மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் ,ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் புதன்கிழமை (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகளின் இடம் பெற்று வந்த நிலையில் சுமத்தப்பட்டிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 02 ஒக்டோபர்2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தீர்ப்புக்காக மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் ​புதன்கிழமை (06) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது. எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.

குற்றவாளியான மரண தண்டனை விதிக்கப்பட்டவ​ரை கண்டி-போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது.

Share.
Leave A Reply