இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குவதற்காகவே சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாகினார்கள்.செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை அடிப்படையாகக் கொண்டு சந்தேக பார்வையில் ஒரு தரப்பினரை குற்றவாளிகளாக்கி பாதிக்கப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை தூண்டி விடுவது வெறுக்கத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் பாரதூரமான விடயத்தை குறிப்பிட்டு விட்டு தற்போது நீதிமன்றத்தின் பின்னால் மறைந்துள்ளார்.
ஆகவே அவரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோண் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை தொடர்ந்து மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்துகள் தோற்றம் பெற்றுள்ளன.
விசாரணைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு பொறுப்புடன் சபைக்கு இவ்விடயங்களை குறிப்பிடுகிறேன்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் 2014.06.24 ஆம் திகதி ‘இஸ்லாமிய இராச்சியம் ‘தொடர்பான அறிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து இலங்கையர்கள் ஒருசிலர் அடிப்படைவாத சிந்தனைகளுக்கு ஈர்க்கப்பட்டார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் இஸ்லாமிய இராச்சியத்துக்காக சிரியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். அல்லது அவரவர் உள்ள நாடுகளில் இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குமாறு குறிப்பிட்டார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 32 இலங்கையர்கள் துருக்கி ஊடாக சிரியா சென்றுள்ளார்கள். இவ்வாறான நிலையில் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ’நாட்டில் அடிப்படைவாத தாக்குதல் ‘இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றியுள்ளார்.
இதன் பின்னர் 2016.06.24 ஆம் திகதி ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையுடைய மொஹமட் மல்லவி என்பவ் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானிடம் அடிப்படைவாதம் தொடர்பான போதனைகள் அடங்கிய காணொளிகள் அடங்கிய பென்ரய் வழங்கி அவரை தனது அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்.
மேற்குலகத்தவர்கள், கத்தோலிகர்கள் மற்றும் சிலை வழிபாட்டை மேற்கொள்பவர்கள் ஆகியோரை படுகொலை செய்து இஸ்லாமிய மதத்தை முன்னேற்றி இஸ்லாமிய இராச்சியத்தை உருவாக்குவதற்காக 2017.07.09ஆம் திகதி அடிப்படைவாதி சஹ்ரான் உட்பட 14 பேர் அநுராதபுரத்தில் ஒன்றிணைந்து முதல் தடவையாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் காணொளி ஊடாக உறுதிப்பிராணம் செய்துள்ளார்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய தினத்தில் அதாவது 2019.04.20 ஆம் திகதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாத குழுவினர் கல்கிஸ்ஸ பகுதியில் இருந்தவாறு ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புக்கு உறுதிப்பிரமாணம் செய்துள்ளார்கள். இதன்போது இஸ்லாம் இராச்சியத்துக்காக உயிர் தியாகம் செய்வதாக உறுதிப் பிரமாணம் செய்து காணொளி வெளியிட்டுள்ளார்கள்.இந்த காணொளியில் தமிழ் மொழியிலான மூல இறுவட்டினையும்,சிங்கள மொழிபெயர்ப்பிலான நகல் இறுவட்டினையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தரப்பினர் ஏன் தாக்குதலை மேற்கொண்டோம் என்று தெளிவாக குறிப்பிட்டு காணொளி வெளியிட்டுள்ள நிலையில் தற்போது பொறுப்புதாரி தொடர்பில் ஒருவருக்கொருவர் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்வது அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஏழ்மை நிலை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
பூகோள அரசியல் நிலைப்பாட்டை கவனத்திற் கொண்டு செனல் 4 விவகாரத்தை ஆராய வேண்டும்.பொய்யான தகவல்கள் வெகுவிரைவில் பிரபல்யமாகும் என்பதற்கு பல சம்பவங்கள் சான்றாக உள்ளன.கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்து தூதரகத்தின் பெண் சேவையாளர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.இறுதியில் அந்த குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டது.செனல் 4 நிறுவனம் இலங்கை தொடர்பில் கடந்த காலங்களிலும் அடிப்படையற்ற வகையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய 2019.05.மாத காலப்பகுதியில் 09 பேர் அடங்கிய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை தெரிவுக்குழு 24 தடவைகள் கூடியது .55 பேரிடமிருந்து சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.1500 பக்கங்களை உள்ளடக்கிய வகையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.66 ஆயிரம் பக்கங்களை உள்ளடக்கிய வகையில் ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அதே போல் சி.ஐ.டி.மற்றும் டி.ஐ.டி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஏ.எப்.பி நிறுவனம் மேற்கொண்ட அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து விசேட கவனம் செலுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதற்கமைய உரிய காணொளியை வெளியிட்ட தரப்பினர் குறிப்பிட்ட கருத்துக்களை நிகழ்நிலை ஊடாக பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான பின்னணியில் ஒவ்வொரு தரப்பினரும் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் மீது சந்தேக பார்வையை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.
தவறான கருத்துக்களை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை தூண்டிவிடக் கூடாது.சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் குற்றவாளிக்க முடியாது.தற்கொலை குண்டுத்தாரிகள் வாக்குமூலம் வழங்கியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவது கவலைக்குரியது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமாதிபர் பாரதூரமான விடயத்தை குறிப்பிட்டு சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றார்.அவர் தற்போது நீதிமன்றத்தின் பின்னால் மறைந்துள்ளார்.ஆகவே அவரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.ஆகவே இந்த உணர்வுபூர்வமான விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) Virakesari