குருந்­தூர்­மலை விவ­காரம் இப்­போது, தேசிய பிரச்­சி­னை­களில் ஒன்­றாக மாறிக் கொண்­டி­ருக்­கி­றது.

13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்கம் தொடர்­பான சர்ச்­சைகள் அர­சியல் அரங்கில் நீடித்துக் கொண்­டி­ருக்கும் நிலையில், குருந்­தூர்­மலை பிரச்­சினை பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.

இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணா­விட்டால், அது பாரிய மத மோதல்­க­ளாக வெடிக்கும் என்று பல்­வேறு தரப்­பி­னரும் எச்­ச­ரிக்­கி­றார்கள்.

இன்னும் சிலர் இது­பற்றி ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­யிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கடி­தங்­களை எழுதிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனால், 13ஆவது திருத்தச் சட்­டத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது தான், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு என்று தைப்­பொங்கல் விழாவில் அறி­விப்பை வெளி­யிட்ட ஜனா­தி­பதி, மகா­நா­யக்­கர்­களின் எதிர்ப்பை அடுத்து. அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்குப் பின்னர் அமை­தி­யானார்.

அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றியபோது தான், நாட்டின் எதிர்­காலம் மற்றும் அபி­வி­ருத்­திக்கு ஏற்­ற­வ­கையில் 13ஐ நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

13ஆவது திருத்தச் சட்­டத்தை அமு­லாக்கும் விட­யத்­தி­லேயே தெளி­வான- தீர்க்­க­மான நிலைப்­பாட்டை எடுக்க முடி­யாத- நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை குருந்­தூர்­மலைப் பிரச்­சி­னையை தீர்க்­கு­மாறு கோரு­வது கொஞ்சம் மிகை­யான எதிர்­பார்ப்பு என்றே குறிப்­பிட வேண்டும்.

குருந்­தூர்­மலை விவ­காரம் இப்­போது, அடுத்த கட்­டத்­துக்கு நகர்ந்து விட்­டது, நகர்த்­தப்­பட்டு விட்­டது.

அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா எவ்­வாறு 13ஆவது திருத்தச் சட்டம், முள்ளில் விழுந்த சேலை என்று குறிப்­பிட்­டாரோ, குருந்­தூர்­மலை விவ­கா­ரமும் அவ்­வாறு தான் இருக்­கி­றது.

13 ஆவது திருத்தச் சட்ட அமு­லாக்­கத்தை ஒரு ஜனா­தி­ப­தி­யாக நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்டு, சத்­த­மின்றி சாதித்­தி­ருக்­கலாம்.ஆனால் அவர், அதனை சந்­திக்குக் கொண்டு வந்து, தெருவில் நிறுத்தி விட்டு அதனை எங்கு கொண்டு செல்­வது என்று தெரி­யாமல் இருக்­கிறார்.

13 விவ­கா­ரத்தை முன்­நோக்கி கொண்டு சென்­றாலும் சிக்கல், பின்­வாங்­கி­னாலும் சிக்கல். அதே நிலை தான் இப்­போது, குருந்­தூர்­மலை விவ­கா­ரத்­திலும் தோன்­றி­யி­ருக்­கி­றது. குருந்­தூர்­ம­லையில் ஆதி­சிவன் ஐயனார் வழி­பாடு இருந்து வந்த நிலையில், அங்­கி­ருந்து சூலத்தைப் பிடுங்கி விட்டு, தொல்­பொருள் இட­மாக அறி­வித்து அகழ்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

பின்னர் அதற்குள் குருந்து விகாரை புதைந்து கிடப்­ப­தாக அறி­வித்து, அங்கு கட்­டு­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இப்­போதும் அங்கு ஆதி­சிவன் ஐயனார் வழி­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால், அங்கு விகாரை அமைக்­கப்­பட்டு, வழி­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

இந்த நிலையில் அங்­கி­ருந்து, விகா­ரையை அகற்­றவும் முடி­யாது, வழி­பா­டு­களைத் தடுக்­கவும் முடி­யாது. ஏனென்றால், அது ஒரு புரா­தன விகாரை என்று பௌத்­தர்­க­ளுக்கு கூறப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­வேளை, ஆதி­சிவன் ஐயனார் வழி­பா­டு­க­ளையும் தடுக்க முடி­யாது. அது சைவ­மக்­களால் இப்­போது வரையில் முன்­னெ­டுக்­கப்­படும் நடை­முறை வழி­பா­டாக இருக்­கி­றது.

ஆக, குருந்­தூர்­ம­லையை இப்­போது பௌத்­தர்­க­ளாலும் விட்டுக் கொடுக்க முடி­யாது, சைவர்­க­ளாலும் விட்டுக் கொடுக்க முடி­யாது என்ற நிலை உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த பிரச்­சி­னைக்கு மூலா­தா­ர­மாக இருந்­தது தொல்­பொருள் திணைக்­களம் தான்.

தொல்­பொருள் திணைக்­களம், அனு­ரா­த­பு­ர­த்திலும் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் காணப்­படும் புரா­தன விகா­ரை­களை ஆய்வு செய்­வ­திலோ, அவற்றின் இருப்­பி­டத்தை கண்­ட­றி­வ­திலோ அதிக அக்­கறை செலுத்­து­வ­தில்லை.

வடக்­கிலும், கிழக்­கிலும் இல்­லாத விகா­ரை­க­ளையும் தேடிக் கொண்­டி­ருக்­கி­றது தொல்­பொருள் திணைக்­களம்.

குருந்­தூர்­ம­லையை தொல்­பொருள் இட­மாக அறி­வித்து விட்டு, அதனை முழு­மை­யாக ஆய்வு செய்ய முன்­னரே, விகா­ரை­களை அமைப்­ப­தற்கு அனு­மதி அளித்­தது. அரச படைகள் தான் குருந்­து­ம­லையை விகா­ரையை புன­ர­மைத்­த­தாக அங்கு நிறு­வப்­பட்­டுள்ள கல்­வெட்டில் குறிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

தொல்­பொருள் திணைக்­களம் பெரும்­பாலும் பௌத்த பிக்­கு­களால் நிரம்­பிய ஒன்று. அதன் சின்­னத்­திலும் கூட பொதுமைத் தன்மை இல்லை. பௌத்த விகா­ரையின் தாது­கோபம் தான் இருக்­கி­றது. இதனை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஒரு­முறை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். பௌத்த பிக்­கு­களால் தொல்­பொருள் திணைக்­களம் தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் நிலையில், குருந்­தூர்­ம­லையில் விகாரை கட்­டப்­பட்­டது ஆச்­ச­ரி­ய­மல்ல.

தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு வெளியில் இருந்து நிதி கிடைக்­கி­றது. இரா­ணு­வத்­தி­னரும் அதற்கு உத­வி­யாக இருக்­கின்­றனர். படை­ப­லத்­தையும், பண பலத்­தையும், அதி­கார பலத்­தையும் பயன்­ப­டுத்­தியே குருந்து விகாரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இப்­போது இதை­யெல்­லா­வற்­றையும் தோற்­க­டித்து பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும் என்றால், அது சிக்­க­லா­னது.

குருந்­தூர்­மலை விவ­காரம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு உரி­யது. அது எந்­த­வொரு மதத்­துக்கும் சொந்­த­மா­ன­தல்ல என்று வடக்கு கிழக்கு பிர­தம சங்­க­நா­யக்கர் சியம்­ப­லா­கஸ்­வெவ விம­ல­சார நாயக்க தேரர் கூறி­யி­ருக்­கிறார்.

அதா­வது, தொல்­பொருள் இடத்தை தொல்­பொருள் சின்­ன­மாக பாது­காக்க வேண்டும் என்­பதே அவ­ரது கருத்தின் சுருக்கம். தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் இதே கருத்தை முன்­வைத்­தி­ருந்­தனர்.

ஆனால், தொல்­பொருள் இடத்தில் விகாரை அமைத்து பாது­காப்­பது தான் முறை என்று தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு பொறுப்­பு­வாய்ந்த கலா­சார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க கூறி­யி­ருக்­கிறார்.

அவரைப் போன்­ற­வர்கள், இந்த விவ­காரம் அர­சி­யல்­வா­தி­களால் அர­சி­ய­லாக்­கப்­ப­டு­கி­றது என்று குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் செயற்­பா­டு­களின் பின்னால் அர­சியல் இருக்­கி­றது. அது உள்­நோக்­கத்­துடன் செயற்­படும் போது, அர­சியல் ரீதி­யாக செயற்­படும் போது, அதற்கு எதி­ரான அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் என்ன தவறு இருக்கப் போகி­றது?

அத்­துடன், குருந்­தூர்­ம­லையில் சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்­தி­ருக்­க­வில்லை என்றும், அது தமிழ் பௌத்­தத்தின் எச்சம் என்றும் கூறி­யி­ருக்­கிறார் வடக்கு கிழக்கு பிர­தம சங்­க­நா­யக்கர் சியம்­ப­லா­கஸ்­வெவ விம­ல­சார நாயக்க தேரர். இது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய கருத்து.

இலங்­கையில் தமிழ் பௌத்தம் இருந்­த­தற்கு பல சான்­றுகள் இருக்­கின்­றன.

ஆனால், இரா­வ­ணனை சிங்­கள மன்னன் என்றும், தமிழ் பௌத்தம் இருந்­த­தில்லை, சிங்­கள மன்­னர்கள் தமிழ்­நாட்டில் திரு­மணம் செய்து கொண்ட பெண்கள் வழி­ப­டு­வ­தற்­காக கட்­டப்­பட்­டவை தான், சைவ ஆல­யங்கள் என்றும், வர­லாற்றுப் புரட்­டு­களை முன்­வைத்து வரு­கின்­றனர் சரத் வீர­சே­கர, மேர்வின் சில்வா போன்­ற­வர்கள்.

13இற்கு எதி­ரான அர­சியல் எவ்­வாறு தெற்கின் அர­சி­ய­லில கூர்­மைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதோ, அதற்கு இணை­யாக குருந்­தூ­ர­மலை விவ­கா­ரமும் தெற்கின் அர­சி­யலில் மையப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

குருந்து விகாரை பற்­றிய ஒரு நூல் அண்­மையில் பேரா­சி­ய­ரியர் சன்ன ஜய­சு­ம­ண­வினால் வெளி­யி­டப்­பட்­டது. கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வுக்கு நெருக்­க­மான அவரின் ஊடாக அர­சி­ய­லுக்கு வந்­த­வர்கள் எல்லாம் இப்­போது தெற்கின் இந்த இரண்டு கூர்மைப்படுததப்பட்ட அரசியல் முனைப்புகளிலும் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கூர்மையான இரண்டு வாள்களையும் தோற்கடிப்பது, ரணில் விக்ரமசிங்ககவினால் இயலக் கூடிய காரியமாகத் தெரியவில்லை.

இதில் எந்த வாளைக் கையில் எடுத்தாலும் அது அவரையே காயப்படுத்தும்.

குருந்தூர்மலை விவகாரத்தை தீர்த்து வைத்தல் என்பது இப்போது அடுத்த கட்டத்துக்குச் சென்று விட்டது.

மாறாத புண்ணாக அது மாறி விட்டது. இனி அதற்கு வாழ்நாள் முழுவதும் மருந்திட்டுக் கொண்டிருக்க வேண்டும். அல்லது. அந்தப் புண் உள்ள உறுப்பை அறுத்து விட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க அப்படியொரு அறுவைச் சிகிச்சை நிபுணரல்ல.

அவர் எப்போதும் காலத்தை இழுத்தடித்துப் பழக்கப்பட்டவர் என்பதால், காலம் பூராவும் புண்ணுக்கு மருந்திடுவதைத் தான் சிறந்த தெரிவாக கருதுவார்.

கார்வண்ணன்

Share.
Leave A Reply