♠நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

♠3-வது நீதிபதி யார்? என்பதை தலைமை நீதிபதி விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறையினரும் இது தொடர்பாக விசாரணை நடத்துகிறார்கள்.

கடந்த மாதம் 13-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமலாக்கத்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்தனர்.

ஒப்பந்ததாரர் மீது வழக்கு இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் 14-ந்தேதி அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக சென்னை ஐகோர்ட்டில் நடந்தது.

அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல், “அமலாக்கத்துறையினர் சட்ட விரோதமாக செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர் என்பது நிரூபணமாகி உள்ளது.

நள்ளிரவு 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டதை காலை 8.12 மணிக்கு தான் தெரிவித்துள்ளார்கள்.

செந்தில் பாலாஜி கைது மெமோவில் கையெழுத்திட மறுத்தார் என்பதற்கான எந்த பதிவும் இல்லை.

சட்ட விரோத கைதை மனதில் செலுத்தி ஆராயாமல் அமர்வு நீதிமன்றம் இயந்திர தனமாக ஏற்றுள்ளது.

மேலும் ஒருவரை காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு கிடையாது என்று வாதிட்டார்.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

அப்போது செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இல்லை. அமர்வு நீதிமன்றம் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதால் அவர் சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

அவரை நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை. சட்ட விரோத பண பரிமாற்றச் சட்டப்படி கைது செய்யப்பட்ட பிறகும் காரணத்தை சொல்லலாம்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார்.

அமலாக்கத்துறை காவலில் இல்லை. செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி தற்போது கோர முடியாது.

போக்குவரத்து துறை பணி முறைகேடு தொடர்பாகவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கி தருவதற்கு அவர் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் எழுத்துப் பூர்வமாகவும் இரு தரப்பினரும் வாதங்களை எடுத்து வைத்தனர்.

இதையடுத்து தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். அதன் விவரம் வருமாறு:- நீதிபதி நிஷாபானு அளித்த தீர்ப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததில் சட்ட விரோதம் உள்ளது.

எனவே உடனடியாக அவரை ஜாமீனில் விடுவிக்கிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி பரத சக்ரவர்த்தி மதுரையில் இருந்தபடியே காணொலி வாயிலாக தனது தீர்ப்பை வழங்கினார்.

அவர் கூறியதாவது:- செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் எந்த சட்ட விரோதமும் இல்லை. ஜூன் 14-ந்தேதி முதல் அவர் சட்டப்படியான காவலில் தான் உள்ளார்.

விசாரணைக்காக அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி ஒரு நிமிடம் கூட இருக்கவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்கிற கேள்வியே எழவில்லை. அவருக்கு ஜாமீன் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

உடல்நிலை சரியில்லாமல் காவேரி ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதால் அந்த சிகிச்சையை மேலும் 10 நாட்களுக்கு தொடரலாம்.

அதன்பிறகும் சிகிச்சை தேவைபட்டால் அவர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சையை தொடரலாம்.

எனவே ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி பரத சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால் இதில் எது சரியானது? என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதி விசாரணைக்காக இந்த வழக்கு தலைமை நீதிபதி பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 3-வது நீதிபதி யார்? என்பதை தலைமை நீதிபதி விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்.

இதன் பிறகு அந்த 3-வது நீதிபதி விசாரணை நடத்தி தீர்ப்பை வெளியிடுவார். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை நடத்த உள்ள 3-வது நீதிபதி யார்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply