இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான விவாதம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர்,

‘மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கின்ற சர்வதேச ரீதியான அமைப்புக்கள் எவையும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிராக எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்காமல் இருந்து வருவதாகக் விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், எமது தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் முறைப்பாடுகளை முன் வைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இலங்கையில் மழை பெய்தாலும் சர்வதேசம் குடைபிடிக்க வேண்டும் எனக் கூக்குரலிடுகின்ற இந்தத் தமிழ் அரசியல் தரப்பினருக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நல்லதொரு பதிலை வழங்கியதாகவும் – அதாவது ‘அனைத்துக்குமே சர்வதேசம், சர்வதேசம் எனக் கூறிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சர்வதேசத்திற்கும் சில வரையறைகள் உள்ளன’ எனக் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் இனிமேல், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேற்றுக் கிரக வாசிகள் தலையிட வேண்டும் எனக் கோரினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்’ என்பது போல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் காலகாலமாக வலியுறுத்தி வருபவன்.

அன்று நான் எதைச் சொன்னேனோ அதுவே இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அன்று அதனை எதிர்த்த ஏனைய தமிழ் அரசியல்வாதிகள், இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையை காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனால், அன்று அவர்கள் எதிர்த்தமைக்கும், இன்று அவர்கள் ஆதரிப்பதற்கும் சுயலாப உள் நோக்கம் காரணமாக இருக்கின்றதே அன்றி, அதில் உண்மைத் தன்மை – நேர்மை எதுவும் இல்லை என்பதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் நல்லிணக்கம் என்பதை வெறும் வார்த்தையில் மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல், அதனை செயலில் காட்டுவதற்கு எப்போதுமே தயாராக உள்ளவர்.

அந்த வகையில், அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற இக்காலகட்டம் ஒரு அரிய வாய்ப்பாகும். இந்தச் சநதர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இத்தகையதொரு சந்தர்ப்பம் இனி வாய்க்கும் என்பதை உறுதியாகக் கூற இயலாது.

எமது மக்களின் பிரச்சினைகளை, எமது பகுதிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்கின்ற உண்மையான அக்கறை காரணமாகவே அவர் அனைத்து தமிழ்க் கட்சிகளினதும் பிரதிநிதிகளை அடிக்கடி அழைத்து கலந்துரையாடி வருகின்றார்.

ஜனாதிபதி அவர்களின் அழைப்பினை ஏற்று, அவருடன் கலந்துரையாடிவிட்டு, வெளியில் வந்ததும் ஊடகங்களுக்காக ‘இது சாத்தியப்படாது. அது சாத்தியப்படாது’ என அபசகுனமாகக் கூறிக் கொண்டிராமல், நாங்கள் முன்வைக்கின்ற விடயங்களை செயல்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் நாம் கையாள வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் பிரதிநிதி ஆற்ற வேண்டிய பொறுப்பாகின்றது.’ எனவும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply