திரையுலகில் சிலருக்கு உதவ நினைத்து கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்ட கண்ணதாசன், அந்த கடனையும் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படடார்.
தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத பல தத்துவ பாடல்களை கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன். மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள், சோகம், அழுகை, விரக்தி, காதல் உள்ளிட்ட பல தத்துவங்களை தனது பாடல்கள் மூலம் ஒளிக்க செய்த கண்ணதாசன், தனது வீடு ஜப்திக்கு வந்த போதும் அதை பாடல்கள் மூலம் அருமையாக வெளிக்காட்டியவர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மை.
பாடல் ஆசிரியராக மட்டுமல்லாமல், திரைக்கதை ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன், சினிமா தயாரிப்பில் இறங்கியபோதே அவரை சுற்றி கடன் சூழ்ந்துகொண்டது.
அதேபோல் திரையுலகில் சிலருக்கு உதவ நினைத்து கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்ட கண்ணதாசன், அந்த கடனையும் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படடார்.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சோகத்தில் இருந்த கண்ணதாசனுக்கு சிவாஜியின் பாவ மன்னிப்பு படத்தில் பாடல் எழுத அழைப்பு விடுக்கப்பட்டது.
பீம்சிங் இயக்கிய இந்த படத்தில், நாயகன் சந்தோஷம் துக்கம் இரண்டையும் கலந்து பாடுவது போல் இந்த பாடல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த நேரத்தில் கண்ணதாசன் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்துவிட்டதாக தகவல் வந்தது.
இதை கேட்டு மனமுடைந்த கண்ணதாசன் அப்போது சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் என்ற பல்லவியை எழுதியுள்ளார்.
அதே போல் அந்த பாடலின் சரணத்தில் அவர் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொள்வது போல், ‘காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்’ என எழுதியுள்ளார்.
பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், பதட்டத்துடன் அங்கிருந்து புறப்பட்டதால் அங்கிருந்த அனைவருக்கும் என்ன காரணம் என்று புரியவில்லை.
இதில் சந்தேகப்பட்ட எம்.எஸ்.வி மட்டும் காரை எடுத்துக்கொண்டு கண்ணதாசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. ‘என்ன கவிஞரே.
இப்படி ஒரு சூழ்நிலையிலா பாட்டு எழுத வந்தீங்க?’.. என வருத்தத்துடன் எம்.எஸ்.வி கேட்க, கண்ணதாசன் கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும். தனிமையில் மட்டுமே அழ வேண்டும்.
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என சொல்வார்கள்.. தனியாக சிரித்தால் பைத்தியம் என சொல்வார்கள்’ என சிரித்துக்கொண்டே தத்துவம் பேசியுள்ளார் கவியரசர்.