பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கொலைசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, விசாரித்ததில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அமிர்தசரஸ் மாவட்டத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 20 வயது மகள் கடந்த புதன் கிழமை வீட்டில் இருப்பவர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். எங்குத் தேடியும் கிடைக்காத அந்தப் பெண்ணை வீட்டில் இருப்பவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை.
மறுநாள் அவர் மீண்டும் வீடு திரும்பியபோது, அந்தப் பெண்ணின் தந்தைக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் தந்தை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார்.
அதில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்களையும் குற்றம்சாட்டப்பட்ட நபர் மிரட்டி, இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என எச்சரித்திருக்கிறார்.
மேலும், அந்தப் பெண்ணின் உடலை பைக்கில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று, ரயில்வே தண்டவாளத்தில் வீசியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய காவல்துறை,“குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்ப உறுப்பினர்களை வீட்டில் அடைத்து வைத்து, அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனால் பயந்த குடும்ப உறுப்பினர்கள் இந்தக் கொலை குறித்து வெளியே யாருக்கும் கூறவில்லை.
ஆனால், உயிரிழந்த பெண்ணின் பாட்டி, திரும்ப வீட்டுக்கு வந்த தனது பேத்தியை அவளது தந்தையே கொலை செய்துவிட்டார் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறது.