நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் தொடர்ந்து பொது வெளியிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் பத்ராவதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் சில முற்போக்கு சங்கங்கள் இணைந்து ‘திரையரங்கு சினிமா சமுதாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் நடிகர் பிரகாஷ்ராஜ், பேராசிரியர் சந்திர சேகரய்யா, சமூக ஆர்வலர் கே.எல்.அசோக் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதுபற்றி தெரியவந்ததும் விழா நடந்து கொண்டிருந்த கல்லூரி முன்பு பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் தனியார் அமைப்புகளுக்கு கல்லூரி நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து கல்லூரிக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பின்னர் விழா முடிந்து பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றுவிட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த அறையில் பா.ஜ.க. மாணவர் அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் பசு கோமியத்தை கொண்டு சுத்தம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Share.
Leave A Reply