இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஷாருக் கான் அட்லீயுடன் கைகோர்த்துள்ளது அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. அதோடு, நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி எனப் பலரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது இந்திய சினிமா ரசிகர்களின் ஆவலை அதிகப்படுத்தியது.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஜவான் எப்படி இருக்கிறது? தமிழ் இயக்குநருடன் ஷாருக் கான் கைகோர்த்துள்ளது அவருக்குப் பலன் அளித்துள்ளதா?
ஜவான் படத்தின் கதை என்ன?
தன் மீது ஊழல் புகார் தெரிவித்த ராணுவ வீரர் விக்ரம் ரத்தோரை (ஷாருக் கான்), ராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் காளி (விஜய் சேதுபதி) கொலை செய்கிறார்.
விளம்பரம்
அதோடு விக்ரம் ரத்தோரின் மனைவியான தீபிகா படுகோன் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். தீபிகாவிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவரது மகன் ஆசாத் (ஷாருக் கான்) பின்னாளில் சிறைத்துறை உயரதிகாரி ஆகிறார்.
சிறையில் தண்டனை பெற்ற பெண்களின் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஆசாத் (ஷாருக் கான்) கடத்தலில் ஈடுபடுகிறார்
சிறையில் தண்டனை பெற்ற பெண்களின் கதைகளைக் கேட்டு அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக ஆசாத் கடத்தலில் ஈடுபடுகிறார். அதன்மூலம் அரசை மிரட்டித் தனது காரியங்களைச் சாதிக்கிறார்.
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதிக்கும் ஷாருக் கானுக்கும் இடையே மோதல் வருகிறது. அந்த மோதலின் முடிவு என்ன ஆனது? தனது பெற்றோர்களைக் கொன்ற விஜய் சேதுபதியை பழிவாங்கினாரா?
இதுதான் ஜவான் திரைப்படத்தின் கதை.
அட்லீ மீதான விமர்சனத்திற்கு ஜவான் வலு சேர்த்துள்ளதா?
நல்ல ப்ளாஷ்பேக் காட்சியோடு தொடங்கும் படம் அதே வேகத்தில் சென்று முட்டி நிற்பதாக தினமணி விமர்சித்துள்ளது.
சிறைத் துறை அதிகாரியாக சிறைக் கைதிகளுடன் சேர்ந்தே யாருக்கும் தெரியாமல் மெட்ரோ ரயிலை கடத்துவது, மத்திய அமைச்சரைக் கடத்துவது என்று தொடர் கடத்தலில் ஈடுபடுகிறார் ஷாருக் கான். அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக வரும் நயன்தாரா.
ஏற்கெனவே இயக்குநர் அட்லீயின் கதை உருவாக்கம் குறித்துப் பல விமர்சனங்கள் உள்ளன. அந்த விமர்சனங்களுக்குத் தற்போது மேலும் வலு சேர்த்துள்ளார் என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
“திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சி வரும்போதும் அதை முன்பே ஏதோவொரு படத்தில் பார்த்த நினைவை திரைக்கதை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த மணி ஹெய்ஸ்ட் இணையத் தொடர், பிகில், மங்காத்தா ஆகியவை சட்டென நினைவுக்கு வராமல் இல்லை,” என்று தினமணி விமர்சித்துள்ளது.
படத்தில் நம்ப முடியாத, லாஜிக் மீறலான பல காட்சிகள் உள்ளன என்றும் அது கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தில் நம்ப முடியாத, லாஜிக் மீறலான பல காட்சிகள் உள்ளன என்றும் அது கதையின் மீதான நம்பகத்தன்மையைக் குலைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
“விவசாயிகளின் கடனை ரத்து செய்வதற்காக மெட்ரோ ரயிலைக் கடத்துவது, மருத்துவமனைகளை சரி செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைக் கடத்தி சில மணிநேரங்களிலேயே நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை தரப்படுத்துகிறார்.
இப்படி லாஜிக் மீறலான பல காட்சிகள் கதை மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கிறது,” என்று கூறுகிறது தினமணி விமர்சனம்.
ஆனால், “அதீதமாக பகுப்பாய்வு செய்யப்படும்போது ஜவான் படத்தில் குறைகள் இருக்கும். இருப்பினும் திரையரங்கில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க ஏற்ற ஒரு நல்ல திரைப்படம்,” என்று இந்தியா டுடே தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜவான் படத்தில் மணி ஹெய்ஸ்ட் சாயல் தெரிகிறதா?
“ஜவான் திரைப்படத்தில், மணி ஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம், டார்க் நைட் ரைசஸ், தி லயன் கிங் போன்றவற்றின் சாயல் தெரிவதாக” டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளையில், ஆக்ஷன் திரைப்படங்களை யார் அதிகம் ரசிக்கிறார்களோ இல்லையோ ஷாருக் கான் அவரது ஆக்ஷன் காட்சிகளை ரசித்துச் செய்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.
“பாலிவுட் சூப்பர்ஸ்டார், தென்னிந்தியாவின் பிரபல இயக்குநரான அட்லீயுடன் இணைந்து தனக்கென புதிய எல்லையை வகுத்துள்ளார். இவர்களின் இந்தக் கூட்டணி, ஓர் உணர்வுபூர்மான, ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த படைப்பை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது,” என்று ஜவான் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
பதான் படம் ஷாருக் கானின் ஸ்டைல் நிறைந்து காணப்பட்ட வேளையில், ஜவான் திரைப்படம் கதை மற்றும் நோக்கம் நிறைந்ததாக எடுக்கப்பட்டுள்ளது.
“பதான் படம் ஷாருக் கானின் ஸ்டைல் நிறைந்து காணப்பட்ட வேளையில், ஜவான் திரைப்படம் கதை மற்றும் நோக்கம் நிறைந்ததாக எடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை, மதத்தை வைத்து நடக்கும் அரசியல் என படத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் கைத்தட்டல்களைப் பெற்றுள்ளன,” என்றும் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் கதை நகைச்சுவை, இழப்பு, பழிவாங்கல் எனப் பல கோணங்களில் சென்றாலும், அவற்றுக்குத் தேவையான வசனங்களைத் தருவதில் வசனக் குழு சரியாகச் செய்துள்ளது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
அதோடு, “படத்தில் எத்தனை ஷாருக் கான் கதாபாத்திரங்கள் இருந்தாலும் சரி, அதிலுள்ள பெண் பாத்திரங்கள் நாயகனுக்கு இரண்டாம் பட்சமாக வைக்கப்படவில்லை. அவர்களும் நாயகனுக்கு நிகராக பங்கு வகித்துள்ளனர்,” என்றும் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
ஷாருக் கானுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான சுருக்கமான காதல் காட்சிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சஞ்ஜிதா பட்டாச்சார்யா, கிரிஜா ஓக், லேஹார் கான் ஆகியோரின் பட்டாளம் கதையில் சிறப்பாகப் பங்களித்துள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
ஆனால், படத்தில் ஷாருக் கான் தவிர மற்ற கதாபாத்திரங்களுக்குப் படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லையென்றும் அவர்கள் அனைவருமே ஷாருக் கானின் பாத்திரத்தை உயர்த்திக் காட்டவே பயன்பட்டுள்ளதாகவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
ஜவானை தாங்கி நிற்கும் அனிருத் இசை
பாதாளத்தில் இருக்கும் கதைக்குப் பின்னணி இசை கொடுத்தே அனிருத் தூக்கி விட்டிருப்பதாகவும் ஒரு திரை விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டிய இயக்குநர் அதைத் தவிர்த்து பில்டப் காட்சிகளுக்கு மெனக்கெட்டுள்ளதாக தினமணி விமர்சிக்கிறது.
“அடுத்தடுத்த காட்சிகள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் உள்ளதாகவும் முதல் பாதியில் தோன்றும் 10 நிமிடங்களுக்கு ஒரு பாடல், தேவையற்ற ப்ளாஷ்பேக் காட்சிகள், சீரற்ற திரைக்கதை ஓட்டம் என ரசிகர்களின் பொறுமை கடுமையாக சோதிக்கப்படுவதாகவும்,” தினமணி விமர்சித்துள்ளது.
தந்தை கதாபாத்திரத்திலும் மகன் ஆசாத் கதாபாத்திரத்திலும் ஷாருக் கான் மிரட்டலான நடிப்பைக் கொடுத்து தன்னை நிரூபித்துள்ளதாக தினமணி பாராட்டியுள்ளது. அதேபோல், அவருக்கு இணையாக நயன்தாராவும் மாஸ் காட்டியிருப்பதாக தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “விஜய் சேதுபதிக்கு காமெடியுடன் கூடிய வில்லத்தனம் உதவியிருக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் வசனங்கள் ஒட்டுமொத்த படத்தின் நகைச்சுவைக்கான ஆறுதல்,” என்று தினமணி கூறுகிறது.
படத்தை ஒட்டுமொத்தமாக நகர்த்திக் கொண்டு செல்வது அனிருத் இசைதான் என்று படத்தின் இசையைப் பாராட்டியுள்ள தினமணி, “பாதாளத்தில் இருக்கும் கதைக்குப் பின்னணி இசை கொடுத்தே அனிருத் தூக்கி விட்டிருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.
மேலும், “ஒளிப்பதிவுப் பணிகளும் படத்தொகுப்பும் படத்தை ரசிக்க வைக்கின்றன. ஷாருக் கான், நயன்தாராவின் ஸ்லோமோஷன் காட்சிகள் கமர்ஷியலாக கை கொடுத்திருக்கின்றன. அதிரடியாக இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் படத்தைத் தாங்கி நிற்கின்றன,” என்றும் தினமணி கூறியுள்ளது.