காஸாவில் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது எனினும், தாக்குதலுக்கான நேரம் அல்லது விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், காஸாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 1.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை தெற்கு பகுதி ஊடாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்கமைய, ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் மூலமாகவோ அல்லது கால்நடையாகவோ குறித்த பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

காஸாவின் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளிலிருந்து அனைவரையும் வெளியேற்றுமாறு கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பிராந்தியத்துக்கு இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் ஹமாஸ் படையினர், பொதுமக்கள் மற்றும் படையினர் மீது தாக்குதல் நடத்த எல்லை தாண்டியதில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரண்டாயிரத்து 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தற்போதைய நெருக்கடி குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply