வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கண்டறிவதற்கு உதவுதல் மற்றும் உண்மையை வெளிப்படுத்தல் ஆகிய ஆணைகளை செயற்படுத்துவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே அடையப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழு, இது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழப்பதற்கு வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவினால் நாடுகளின் நிலைவரம் குறித்த விரிவான அறிக்கை நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் கடந்த 2022 மேமாதம் 13 ஆம் திகதி முதல் இவ்வருடம் மேமாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவினால் ஆராயப்பட்ட சம்பவங்கள், மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் விபரங்களும், செயற்பாட்டுக்குழுவி;ன் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்குறிப்பிட்ட ஒருவருடகாலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளின் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நிலைவரம் குறித்து ஆராய்ந்திருக்கும் இப்பணிக்குழு, ஏனைய விசேட அறிக்கையாளர்களுடன் இணைந்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தி 35 ‘குற்றச்சாட்டுக் கடிதங்களை’ இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்குப் புறம்பான சட்டமூலங்கள், சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய 6 கடிதங்களையும் இப்பணிக்குழு இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது.
அவ்வறிக்கையில் கடந்த ஆண்டு மேமாதம் 13 ஆம் திகதி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கையில் பதிவாகியிருந்த வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களின் எண்ணிக்கை 6264 ஆகக் காணப்பட்டதாகவும், இவ்வாண்டு மேமாதம் 12 ஆம் திகதி தமது அறிக்கையிடல் பணிகள் நிறைவடையும் வேளையிலும் அந்த எண்ணிக்கை மாற்றமின்றிக் காணப்பட்டதாகவும் ஐ.நா பணிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான மீறல்கள் மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துத் தீவிர கரிசனைகொள்வதாக ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து அனைவரையும் பாதுகாத்தல் தொடர்பான பிரகடனத்தின் 13 ஆம் சரத்தின் 3 மற்றும் 5 ஆம் பிரிவுகளை மேற்கோள் காண்பித்துள்ள அக்குழு, அதனூடாக வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாட்டாளர்கள், சாட்சியாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கண்டறிவதற்கு உதவுதல் மற்றும் உண்மையை வெளிப்படுத்தல் ஆகிய ஆணைகளை செயற்படுத்துவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே அடையப்பட்டுள்ளது என்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கு வழிவகுத்திருப்பதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.
(நா.தனுஜா) Virakesari