2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப்பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது.
இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பாஷானி முனசிங்க நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிதினி தில்சரணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்பிரிய பொறியியல் தொழிநுட்ப பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
முல்லைத்தீவு மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த இந்த மாணவி வர்த்தகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
யாழ்.இந்துக் கல்லூரி சாதனை
க.பொ.த உயர்தர 2022 ஆம் ஆண்டுக்கான பரீட்சையில், இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 33 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்திசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன் யாழ்.இந்துக் கல்லூரி மாவட்ட மட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் ஐந்து இடங்களையும், பொறியியல் பிரிவில் முதல் ஆறு இடங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறுகள்
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் யாழ்.பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 12 பேரும், விஞ்ஞானப் பிரிவில் 3 பேரும், வர்த்தகப் பிரிவில் ஒருவரும் 3 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்றுள்ளனர் என்று ஹாட்லிக் கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் சாதனை
உயர்ப் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவ, பொறியியல் பீடங்களிற்கு 25 மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.