13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்கிய 7வது லீக் போட்டியில் இங்கிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
இந்நிலையில், மதியம் 2 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணியில் பாதும் நிஸ்ஸங்க – குசல் பெரேரா தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், ஹசன் அலி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்த குசல் பெரேரா பூஜ்ஜிய ரன்னுடன் நடையைக் கட்டினார்.
பின்னர் பாதும் நிஸ்ஸங்க உடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அரைசதம் அடித்த நிஸ்ஸங்க 61 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடித்து 51 ரன்னுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சதீர சமரவிக்ரம உடன் குசல் மெண்டிஸ் ஜோடியில் இணைந்துள்ளார்.
இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சிக்சருடன் சதம் விளாசினார். 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட குசல் மெண்டிஸ் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரித் அசலங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
களத்தில் இருந்த சதீர சமரவிக்ரம உடன் தனஞ்சய டி சில்வா ஜோடி அமைத்து விளையாடி வருகிறார். தற்போது இலங்கை அணி 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
சிறப்பாக ஆடிய சமரவிக்ரம அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஆடிய தனஞ்ஜெயா 25 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஷனகா 12 ரன்கள் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த சமரவிக்ரம சதம் அடித்தார்.
இருப்பினும் சமரவிக்ரம 108 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த தீக்ஷனா டக் அவுட் ஆனார். அடுத்து பதிரனா களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், துனித் 10 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து இலங்கை அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்களையும், ஹரிஸ் 2 விக்கெட்களையும், ஷாகின் அப்டிரி, நவாஸ், ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் பேட்டிங்
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷ்பீக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 10 ரன்களில் வெளியேறினார். இருவரது விக்கெட்டையும் தில்ஷன் மதுஷனகா வீழ்த்தினார்.
அடுத்ததாக ஷபீக் உடன் ரிஸ்வான் ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட் இழப்பை தடுத்ததோடு, நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய ஷபீக் அரை சதம் அடித்தார். இருவரையும் வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறினர்.
நிதானமாக ஆடிய ரிஸ்வான் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சற்று அதிரடியாக ஆடிய ஷபீக் சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் அணி 31.3 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ஷபீக் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். அடுத்ததாக ஷகீல் களமிறங்கி கம்பெனி கொடுக்க, ரிஸ்வான் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 97 பந்துகளில் சதம் அடித்தார்.
சிறிது நேரத்தில் ஷகீல் 31 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அகமது பவுண்டரிகளாக விளாசினார். மறுமுனையில் ஆடிய ரிஸ்வான் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களிலே 345 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அகமது 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். ரிஸ்வான் 131 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
இலங்கை தரப்பில் மதுஷனகா 2 விக்கெட்களையும், தீக்ஷனா மற்றும் பதிரனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.