தெற்கு காசாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகம்
தெற்கு காஸாவுக்கு இஸ்ரேல் மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்காக பாதுகாப்பான பகுதியாக தெற்கு காஸா இருக்கக்கூடும் என்பதை இது குறிப்பதாக பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டவுசெட் கூறுகிறார்.
தெற்கு காஸாவில் இஸ்ரேலிய வான்வழி குண்டுவீச்சு தொடர்ந்தாலும், இந்த நடவடிக்கை மூலம் மொத்தமாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக பகுதி பகுதியாக சென்று தாக்குதலை நடத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ள இரான், இப்பிரச்னையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடக் கூடும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அமெரிக்கா மேலும் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தவே அமெரிக்கா இவ்வாறு செய்துள்ளது.
மறுபுறம், இஸ்ரேல் – லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கே இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதால் நிலைமையை மோசமாக்கியுள்ளது-
அரபு நாடுகளில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் முகாம்
அரபு நாடுகளில் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கெய்ரோ விமான நிலையத்தில் பேசும்போது, இந்த விவகாரத்தை பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்காக சமீபத்திய நாட்களில் ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்றதாக தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என்று கூறிய அவர், அதே நேரத்தில் மோதல் பரவுவதை தடுக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார். அமெரிக்க குடிமக்கள் உட்பட பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தூதரக பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.
“இஸ்ரேலுக்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும், இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும் உரிமை உள்ளது,” என்று அவர் கூறினார்.
மனிதாபிமான முயற்சிக்கு தலைமை தாங்குவதற்காக துருக்கிக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக டேவிட் சாட்டர்ஃபீல்ட்டை நியமித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்தியதரைக் கடலுக்கு செல்லும் விமான தாங்கி கப்பல்களை தற்போதைய சூழலை கட்டுப்படுத்துவதற்கானதாக பார்க்க வேண்டுமே தவிர ஆத்திரமூட்டலாக பார்க்கக் கூடாது என்றும் கூறினார்.
காஸா மீது தரைவழித் தாக்குதல்
காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.
காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது.
ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக் கைதிகளை மீட்பதே” நோக்கம் என்றார்.
காஸாவில் வசிக்கும் மக்களை வாடி காஸாவின் வடக்குப் பகுதி முழுவதையும் காலி செய்துவிட்டு தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இதனால் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், இவ்வளவு பெரிய அளவில் இடம் பெயர்வது “மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு” வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து தொடங்கிய இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் இதுவரை 2,000 பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
பூமியின் முகத்தில் இருந்து ஹமாஸை நிரந்தரமாக ஒழித்துவிடுவோம் என்றும் காசா இனி ஒருபோதும் மாறாது என்றும் இஸ்ரேலிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
காஸா மீது தரைவழித் தாக்குதல்
சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் கொடூரமான தாக்குதலில் 1,300 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹமாஸ் உறுப்பினர்கள் ஒருவரையும் விடாமல் அழிப்போம்,” என்று கூறினார்.
இதற்காக ஹமாஸுக்கு எதிராக “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” என்ற பெயரில் இஸ்ரேல் ஒரு போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கு முன், காஸாவில் இதுபோன்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” பிரசாரம் நடைமுறையில் எவ்வளவு தொலைவுக்கு சாத்தியமானது? மக்கள் தொகை அதிகமுள்ள காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் இதை நடத்துவது எவ்வளவு சவாலானதாக இருக்கும்? இஸ்ரேலிய தளபதிகள் தங்கள் நோக்கங்களை அடைய முடியுமா?
காஸா மீது தரைவழித் தாக்குதல்
காஸா பகுதியில் தரைப்படை நடவடிக்கைகள் என்பது நகரின் குறுகிய தெருக்களிலும் சந்துகளிலும் வீடு வீடாகத் தேடுதல் மற்றும் சண்டையிடுதல் என்பதாகும். இதன் காரணமாக பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கும்.
இதுவரை இஸ்ரேல் காஸா பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பணயக் கைதிகளை மீட்பது ஏன் சவாலானது?
சனிக்கிழமை நடந்த தாக்குதலின்போது ஹமாஸ் ஆயுதக் குழுவினால் பிடித்துச் செல்லப்பட்ட 150 பணயக் கைதிகளை மீட்பது ராணுவத்தின் மற்றொரு முக்கியமான பொறுப்பாக உள்ளது. அவர்கள் காஸாவில் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஹரேசி ஹலேவி, ஹமாஸை வேரறுப்பதாக சபதம் செய்து அதன் அரசியல் தலைவரை குறிவைத்து காஸாவில் தாக்குதல் நடத்தினார்.
ஆனால் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகளாக ஹமாஸின் ஆட்சிக்கு சாட்சியாக இருந்த காஸா முற்றிலும் மாறும் என்று நம்பப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவ வானொலியுடன் தொடர்புடைய ராணுவ ஆய்வாளர் அமீர் பார் ஷாலோம் பேசியபோது, “இஸ்ரேல் ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் அழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.
ஏனென்றால் அதன் பின்னணியில் உள்ள சிந்தனை, மதரீதியாக ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய தாக்குதல் நிச்சயமாக இந்த அமைப்பை மிகவும் பலவீனப்படுத்தும். எப்பேற்பட்ட பணியையும் மேற்கொள்ளும் அதன் திறன் அழிக்கப்படும்,” என்றார்.
நரகமாக மாறி வரும் காஸா: இஸ்ரேலின் இறுதிக்கட்ட தாக்குதல் எப்படி இருக்கும்?
இந்த நோக்கம் மிகவும் எதார்த்தமானது. இதுவரை, இஸ்ரேல் ஹமாஸுடன் நான்கு போர்களை நடத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஹமாஸை முற்றிலுமாக ஒடுக்குவதற்கான அதன் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ், இந்தப் போரின் முடிவில் ஹமாஸிடம் “இஸ்ரேலிய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதற்குப்” போதுமான ராணுவ பலம் இருக்காது என்று கூறியுள்ளார்.
தரைவழித் தாக்குதல் ஆபத்தானது
காஸாவில் இஸ்ரேலின் “ஸ்வார்ட்ஸ் ஆஃப் அயர்ன்” என்ற முழக்கம் வெற்றியடைவது பல காரணிகளைச் சார்ந்தது.
இஸ்ரேல் தாக்கக்கூடும் என்பதை ஹமாஸ் அறிந்திருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் ராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் அதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்க வேண்டும்.
ஹமாஸ் பல்வேறு இடங்களில் வெடிமருந்துகளைப் புதைத்திருக்க வேண்டும், மேலும் எங்கு போரிடுவது என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். அந்த அமைப்பு இஸ்ரேலிய ராணுவத்தைத் தாக்குவதற்கு காஸாவில் உள்ள தனது நிலத்தடி சுரங்க வலையமைப்பை முழுமையாகப் பயன்படுத்தும்.
கடந்த 2014ஆம் ஆண்டு காஸா நகரின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராணுவ டாங்கிகளை எதிர்க்கும் வகையில் கண்ணிவெடிகள், துப்பாக்கி சுடும் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டன.
ஹமாஸுடன் நடந்த போர்களில் இஸ்ரேலின் காலாட்படை பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 11 லட்சம் பாலத்தீன குடிமக்களை 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியைக் காலி செய்து, தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தெற்கு நோக்கி நகருமாறு இஸ்ரேல் கூறியதற்கு இதுவொரு பெரிய காரணம்.
இந்தப் போர் பல மாதங்களுக்குத் தொடரலாம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதற்காக 3 லட்சத்து 60 ஆயிரம் ரிசர்வ் ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், பின்வாங்குவதற்கான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இஸ்ரேலால் எவ்வளவு காலம் தனது போரைத் தொடர முடியும் என்பதுதான் கேள்வி.
இஸ்ரேல் பாலத்தீனம் மோதல்
அகதிகள் விவகாரங்களைக் கையாளும் ஐ.நா. அமைப்பு, காஸா “நரகத்தின் கிணறாக” மாறி வருவதாகக் கூறியுள்ளது.
அங்கு இறப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடிநீர், மின்சாரம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது காஸாவின் கிட்டத்தட்ட பாதி மக்களை அந்தப் பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை விவகாரங்களை உள்ளடக்கிய பிரபல இஸ்ரேலிய பத்திரிகையாளரான யோஸ்ஸி மெல்மான் பேசியபோது, “இஸ்ரேலிய ராணுவமும் அரசாங்கமும் சர்வதேச சமூகத்தின் ஆதரவை, குறைந்தபட்சம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் கருதுகின்றன.
இப்போது அவர்களின் கொள்கை இதுதான். நம்மிடம் போதுமான நேரம் இருப்பதால் ஒன்றாக இணைவோம் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருக்கிறது,” என்றார்.
எது எப்படி என்றாலும், மக்கள் பசியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் இஸ்ரேலின் நட்பு நாடுகளும் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலை ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.
காஸா மீது தரைவழித் தாக்குதல்
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பணயக் கைதிகளை மீட்பது கடினமான பணி
சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் பணயக் கைதிகளாகப் பிடித்த 150 பேரில் இஸ்ரேலிய குடிமக்கள் மட்டும் இல்லை, ஏராளமான வெளிநாட்டு குடிமக்களும் உள்ளனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களும் பலர் உள்ளனர்.
அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளின் அரசுகள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், “பிரான்ஸ் தனது குடிமக்களை பாதுகாப்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை,” என்று நாட்டில் வசிக்கும் பிரெஞ்சு-இஸ்ரேலிய குடும்பங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஹமாஸுடன் பணயக் கைதிகள் இருப்பது இஸ்ரேலின் முழு நடவடிக்கையிலும் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனுடன், இஸ்ரேலுக்குள் கூட இது தொடர்பாக அரசாங்கத்தின் மீது நிறைய அழுத்தங்கள் உள்ளன.
அமீர் பார் ஷாலோம் தற்போதைய சூழ்நிலையை 1972 முனிச் ஒலிம்பிக் போட்டியின்போது ஏற்பட்ட சூழ்நிலையுடன் ஒப்பிடுகிறார். 1972இல், பாலத்தீன துப்பாக்கி ஏந்திய குழுவினர் இஸ்ரேலிய வீரர்களைப் பிடித்து 11 பேரைக் கொன்றனர்.
அந்த நேரத்தில், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடிக் கொல்லும் நடவடிக்கையை அரசு தொடங்கியிருந்தது. இம்முறையும் அரசாங்கம் இதேபோன்ற ஒன்றைச் செய்ய விரும்புவதாக அவர் நம்புகிறார். இஸ்ரேலிய குடிமக்களைக் கடத்திய ஹமாஸை கண்டுபிடிக்க அரசு விரும்புகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஹமாஸ் ஆயத்தமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
காஸாவின் வெவ்வேறு இடங்களில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பது இஸ்ரேலின் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சயரெட் மட்கல் படையினருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பணயக் கைதிகளைக் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் ஏற்கெனவே மிரட்டியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஹமாஸின் பிடியிலிருந்து கிலாட் ஷாலித் என்ற வீரரை விடுவிக்க இஸ்ரேல் ஆயிரம் பாலத்தீன கைதிகளை விடுவித்தது. ஹமாஸ் ஐந்து ஆண்டுகளாக கிலாட்டை பணயக் கைதிகளாக வைத்திருந்தது.
ஆனால் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு முன் கவனமாகச் சிந்திக்க வேண்டும். 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்களில் யாஹ்யா சின்வார் ஒருவர். சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகியிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியாது.
மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளும் இந்தப் போரைக் கண்காணித்து வருகின்றன
இஸ்ரேல் மேற்கொள்ளும் தரைவழித் தாக்குதலின் வெற்றி, அதன் அண்டை நாடுகள் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.
இஸ்ரேல் அரசு எகிப்தில் இருந்து முக்கியப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடலாம். எகிப்தின் வடக்கு எல்லை காஸாவின் தெற்குப் பகுதியை ஒட்டியுள்ளது. காஸாவிற்குள் இருக்கும் மக்களுக்கு ரஃபா எல்லைக் கடப்பு வழியாக உதவி வழங்க எகிப்து காஸா மீது அழுத்தம் கொடுக்க முடியும்.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் ஒஃபிர் விண்டர் இது குறித்துப் பேசியபோது, “இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை முன்னேறினால், காஸாவில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது ஏராளமான மக்கள் எகிப்து நாட்டுக்கு அகதிகளாகச் செல்லக்கூடும். அதனால், போரிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2011இல் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனரான யாஹ்யா சின்வார் இப்போது ஹமாஸின் அரசியல் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
காஸாவிலிருந்து வெளியேறும் ஏராளமான மக்களுக்கு இடமளிக்க எகிப்து தனது எல்லைகளைத் திறக்க வேண்டும் என்று ஒஃபிர் விண்டர் கூறுகிறார். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் தரப்பில் இருந்து அழுத்தம் அதிகரிக்கலாம்.
லெபனானை ஒட்டியுள்ள இஸ்ரேலின் வடக்கு எல்லையின் மீதும் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கிறது.
லெபனானில் இருக்கும் ஆயுதமேந்திய தாக்குதல் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும் இந்தப் பகுதி இஸ்ரேலுக்கு புதிய போர்க்களமாக மாறவில்லை.
ஹிஸ்புல்லாவின் பிரதான ஆதரவாளரான இரான் ஏற்கெனவே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு “கூட்டணியைத்” தொடங்குவதாக அச்சுறுத்தியுள்ளது. தற்போதைய பதற்றத்தை யாரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியபோது, அவர் இரான் மற்றும் ஹிஸ்புல்லாவை பற்றித் தான் குறிப்பிட்டார்.
“எந்தவொரு நாடும், எந்தவொரு அமைப்பும் மற்றும் எந்தவொரு நபரும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது – அதைச் செய்யாதீர்கள்” என்று ஜோ பைடன் கூறியிருந்தார்.
தனது செய்தியின் தீவிரத்தைக் காட்ட, அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலை கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பியுள்ளது.
தாக்குதல் தீவிரமடைந்தால் பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறும் ஆபத்து நிலவுகிறது.
காஸாவுக்கான இஸ்ரேலின் இறுதி நடவடிக்கை என்ன?
இந்த ராணுவ நடவடிக்கையின் மூலம் ஹமாஸை இஸ்ரேல் முழுமையாக பலவீனப்படுத்தினாலும், காஸாவில் அதன் இடத்தைப் பிடிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது.
இஸ்ரேல் 2005இல், தனது ராணுவத்தைக் கொண்டு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை காஸாவில் குடியேற்றியது. மீண்டும் ஒருமுறை இந்தப் பகுதியில் குடியேற்றத்தை ஏற்படுத்தி தன்னை ஆக்கிரமிப்பாளராகக் காட்ட விரும்பாது.
கடந்த 2007ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பாலத்தீன அதிகார அமைப்பு, மீண்டும் காஸா பகுதிக்குள் உருவாகும் சாத்தியம் இருப்பதாக ஒஃபில் விண்டர் நம்புகிறார்.
பாலத்தீன அதிகார அமைப்பு ஒரு கிளர்ச்சி அமைப்பு அல்ல. தற்போது மேற்குக் கரைப் பகுதியை அந்த அமைப்புதான் ஆட்சி செய்கிறது. அந்த அமைப்பு மீண்டும் அதிகார பலம் பெறுவதை எகிப்து அரசும் வரவேற்கும் என அவர் நம்புகிறார்.
இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட காஸா உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது சவால் நிறைந்த ஒரு பணியாகவே இருக்கும்.
ஹமாஸ் தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் அரசு காஸாவிற்கு “இரட்டை உபயோகப் பொருட்கள்” செல்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இவை ராணுவம், பொதுமக்கள் என இருதரப்பும் பயன்படுத்தக்கூடிய பொருட்களாகும். இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இஸ்ரேல் விரும்புகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, இஸ்ரேல்-காஸா எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியில் இருந்து குடியிருப்புப் பகுதிகள் பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புகிறது. இதற்கு முன்பும் இஸ்ரேலில் இதுபோன்ற அறிவுரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட்டின் முன்னாள் தலைவரான யோரம் கோஹென், தற்போதைய பாதுகாப்பு மண்டலத்தை குறைந்தது இரண்டு கிலோமீட்டர் (1.25 மைல்கள்) தொலைவுக்கு “கண்டவுடன் கூடும்” பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று நம்புகிறார்.
ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலின் விளைவு எதுவாக இருந்தாலும், அதன் மூலம் இஸ்ரேல் தனது மூல நோக்கத்தை அடைய விரும்புகிறது. எதிர்காலத்தில் தன் மீது இதுபோன்ற தாக்குதல் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவே இஸ்ரேல் விரும்புகிறது.