அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான சகல யோசனைகளையும் பாராளுமன்றில் சமர்ப்பிப்தற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய அதிகாரப் பகிர்வை வழங்கல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான சட்டதிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார். பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவாக குறிப்பிடவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சிகளும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது புதுடில்லியில் வைத்து தெரிவித்தார்.

Share.
Leave A Reply