சீனாவைச் சேர்ந்த 56 வயதான கோடீஸ்வரர் ஒருவர், 27 தடவைகள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதி தோல்வியுற்ற நிலையில், தொடர்ந்தும் அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

லியாங் ஷி எனும் இவர், சுயமாக சம்பாதித்து செல்வந்தரானவர். படித்துப் பல்கலைக்கழகப் பட்டம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இதற்காக பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுப் பரீட்சைகளை எழுதிய போதிலும், அவருக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த 4 தசாப்தங்களில் 27 தடவைகள் அவர் இப்பரீட்சையை எழுதியுள்ளார்.

தேசிய கல்லூரி நுழைவுப் பரீட்சை எனும் இப்பரீட்சை காவோகாவோ (gaokao) எனவும் அழைக்கப்படுகிறது.

1983 ஆம் ஆண்டு 16 வயது மாணவனாக இருந்தபோது முதல் தடவையாக அவர் இப்பரீட்சையை எழுதினார். அதன்பின், பல்வேறு தொழில்களைச் செய்த அவர், 1992 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் இப்பரீட்சையை எழுதி வந்தார்.

அதன்பின் வயதுக் கட்டுப்பாடு காரணமாக அவர் இப்பரீட்சைக்குத் தோற்ற முடியவில்லை.

பின்னர். தான் பணியாற்றிய தொழிற்சாலை வங்குரோத்தான பின்னர், 1990களில் மொத்த வியாபாரத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் யுவான் சம்பாதித்த அவர், நிர்மாணத்துறைப் பொருட்களின் வர்த்தகத்தையும் ஆரமபித்தார்.

2001 ஆம் அண்டு சீன அரசாங்கம் மேற்படி பரீட்சைக்கான வயது வரம்பை நீக்கியது. அதன்பின் மீண்டும் கல்வியைத் தொடர்ந்த அவர், இப்பரீட்சைக்கு விண்ணப்பி;த்து வந்தார்.

இறுதியாக கடந்த வாரம் வெளியான பெறுபேறுகளின்படி, 750 புள்ளிகளில் 424 புள்ளிகைள லியாங் ஷி பெற்றுள்ளார். இது பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்குத் தேவையான புள்ளகளைவிட 34 புள்ளிகள் குறைவாகும்.

அடுத்த வருடம் ‘நான் இப்பரீட்சைக்கு தயாராவேனா என்பது தெரியவில்லை’ எனக் கூறும் லியாங் ஷி, தான் இன்னும் இதை கைவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply