டைட்டனிக் கப்பலின் சிதைவுகளை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது.
அந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து உயிரிழந்த 5 பேரில் ஒருவரான பிரித்தானிய கோடீஸ்வரர் Hamish Harding ஏற்கனவே இலங்கையுடன் தொடர்புபட்ட ஒரு தகவல் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
குருணாகலில் வசிக்கும் ஒரு குடும்பத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு Hamish Harding எடுத்துக்கொண்ட நிழற் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Hamish Harding 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
அப்போது தனது பணப்பையை தொலைத்துவிட்டு செய்வதறியாமல் பிரித்தானியா திரும்புவதற்காக விமானத்தில் அமர்ந்திருந்த Hamish Hardingக்கு தக்க சமயத்தில் குருணாகலையை சேர்ந்த திலின பிரமோத்ய பண்டார திசாநாயக்க கைகொடுத்துள்ளார்.
”10 வருடங்களுக்கு முன்னர் எனது சகோதரியை ரயிலில் ஏற்றிவிட சென்றபோது வீதியில் ஒரு பணப்பையை கண்டெடுத்தேன்.
அதனை வீட்டிற்கு கொண்டுவந்து பெரியப்பாவிடம் கொடுத்தேன். அவர் அதனை சோதனை செய்தபோது டொலர் மற்றும் யூரோக்கள் அதில் இருந்தன. அத்துடன் தொலைபேசி இலக்கம் ஒன்றும் அதில் இருந்தது. அதன் இலக்கத்துக்கு தொடர்புகொண்டோம்.
தனது பணப்பையை தவறவிட்டிருந்த Hamish Harding அது மீண்டும் கிடைக்காது என நினைத்து தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனபோதும் பணப்பை எங்களிடம் உள்ளதாக கூறியதால் அவர் மகிழ்ச்சியடைந்து விமான பயணச் சீட்டை ரத்து செய்து கொண்டு குருணாகல் வந்தார்.
அவருக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் குருணாகல் பகுதியை சேர்ந்தவர் என்பதால் Hamish Hardingக்கு எங்கள் வீட்டை தேடிக்கொள்வது இலகுவாக இருந்துள்ளது.
அவர் வீட்டிக்கு வந்தவுடன் என்னக்கு பணம் முக்கியம் அல்ல சாரதி அனுமதிப்பத்திரமும், விமான உரிமமும் முக்கியம் என சொன்னார்.
அத்தோடு அவரின் பணப்பையில் எதுவும் தொலைந்து போகவில்லை என கூறிய அவர் அதில் இருந்த டொலர்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இலங்கை ரூபாவில் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா இருந்தது.
எங்கள் வீட்டில் மதிய போசனம் எடுத்துக்கொண்டு அவர் மாலை 6 மணியளவில் இங்கிலாந்து செல்வதாக கூறி சென்றார்.
இந்த சம்பவம் நடைபெற 2 வாரங்களுக்கு முன்பும் Hamish Harding என்னுடன் கதைத்தார்.
இவர் இறந்த பின்னரே இவர் யார் என்பது குறித்த நாம் முழுமையாக அறிந்தோம்” என தெரிவித்துள்ளார் திலின பிரமோத்ய பண்டார திசாநாயக்க.