இஸ்ரேல் வறண்ட பூமியாக இருந்தாலும் அங்கு குறைந்த தண்ணீர் இருந்தாலும் விவசாயத்தில் உலகுக்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை ஒரு சர்வதேச பிரச்னையாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த சூழலுக்கும் இடையில் இஸ்ரேல் விவசாயத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அது மட்டும் வளரவில்லை. அந்தத் தொழில்நுட்பங்களை உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறது.
தன்னிச்சையாக இயங்கும் டிராக்டர்

வறட்சி, காலநிலை மாற்றம் என்று பல சவால்களை சந்தித்தாலும் விவசாயத் தொழில்நுட்பத்தில் இஸ்ரேல் வளர்ந்திருப்பதுபோல் வேறு எந்த நாடும் இல்லையென்றே சொல்லலாம்.

அடிப்படையிலேயே இஸ்ரேல் மலைகளும், பாலைவனமும் நிறைந்த ஒரு வெப்ப பூமி. அங்கு மிக மிக குறைந்தளவுதான் மழை இருக்கும். அதிகபட்ச மழையே 700 மி.மீதான்.

அதேபோல் சீரற்ற காலநிலை மற்றும் குறைந்த அளவிலான விவசாய நிலங்களை கொண்ட நாடு. அங்கு குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைப்பதே அரிது.

இதில் விவசாயத்துக்கு சொல்லவே வேண்டாம். அவர்கள் 75% கழிவு நீரை தான் மறுசுழற்சி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.

விவசாயத்தில் இஸ்ரேலின் தாரக மத்திரமே ‘Grow More with less Water’ என்பதாகும். இப்படி வளங்களே இல்லாத இஸ்ரேல்தான் இன்று விவசாயத்தில் தலை சிறந்து விளங்கி வருகிறது.
சொட்டுநீர்ப்பாசனம்

1948-ம் ஆண்டுகளில் வெறும் 74,000 ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், இன்று 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது.

இதற்குக் காரணம் தண்ணீரை முறையாகப் பயன்படுத்துவதே ஆகும். நம்ம ஊர் மாதிரி கால்வாய், ஏரி பாசனம் கிடையாது.

சொட்டு சொட்டாகத்தான் தண்ணீர் கொடுக்கிறார்கள். ஒரு செடிக்கோ, மரத்துக்கோ எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கணக்கிட்டு அதற்கேற்ப தண்ணீர் கொடுக்கிறார்கள். இதற்கு சொட்டுநீர் பாசன பிளாஸ்டிக் குழாய்களை கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள்.

இந்த சொட்டுநீர் தொழில்நுட்பம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதிலேயே தற்போது எவ்வளவு நேரம், எவ்வளவு தண்ணீர் பாயவேண்டும் என்ற ஆட்டோமேட்டிக் முறையும் வந்துவிட்டது. சொட்டுநீர் பாசனத்தை சீனா கண்டுபிடித்தாலும், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பரவலாக்கிய பெருமை இஸ்ரேலையே சேரும்.


சொட்டு நீர் பாசனம்

இஸ்ரேல் அதிகம் வெப்பம் நிறைந்த பூமி. வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை.

ஆனால், தாவரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரித்தால் நன்கு வளரும். பிரான்ஸ் நாட்டு தாவரவியலாளர் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் நிழல்வலைக் குடில் என்றழைக்கப்படும் பசுமைக்குடில். பசுமைக் குடிலுக்குள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்க முடியும்.

இன்னொன்று நோய் தாக்குதலும் குறைவு. குறைந்த இடத்தில் அதிக விளைச்சல் எடுத்துவிட முடியும். இந்தப் பசுமைக்குடில் விவசாய முறைதான் காய்கறி சாகுபடியில் இன்று பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக தக்காளி, மிளகாய், வெள்ளரி, மலர்கள் என்று செடி வகை காய்கறிகள், மலர்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக நர்சரி உருவாக்கத்தில் பெரும்பங்கு அளிக்கின்றன பசுமை வலைக்குடில்.


மண்ணில்லா விவசாயம்

மூடாக்கு

காய்கறி சாகுபடியில் மூடாக்கு என்றழைக்கப்படும் மல்ச்சிங்(mulching) தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

களைகளை கட்டுப்படுத்த இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிரதான பயிருக்கு கொடுக்கும் தண்ணீர், உரத்தை களைகள் எடுத்துக் கொள்வதால் பயிரில் விளைச்சல் குறைந்து விடுகிறது. இதைத் தடுத்து மகசூல் அதிகரிக்க இது உதவுகிறது.

இன்று போன் மூலம் பாசனம் செய்வதற்கு அடித்தளமிட்டதும் இஸ்ரேல்தான். உரங்களைத் திரவ வடிவில் பயிர்களுக்கு கிடைப்பதற்கு வழிவகுத்ததும் இஸ்ரேல்தான்.

மண்ணில்லா விவசாய முறை உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளைப் பரவலாக்கியது இஸ்ரேல் நாடு. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கும் முன்னோடியாக இருந்து வருகிறது இஸ்ரேல்.

மேலும் வளர்சிதை மாற்ற நுண்ணறிவு, பயிர் பாதுகாப்பு, உற்பத்தித்திறனுக்காக தாவர அடிப்படையிலான கலவைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வணிகமயமாக்கல் ஆகியவற்றை இஸ்ரேல் பயன்படுத்துகிறது.

இது மட்டுமல்லாது வறட்சி போன்ற காலங்களில் தாவரங்களுக்கு உதவுவதற்கும் தாவர வேர்களுடன் கூட்டுவாழ்வில் செயல்படும் ஒரு பூஞ்சையான mycorrhiza-ஐ அந்நாடு அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

விவசாய வளர்ச்சியில் இந்த பூஞ்சையின் செயல்பாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பெரிய பேரிடரை நோக்கி நாம் சென்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவை நிச்சயம் எதிர்க்காலத்தில் பயனுள்ளதாக இருக்க்கும்.


அறுவடை செய்யும் இயந்திரம்

அதேபோல் விவசாயம் செய்ய ஆள்கள் குறைந்து வருவதால் மனிதர்களை நம்பாமல் அனைத்தையும் இயந்திரமாக்கியுள்ளது இஸ்ரேல்.

தன்னிச்சையாக இயங்கும் டிராக்டர், களை எடுக்கும் ரோபோக்கள், அறுவடை செய்யும் ரோபோக்கள், தண்ணீர் தெளிக்கும் ட்ரோன்கள் என பல வேலைகளுக்கு அவர்கள் இயந்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

இதனால் வேலையும் எளிமையாகி செலவும் குறைவதாகவே இஸ்ரேல் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணியில் பயோடெக்னாலஜிக்கும் பங்கு உண்டு என்கிறார்கள் அவர்கள். இஸ்ரேலில் பயோடெக்னாலஜி வலுவாக உள்ளது. மகசூலை அதிகரிக்க இதை பயன்படுத்துகின்றனர்.

மேற்கண்ட தொழில்நுட்பங்களை சீனா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்திருந்தாலும், அதைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, சில பல மாற்றங்களைச் செய்து பரவலாக்கியது இஸ்ரேல்தான்.

அதனால் பல நாட்டு விவசாய விஞ்ஞானிகளும் இஸ்ரேலுக்கு ஒருமுறை சென்று பார்த்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேற்கண்ட தொழில்நுட்பங்கள் எல்லாம் இஸ்ரேல் தொழில்நுட்பம் என்றே விவசாயிகள் மத்தியில் இன்றும் பேசப்படுகிறது.


agri technology

உலக விவசாயத்தில் மற்றொரு பெரிய பிரச்னை தேனீக்களின் வீழ்ச்சி, நாம் மிகவும் திறமையான தேனீக்களை அழித்து வருகிறோம்.

ஆனால் இந்த சிக்கலையும் இஸ்ரேல் மிக சாமர்த்தியமாக கையாண்டுள்ளது. திறமையான தேனீக்களை அதிகப்படுத்த அவர்கள் வலுவான தொழில்நுட்பத்தை கையாள்கின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு தேனீ பெட்டியாவது இருக்க அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் விவசாயத்திலும் அவர்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.

தாவரங்களுக்கு அருகில் செல்லும் AI ரோபோக்கள் ஒவ்வொரு மலரையும் கண்காணித்து அதன் மகரந்த சேர்க்கை எந்த அளவில் உள்ளது என்பதை தீர்மானிக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மலர்களில் சரியாக மகரந்த சேர்க்கை நடக்கவில்லையெனில் அதில் தொழில்நுட்பம் மூலம் செயற்கை மகரந்த சேர்க்கை செய்யப்படுகிறது.

இந்த அளவுக்கு இஸ்ரேல் விவசாயிகள் தொலைநோக்கோடு விவசாயம் செய்து வருகின்றனர். தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இஸ்ரேல் விவசாயிகள் முன்னோடியாக இருந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply