அலட்டிக் கொள்ளாத நடிகர்: மலையாள திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இரு பெரும் நடிகர்களும் தொடங்கியதில் இருந்து இன்று வரை தங்கள் திரையுலகத்தை இரு தூண்களாக நின்று தாங்கி வருகின்றனர்.
வெறும் வெள்ளை வேட்டி, சாதாரண கோடு போட்ட சட்டை அணிந்து கொண்டு பல படங்களில் எளிமையாக காட்சி தந்தே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மம்மூட்டி. அலட்டிக் கொள்ளாமல் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் வசனங்கள் மூலமாகவே மிகப்பெரிய நடிகராக மாறி உள்ளார்.
தேசிய விருதுகள்: மதிலுக்குள், வடக்கன் வீர கதா, பொந்தன் மடா, விதேயன், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றவர் மம்மூட்டி.
மேலும், பத்மஸ்ரீ, இரு முறை டாக்டர் பட்டம், கேரள பிரபா என ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
சொத்து மதிப்பு: நடிகர் மம்மூட்டி மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒட்டுமொத்தமாக 400 படங்களில் நடித்து திரைத்துறையையே அதிர வைத்துள்ளார்.
அவரது மகன் துல்கர் சல்மானும் மிகப்பெரிய நடிகராக வலம் வருகிறார். கேரளாவில் பல ஏக்கரில் மம்மூட்டிக்கு சொந்தமாக நிலம் மற்றும் பண்ணை வீடுகள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக 360 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 ரூபாய் நோட்டு: ஆனால், அதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமே இல்லை என்றும் ஒரே ஒரு ரெண்டு ரூபாய் கிழிந்த நோட்டுத் தான் தனது வாழ்க்கையில் முக்கியமான சொத்து மற்றும் பொக்கிஷம் என பாதுகாத்து வருவதாக மூன்றாம்பிறை வாழ்வனுபவங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி என்ன சிறப்பு: அந்த 2 ரூபாய் நோட்டில் அப்படி என்ன சிறப்பு என கேட்கிறீங்களா, ஒரு நாள் நடிகர் மம்மூட்டி இரவில் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு டிராவல் பண்ணிட்டு இருக்காரு, அதுவும் தனியாக..
அப்போது ஒரு வயதான நபர் அவரது காரை ஒரு பதட்டத்துடன் வழி மறிக்க முயற்சிக்கிறார். அந்த நபரை பார்த்ததும், இரவு வேளையில் காரை நிறுத்தி வம்பில் ஏன் சிக்க வேண்டும் காரை நிறுத்தாமல் கடந்து சென்று விட்டாராம் மம்மூட்டி.
ஆனால், சில அடி தூரம் செல்லும் போதே, அந்த வயதானவரின் பரிதவிப்பு நினைவுக்கு வர மீண்டும் காரை ரிவர்ஸ் செய்து கொண்டு வந்து அந்த நபரிடம் என்னய்யா பிரச்சனை என கேட்க, தனது மகள் வயிற்று வலியால் துடிக்கிறாள், அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எந்தவொரு வாகனமும் கிடைக்கவில்லை என்றவுடன் வாங்க வண்டியிலே ஏறுங்க என சொல்ல மகளை தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு சென்றாராம்.
மமதை அழிந்தது: இவ்வளவு நேரம் ஆகியும் தன்னை அந்த நபர் அடையாளம் கண்டுக் கொள்ளவில்லையே என்கிற எண்ணம் வேறு மனதில் தோன்றிக் கொண்டிருக்க, மருத்துவமனையில் இறக்கி விட்டதும், தனது கையில் இருந்த 2 ரூபாய் நோட்டை எடுத்து, எங்கிட்ட இவ்ளோ தான்யா இருக்கு, உதவிக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றாராம்.
அப்போது, 4 தேசிய விருது வாங்கிய நடிகன் என்கிற மமதையே சுக்குநூறாக உடைந்து விட்டதாகவும் நடிகன் என்றால் அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உதவி செய்தால் தான் உலகம் நம்மை மதிக்கும் என்பதை புரிந்து கொண்டேன் எனக் குறிப்பிட்டு, அந்த 2 ரூபாய் நோட்டை பல ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக எழுதி உள்ளார் மம்மூட்டி.