இந்திய கேரள மாநிலம் கடமக்குடியில் நான்கு பேர் கொண்ட குடும்பம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய அதிகாரிகள், ஒன்லைன் உடனடி கடன் விண்ணப்பங்களுடன் தொடர்புடைய இலங்கையை தளமாகக் கொண்ட குற்ற வலைப்பின்னல்களின் சாத்தியமான பங்கைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் ஆபாசமான படங்களை உறவினர்களுக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட எண்ணின் இருப்பிடத்தை பொலிஸார் கண்டுபிடித்ததன் மூலம் விசாரணை குறிப்பிடத்தக்க திருப்பத்தை எட்டியுள்ளது .நிஜோ ஜானி 39, அவரது மனைவி ஷில்பா, 32, மற்றும் அவர்களது குழந்தைகளான எபல், 7, மற்றும் ஆரோன், 5 ஆகியோர் கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர்.

“விசாரணையின் போது, ​​சில ஒன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்களிடம் ஷில்பா கடன் வாங்கிய நிலையில .அவற்றைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆபாசமான செய்திகளை அனுப்பியுள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்தபோது, ​​அது இலங்கையை மையமாகக் கொண்டது என்பது கணடறியப்பட்டதாகவும், மோசடி செய்பவர்கள் இலங்கையில் இருந்து செயற்பட்டிருக்கலாம்” என பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. முன்னதாக வட இந்தியாவை தளமாகக் கொண்ட கும்பல்களின் குறித்த செயலில் பங்கேற்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர், .இருப்பினும், உறவினர்கள் செய்திகளைப் பெற்ற வாட்ஸ்அப் எண்ணின் விவரங்கள் வேறுபட்டதாக இருந்த நிலையில் பொலிஸார் குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளனர்.

“இலங்கையை தளமாகக் கொண்ட வலையமைப்புக்களின் ஈடுபாட்டை உறுதிப்படுத்த நாம் ஆழமாக தேட வேண்டும். இருப்பினும், வட இந்தியாவைச் சேர்ந்த கும்பல்களின் தலையீட்டை நிராகரிக்க தாங்கள் தயாராக இல்லை, ”என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஷில்பாவின் மொபைலை பொலிஸார் இன்னும் சரி பார்க்கவில்லை, இது பரிவர்த்தனைகளில் அதிக வெளிச்சத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாங்கள் தரவை அணுக வேண்டும் என்பதால், கடவுச்சொல்லை சிதைப்பதை நாங்கள் தவிர்த்துவிட்டோம். தொலைபேசியை தடய அறிவியல் ஆய்வகத்திடம் (FSL) ஒப்படைத்துள்ளோம். இந்த வழக்கில் மேலதிக தெளிவுக்காக FSL இன் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ”என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், கர்நாடகாவில் உடனடி கடன் வழங்கும் சீன ஒன்லைன் நிறுவனத்திற்கு இரையாகி 22 வயது பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தேஜஸ் நாயர் பணம் செலுத்தத் தவறியதால், நிறுவன நிர்வாகியால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply