பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மீண்டும் நீதித்துறையின் மீது மோசமான சேற்றை வாரியிறைத்திருக்கிறார் சரத் வீரசேகர.
இனவாத அரசியலை முன்னெடுப்பதில் சரத் வீரசேகரவுக்கும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் இப்போது, கடும் போட்டி நிலவுகிறது.
முன்னர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் தான் இனவாதம் கக்குவதில் முன்னிலை வகித்து வந்தனர். அவர்களுக்கு கடும் போட்டியாக உருவெடுத்திருக்கிறார் சரத் வீரசேகர.
குருந்தூர்மலை, 13 ஆவது திருத்தச்சட்டம் போன்ற விடயங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் மீது இனவாதம் கக்குவதில் அவர் குறியாக இருக்கிறார்.
குருந்தூர்மலையை சிங்கள பௌத்தர்களின் இடம் என்கிறார். இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். தமிழர்கள் வந்தேறு குடிகள் என்கிறார். எங்கு வேண்டுமானாலும் புத்தரை வைத்து வழிபடும் உரிமை தங்களுக்கு இருப்பதாக கூறுகிறார்.
இவ்வளவையும் கூறி விட்டு தமிழ் அரசியல்வாதிகள் தான் இனவாதம் பேசுகின்றனர், இனவாத அரசியல் நடத்துகின்றனர் என்றெல்லாம் அவர் குற்றம்சாட்டுகிறார்.
இலங்கையில் இனவாத அரசியல் முறை இப்போது கூர்மையடையத் தொடங்கியிருக்கிறது.
தமிழர் தரப்பில் உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும், சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் எழுப்புபவர்களும் இனவாதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு அரசியல் பாரம்பரியத்துக்குள் தான் இலங்கைத் தீவு பல காலமாக மூழ்கிக் கிடக்கின்றது.
அண்மைக்காலமாக சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் இன்னும் மோசமாக மாறத் தொடங்கியிருக்கிறது.
தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிப்பது, ஆலயங்களை அழித்து, புதிய விகாரைகளை கட்டியெழுப்புவது என, சிங்களப் பேரினவாத அணுகுமுறை மோசமடைந்திருக்கிறது. அதற்குக் குறுக்கே நிற்பவர்களை மோசமாக விமர்சிக்கின்ற போக்கு அதிகரித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் சரத் வீரசேகர, உதய கம்மன்பில உள்ளிட்ட இனவாதப் போக்குடைய உறுப்பினர்கள் பலரும், நாட்டின் நீதித்துறையை கேவலப்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
குருந்தூர்மலைக்குச் சென்ற சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதியின் விசாரணையில் குறுக்கிட முயன்ற போது, அவரை அங்கிருந்து வெளியேற்றியிருந்தார் நீதிபதி.
அதற்குப் பின்னர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர இது சிங்கள பௌத்த நாடு என்றும், சிங்கள பௌத்தரான தன்னை வெளியேற்றுவதற்கு ஒரு தமிழ் நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியதுடன் தமிழ் நீதிபதிகள் பக்கசார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.அதற்கு எதிர்ப்புகள் வந்தவுடன், தனது கருத்து திரிபுபடுத்தப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.
குருந்தூர்மலையில் தமிழர்களால் பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, முல்லைத்தீவு நீதிபதியை மனநோயாளி என்றும் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
பாராளுமன்றமா இது என்று கேள்வி எழுப்பத் தோன்றும் அளவுக்கு கேவலமான- இனவாத விமர்சனங்கள், தமிழர்கள் மீது முன்வைக்கப்படுகின்றன. சிங்கள பௌத்த பேரினவாத திமிருடன் தமிழர்களை எங்கு வேண்டுமானாலும் கேவலப்படுத்த முடியும் என சரத் வீரசேகர போன்றவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
குருந்தூர்மலையில் தமிழர்கள் பொங்கல் விழாவை முன்னெடுத்தது, சிங்கள பௌத்தர்களை காயப்படுத்தியுள்ளதாக இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர கூறியிருக்கிறார்.
குருந்தூர்மலையில் விகாரை கட்டப்படுவதற்கு முன்னர் அங்கு பொங்கல் வழிபாடுகள் சைவ மக்களால் மேற்கொள்ளப்பட்டது.
அதுவரை காலமும் பொங்கல் வைத்த போது பௌத்தர்கள் யாருக்கும் மனம் புண்படவில்லை. இப்போது மட்டும் புண்படுவதாக கூறுகிறார் ஜயந்த சமரவீர.
சரி, 2000 ஆண்டுகளுக்கு முந்திய விகாரை இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அதனை சிங்கள பௌத்தர்களே அமைத்தனர் என்றும் வைத்துக் கொள்வோம்.
அத்தகைய புராதன விகாரையை மண்ணுக்குள் புதைய விட்டதற்காக, இத்தனை காலமும் அங்கு வழிபடாமல் போனதற்காக ஏன் சிங்கள பௌத்தர்கள வருந்தவில்லை.
அந்த விகாரையை கைவிட்டதற்காக ஏன் அவர்கள் வெட்கப்படவில்லை?
இவ்வாறான கருத்துக்களின் ஊடாக நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு உயிர் கொடுக்க முனைகிறார்கள் இவர்கள்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கப் போகிறது. அதில் மீண்டும் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியை தேர்வு செய்யும் நோக்கம் சரத் வீரசேகர போன்றோருக்கு இருக்கக் கூடும்.
2019 ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால் கோட்டாபய ராஜபக் ஷவை ஜனாதிபதி ஆக்கினார்கள். அவர்களின் அந்த வெற்றி இரண்டரை ஆண்டுகளுக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை.
சிங்கள பௌத்தர்களின் ஜனாதிபதி ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் துன்பத்துக்குள் தள்ளினார். அதனால் மக்களால் வெறுக்கப்பட்டு விரட்டப்பட்டு நாட்டை விட்டே ஓடினார்.
அந்த இடத்திலேயே தனிச் சிங்கள பௌத்த வாக்குகள் என்ற இராஜதந்திரம் தோல்வியடைந்தது.
அப்போது ஆட்சியை இழந்த ராஜபக் ஷவினர், ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்து பின்கதவால் தங்களின் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவையே மீண்டும் ஜனாதிபதியாக்கும் திட்டம் தான் தங்களுக்கு சரிப்பட்டு வரும் என்று அவர்கள் நம்பினார்கள்.
ஆனால், இப்போதைய நிலையில் ராஜபக் ஷவினர் மீண்டெழுவதற்கு முற்படுகின்றனர். அதிகாரத்தை மீளக் கைப்பற்றும் திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ராஜபக் ஷவினரையோ அல்லது சிங்கள பௌத்தர்களால் தெரிவு செய்யக் கூடிய ஒருவரையோ தான் அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு சரத் வீரசேகர போன்றவர்கள் முற்படுகின்றனர்.
தனிச் சிங்கள பௌத்தர்களால் மீண்டும் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதன் மூலம், தமிழ்ப்பேசும் சமூகங்களின் அரசியல் வகிபாகத்தை குறைப்பதற்கு முனைகின்றனர்.
தமிழ்ப்பேசும் சமூகங்கள், அரசியலில் செல்லாக் காசாக மாற்றப்பட்டால் தான் வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்தமயமாக்கும் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
அதற்காக மீண்டும் சிங்கள பௌத்தர்களின் ஆணை பெற்ற ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டுமானால்- இனவாத நெருப்பு பற்றியெரிய வேண்டும்.
மிக அண்மையில் தான் சிங்கள பௌத்தர்களின் ஆணை பெற்ற ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் தோல்வியை அனுபவித்த மக்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு படுகுழிக்குள் விழ விரும்பமாட்டார்கள்.
அந்தக் கசப்பான அனுபவத்தில் இருந்து அவர்கள் இன்னமும் மீளவில்லை.
அவ்வாறான மக்களை முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலைக்கு கொண்டு சென்றால் தான் அந்த இலக்கை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
சிங்கள பௌத்த பேரினவாத உணர்வுகளைத் தூண்டி விட்டால் தான், சிங்கள பௌத்த வாக்குகளை ஒன்றிணைத்து தீர்க்கமானதொரு வெற்றியை-, ஆணையை பெற முடியும்.
சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற இனவாதிகள் இந்த உண்மையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக் ஷவினரே, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் வேட்பாளராக நிறுத்த முனைந்தாலும்- இவர்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள். ராஜபக் ஷவினரை உசுப்பேற்றி உசுப்பேற்றி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்கள் இவர்கள் தான்.
தங்களின் அரசியல் நலன்களுக்காக, சிங்கள பௌத்த பேரினவாத நலன்களுக்காக அவர்கள் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இனஉணர்வுகளை தூண்டி விடத் தொடங்கியிருக்கிறார்கள். வடக்கில் பௌத்தமயமாக்கலை தீவிரப்படுத்தும் போது தமிழர்கள் அதனை இன்னும் மோசமாக எதிர்ப்பார்கள் என்பது இனவாதிகளுக்குத் தெரியும்.
அதனால் அவர்கள் பௌத்தமயமாக்கலை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதன் ஊடாக தமிழர்களின் எதிர்வினையை கொண்டு அவர்களை இனவாதிகளாக சித்திரித்து, சிங்கள பௌத்தர்களின் நலன்களும் உரிமைகளும் தமிழர்களால் பறிக்கப்படுவதாக கூச்சல் போடுகின்றனர்.
இதன் ஊடாகவே, சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இனவாத உணர்வைத் தட்டியெழுப்புகின்றனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் தங்களின் காரியம் நிறைவேறும் வரையில் இந்த இனவாத நெருப்பை அவர்கள் அணைய விடமாட்டார்கள். இன்னும் இன்னும் எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்டு எரிய வைத்துக் கொண்டிருப்பார்கள்.
(நன்றிவீரகேசரி) கபில்