] ஐதராபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி இருக்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் கான்வே 32 ரன்களும் வில்லியம்சன் 70 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 51 ரன்களும், கேப்டன் டாம் லாத்தம் 53 ரன்களும், டேரல் மிச்சல் 48 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் சிஎஸ்கே வீரர் மிச்சல் சாண்ட்னர் 36 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் தொடக்கத்தில் மூன்று ஓவர்கள் வரை நியூசிலாந்து ஒரு ரன் கூட எடுக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 12 ரன்களும், மேக்ஸ் தாவுத் 16 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியின் நட்சத்திர வீரர் பேஸ் டே லீட்18 ரன்கள் தான் எடுத்தார். எனினும் காலன் அக்கர்மென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் சேர்த்தார்.
அவர் ஆட்டம் இழந்தவுடன் நெதர்லாந்து அணி சரிவை நோக்கி சென்றது. எனினும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 30 ரன்களும், சைபிராண்ட் 29 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தலைப்பில் சிஎஸ்கே வீரன் மிட்செல் சாட்னர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் உலககோப்பை போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
நியூசிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற மிட்செல் ஷார்ட்நர் ஜடேஜா பந்து வீசுவதை கவனித்து தாம் அதை போல் செயல்பட்டதாக கூறினார்.