திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்ற பொரலுகந்த ரஜமாகா விகாரைப்பகுதியில் திங்கட்கிழமை (06) காலை பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநரிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஆளுநரினால் குறித்த கட்டுமானங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் தடையுத்தரவையும் மீறி குறித்த பகுதியில் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிராக பொதுமக்கள் 03.09.2023 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் பின்னர் 09.09.2023 அன்று குறித்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எவ்வித அனுமதி இல்லாத நிலையிலும் கட்டுமானப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இன்றைய தினம் (06) காலை குறித்த பகுதியில் இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மக்களே இல்லாத, தமிழ் மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் இன முறுகலை ஏற்படுத்தும் விதமாகவும், இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாகவும் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும், புத்த விகாரையின் கட்டுமானங்களைத் தொடர்ந்து இப்பகுதிகளைச்சூழ சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் உள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருமலை இலுப்பைக்குளம் விகாரையின் முக்கிய பதிவுகள்

2018 – விகாரை பதிவு செய்யப்பட்டது.

22.11.2021 – விகாரையின் கட்டுமானங்களுக்கான பிரதேச செயலாளரின் அனுமதி

09.12.2021 – பிரதேச செயலாளருக்கான புத்தசாசன அமைச்சின் விண்ணப்பம்

2023 – விகாரையின் மண்டபத்திற்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுப்பு

11.08.2023 – ஆளுநரினால் குறித்த பகுதியில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

12.08.2023 – கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி குறித்த பகுதியில் புத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

28.08.2023 – மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் கச்சேரியில் இடம்பெற்ற நிலையில் கச்சேரிக்கு முன்னால் வீதியை மறித்து புத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் கூட்டத்திற்குள் சென்றும் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

இதன்போது 2023.07.09 அன்று திருகோணமலை பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட தடை தொடர்பான கடிதத்தை மீறப்பெறுவதான கடிதம் வழங்கப்பட்டது. பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.

03.09.2023 – குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் சாம்பல்தீவு மற்றும் அதற்கு அண்மையிலும் இடம்பெற்றது. தடையுத்தரவும் வழங்கப்பட்டது.

03.09.2023 – குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்கப்பட்டது.

09.09.2023 – விகாரையின் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகை நடப்பட்டது.

22.09.2023 – விகாரையின் கட்டுமானங்களுக்காக நிதி ஒதுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல அவர்களின் விண்ணப்பம்.

25.09.2023 – கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

01.10.2023 – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.

01.10.2023 – விகாரையின் கட்டுமானங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களுக்கு கருத்து சொல்ல முடியாமல் பொலிசாரினால் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

04.10.2023 – கட்டுமானப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன

13.10.2023 – மண்டபத்தின் கட்டுமானப்பணிகளின் கட்டு வேலைகள் நிறைவு பெற்றன.

06.11.2023 – இரண்டு புத்தர்சிலைகள் வைக்கப்பட்டன.

Share.
Leave A Reply