சஞ்சய் நகர் ஹோலி சந்திப்பில், ஓர் இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்கூட்டரின் பின்னால் கயிற்றால் கட்டி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் ஓர் இளைஞரை மூன்று பேர்கொண்ட கும்பல், ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏறபடுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், பரதாரி காவல் நிலையப் பகுதியிலுள்ள சஞ்சய் நகர் ஹோலி சந்திப்பில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சம்பவத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், “ஜூலை 25-ம் தேதி மாலை 4:35 மணியளவில் சஞ்சய் நகர் ஹோலி சந்திப்பில், ஓர் இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஸ்கூட்டரின் பின்னால் கயிற்றால் கட்டி, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது.

பாதிக்கப்பட்டவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடி வருகிறோம்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதை ஏன் செய்தார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறது.

Share.
Leave A Reply