கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் நேற்றிரவு இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், முன்னே சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் சாரதி (44 வயது) உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வரக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.