பதுளை போதனா வைத்தியசாலையில் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 07 கோடி ரூபா நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செலுத்தாத காரணத்தினால் வைத்தியசாலையின் மருத்துவ விடுதி, தாதியர் பயிற்சிப் பிரிவு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்க மின்சார சபை நேற்று காலை நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (10) பிற்பகல் வைத்தியசாலை நிர்வாகம் 20 மில்லியன் ரூபாவை செலுத்தியதாகவும், மீதித் தொகையை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதாக எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து, மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் முறையான முகாமைத்துவம் இன்றி வைத்தியசாலை அதிகாரிகள் மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பதுளை போதனா வைத்தியசாலையின் 98 இலட்சம் ரூபா குடிநீர் கட்டணம் உட்பட பல கொடுப்பனவுகள் செலுத்தத் தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply