தென் ஆபிரிக்காவிடம் வாங்கிக்கட்டிய நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடுகிறது
பூனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை நையப்புடைத்த தென் ஆபிரிக்கா 190 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து தென் ஆபிரிக்காவும் இந்தியாவும் தலா 12 புள்ளிகளுடன் அரை இறுதியில் விளையாடுவதை பெரும்பாலும் உறுதிசெய்துகொண்டுள்ளன.
இதேவேளை நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடத் தொடங்கியுள்ளது.
தென் ஆபிரிக்காவின் வெற்றியில் குவின்டன் டி கொக், ரெசி வென் டேர் டுசென் ஆகியோர் குவித்த அதிரடி சதங்கள், 2ஆவது விக்கெட்டில் அவர்கள் பகிர்ந்த இரட்டைச் சத இணைப்பாட்டம், கேஷவ் மகாராஜ், மார்க்கோ ஜென்சென் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பன பிரதான பங்காற்றின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டொம் லெதம், முதலில் துடுப்பெடுத்தாடுவதை விடுத்து களத்தடுப்பை தெரிவுசெய்தது அவரது அணியின் தோல்விக்கு மற்றொரு காரணமாகும்.
9ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 38 ஓட்டங்களாக இருந்தபோது தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா (24) ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த குவின்டன் டி கொக், ரெசி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 200 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவைப் பலமான நிலையில் இட்டனர்.
குவின்டன் டி கொக் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 114 ஓட்டங்களை விளாசினார். இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவர் குவித்த 4ஆவது சதம் இதுவாகும்.
அத்துடன் ரெசி வென் டேர் டுசெனும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 118 பந்துகளில் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 113 ஓட்டங்களை விளாசி இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் 2ஆவது சதத்தைப் பூர்த்திசெய்தார்.
ரெசி வென் டேர் டுசென் 3ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் மேலும் 78 ஓட்டங்களைப் பகிர்ந்தார். டேவிட் மில்லர் 30 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் டிம் சௌதீ 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
358 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 35.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் மூவர் மாத்திர மே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
அணியின் வீழ்ச்சிக்கு மத்தியிலும் மத்திய வரிசையில் ஆக்ரோஷத்தைப் வெளிப்படுத்திய க்ளென் பிலிப்ஸ் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
அவர் கடைசி விக்கெட்டில் மெட் ஹென்றியுடன் 34 ஒட்ங்களைப் பகிர்ந்தார். ஆனால் மெட் ஹென்றி ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பிலிப்ஸை விட வில் யங் 33 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 24 ஒட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கேஷவ் மகாராஜ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சென் 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோயெட்ஸ் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரெசி வென் டேர் டுசென்
இதேவேளை, இந்தப் போட்டி முடிவுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்காவும் இந்தியாவும் தலா 12 புள்ளிகளுடன் முறையே 1ஆம், 2ஆம் இடங்களில் இருக்கின்றன.
அத்துடன் அரை இறுதி வாய்ப்பையும் இரண்டு அணிகளும் பெரும்பாலும் உறுதி செய்துகொண்டுள்ளன.
இந்த இரண்டு அணிகளைவிட அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு மாத்திரமே அதிகப்பட்சமாக 12 புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது.
ஆனால், அவுஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் நேருக்கு நேர் மோதவிருப்பதால் ஒரு அணி தோல்வியைத் தழுவ வேண்டிவரும். ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்தால் அவ்வணியினால் அதிகபபட்சமாக 10 புள்ளிகளைப் பெறமுடியும்.