இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சேனல் 4 இன்று அதிகாலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோவில் ஈஸ்டர் தாக்குதலுடன் ராஜபக்ஸ குடும்பம் உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ஸ வெற்றி பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டடதாக சேனல்-4 ஆவணப்படம் கூறுகிறது.
சேனல்-4 ஆவணப்படம் – சாட்சிகள் யார்?
ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய அசாத் மௌலானா இந்த வீடியோவின் பிரதான சாட்சியாளராக விளங்குகின்றார். அசாத் மௌலானா தற்போது சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிய வருகின்றது.
அத்துடன், வெள்ளை வேன் விவகாரத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதானியான நிஷாந்த சில்வா கந்தப்பா, ஊடகவியலாளராக பேட்ரிகா ஜென்ஸ், கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், முன்னாள் ராஜதந்திர அதிகாரி சரத் கொன்காகே, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் இந்த வீடியோவில் சாட்சி வழங்கியுள்ளனர்.
ராஜபக்ஸ குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர நாட்டிற்குள் பாதுகாப்பற்ற நிலையொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற விதத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், தௌஹித் ஜமாத் அமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விவகாரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அசாத் மௌலானா அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அத்துடன், ராஜபக்ஸ குடும்பத்தின் குற்றங்கள் என அடையாளப்படுத்தி மேலும் சில தகவல்களையும் சேனல் 4 வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஊடகவியலாளர் பேட்ரிகா ஜென்ஸ் மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரன் லால் விக்ரமதுங்க ஆகியோர் இந்த வீடியோவில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம், சேனல் 4 ஆவணப் படம் எழுத்து மூலம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சேனல் 4 தொலைக்காட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே நிராகரித்துள்ளதாக சேனல் 4 ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்கு கொண்டு வர நாட்டில் பாதுகாப்பற்ற நிலைமையொன்றை ஏற்படுத்த வேண்டும் என ராஜபக்ஸ குடும்பம் எண்ணியதா எனவும், தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதா எனவும் சேனல் 4, முன்னாள் ராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவிடம் வினவியுள்ளது.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளது.
தௌஹித் ஜமாத் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படும் காலப் பகுதியில் தான் மலேசியாவில் தங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் குண்டுவெடிப்பு நடத்தப்படும் தருணத்தில் தான் இந்தியாவில் இருந்ததாகவும் அவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு பதிலளித்துள்ளார்.
அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுப்பு
இந்த ஆவணப் படத்தில் தன் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தன்னுடன் இருந்த அசாத் மௌலானா போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான பொறுப்பை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். எனினும், அசாத் மௌலானா இந்த சம்பவத்தை வேறு திசையை நோக்கி நகர்த்த முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் காணப்படும் சர்வதேச சக்திகளை அசாத் மௌலானா காப்பாற்ற முயற்சிக்கின்றாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தான் சிறைச்சாலையில் இருந்ததாகவும், குறுகிய காலத்தில் தற்கொலை குண்டுதாரியை தயார்படுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.
குறுகிய காலத்தில் இவ்வாறான ஒன்றை தயார்படுத்த முடியாது. எதிர்கட்சித் தலைவர் கூறுகின்ற விதத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதேபோன்று அசாத் மௌலானா தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
உள்நாட்டு விசாரணை தோல்வியடைந்துள்ள தருணத்தில், சர்வதேச விசாரணைகளில் மாத்திரமே உண்மையை கண்டறிய முடியும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறினார்.
இந்த விடயத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் அரசாங்கத்திற்கு, இதற்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த விடயத்தை மூடி மறைக்காது, உள்நாட்டு மற்றும் சர்வதேசங்களை இணைத்ததாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் இந்த அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதா என கண்டறியப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ கருத்து
ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்சவும் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தொடங்கிய பிறகு, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஓராண்டுக்கு முன்பாக நடைபெற்ற பிரதேச சபைத் தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம். ஆகவே, தேர்தல் வெற்றிக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என அவர் கூறினார்.
விசாரணைக் குழு – இலங்கை அரசு அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சேனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் இடம் பெற்ற அம்சங்கள் தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
“சேனல்-4 குழுவினர் இலங்கை வந்து ஆதாரங்களை தர முடியாவிட்டாலும், அங்கிருந்த படியே ஜூம் மூலமாக ஆதாரங்களை அளிக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
சேனல் 4 ஆவணப்படம் – கொழும்பு பேராயர் கருத்து
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சேனல்-4 ஆவணப்படம் குறிப்பிடும் விஷயங்களை விசாரணைக்குப் பிறகே ஏற்போம் என்று கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார். எந்தவொரு விசாரணையும் இல்லாமல் அந்த ஆவணப்படத்தை அப்படியே ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
சேனல்-4 ஆவணப்படத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முறையான, வெளிப்படையான விசாரணை நடப்பதை உறுதி செய்ய நாட்டு மக்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடையும் போது, சேனல்-4 போன்ற சர்வதேச ஊடகங்களின் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது. சில உண்மைகளை கண்டுபிடிக்க வேண்டியிருப்பதாக அது கூறியுள்ளது” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், “சேனல்-4 ஆவணப்படம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான விஷயங்கள் தொடர்பாக நேர்மையான, வெளிப்படையான முழுமையான விசாரணையைத் தொடங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே விசாரித்த குழுக்கள் கண்டுபிடித்த விவரங்கள் மீது முறையான விசாரணை நடத்தப்படவில்லை. தற்போதைய அரசும் சரி, முந்தைய அரசும் சரி, நாடாளுமன்றம் நியமித்த குழு அளித்த பரிந்துரைகள் மீது அலட்சியமே காட்டியுள்ளன. சேனல்-4 ஆவணப்படத்தில் உள்ள விவரங்கள் தன்னிச்சையான சர்வதேச குழு மூலம் விசாரணையில் தெரியவந்தவை.
குற்றவியல் புலனாய்வுத் துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரிகள் மீண்டும் உள்நாட்டுக் குழுவில் இடம் பெறவேண்டும். அந்தக் குழு சர்வதேச புலனாய்வுக் குழுவுக்கு உதவியாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
பிபிசி தமிழ்: