இன்றுமுதல் பாஜகவில் இருந்தும், அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக – அதிமுக இடையேயான வார்த்தை மோதல் போக்கு கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜக இல்லை எனவும் அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருந்த அதிமுக தலைவர்கள் குழு, இபிஎஸ்ஸையும் சந்தித்து பேசி இருந்தது.

இந்நிலையில், சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (செப். 25) நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியன.

அந்தவகையில், ’பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக, திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு அதிமுக மீதும் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீதும் அவதூறாகப் பேசியும் எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும் மதுரையில் அதிமுக நடத்திய பொன்விழா எழுச்சி மாநாட்டையும் பாஜக சிறுமைப்படுத்தியுள்ளது. தவிர, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

இந்தச் செயல் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக இன்றுமுதல் பாஜகவில் இருந்தும், அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமானதாகத் தீர்மானிக்கப்படுகிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேட்டியளித்த அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமியும் இதை உறுதி செய்துள்ளார்.

Share.
Leave A Reply