்த சூழலில் மற்றும் இலங்கை மீது நம்பிக்கை இல்லை என்று பல்வேறு சர்வதேச நாடுகள் சர்வதேச அமைப்புகள் தெரிவித்திருந்த சூழலில் அயல்நாடு என்ற ஒரே காரணத்துக்காக இந்தியா இந்த உதவியை செய்தது.

அந்த உதவி மட்டும் இலங்கைக்கு கிடைத்திருக்காவிடின் இலங்கையின் பொருளாதார நெருக்கடி எவ்வாறு பரிணாமம் அடைந்திருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியாது. அதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒரு சூழலே காணப்படுகிறது.

அரசாங்கத்தின் அமைச்சர்களும் இதற்காக இந்தியாவுக்கு அடிக்கடி நன்றி கூறி வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் தனது முதலாவது கொள்கை பிரகடன  உரையில் கூட இந்தியாவின் இந்த உதவி தொடர்பாக நன்றி தெரிவித்திருக்கின்றார்.

இலங்கை மக்கள் மூச்சு விடுவதற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது முதலாவது கொள்கை பிரகடன உரையில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் இந்தியாவின் உதவியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியா இலங்கைக்கிடையிலான உறவுகளில் பல ஏற்றத்தாழ்வுகள் கடந்த காலங்களில் காணப்பட்டிருக்கலாம்.

ஆனால் எந்தவொரு அனர்த்தத்தின் போதும் இந்தியா இலங்கைக்கு முதலாவதாக உதவி செய்யும் நாடாக இருந்திருக்கிறது.

சுனாமி அனர்த்தம். கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி போன்ற பல்வேறு நெருக்கடிகளின் போது இந்தியா இலங்கைக்கு முதலாவதாக உதவிய நாடாகவே வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.

எவ்வாறான முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் கசப்பான அனுபவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றாலும் கூட இலங்கையின் நெருக்கடியின் போது உதவுகின்ற இந்தியாவின் அந்த செயற்பாடு இன்னும் மாற்றமடையவில்லை.

எனவே இலங்கைக்கு மிக 4 நெருங்கிய பூகோள ரீதியான தொடர்புடைய நாடு என்ற வகையிலும் பிராந்திய வல்லரசு என்ற ரீதியிலும் இந்தியாவினுடைய நட்பு இலங்கைக்கு மிக முக்கியத்துவமாகவே அமைந்திருக்கிறது.

இலங்கை நாணய நிதியத்தின் உதவியை பெற கடன் மறுசீரமைப்பு உத்தரவாதத்தை கடன் வழங்கிய நாடுகளிடம் பெறவேண்டியிருந்தது. அப்போது முதலாவதாக இலங்கைக்கு கடன் உத்தரவாதத்தை வழங்கிய நாடாகவே இந்தியாவே வரலாற்றில் இடம்பிடித்தது.

இலங்கை சுயாதீனமிக்க இறையாண்மை உள்ள ஒரு நாடு. இந்நிலையில் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் இந்தியாவுடனான உறவானது இலங்கைக்கு மிக முக்கியத்துவமாக இருக்கின்றது என்பதே ஆய்வாளர்களின் பார்வையாக காணப்படுகின்றது.

இருதரப்பு உறவில் எவ்வாறான விமர்சனங்கள் காணப்பட்டாலும் 2022 இல் இந்தியா வழங்கிய 3.8 பில்லியன் டொலர் கடனுதவியானது இலங்கை மக்கள் மூச்சுவிடுவதற்கு துணைபுரிந்தது என்பதனை மறுக்க முடியாது.

-ரொபட் அன்டனி

Share.
Leave A Reply