“நாங்கள் எல்லா வயதினரையும் பார்க்கிறோம்… காயங்களைப் பார்க்கிறோம், அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று கேப்டன் மாயன் பிபிசியிடம் கூறினார்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல்களின்போது பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் கொடூரமாக சிதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன.
எச்சரிக்கை: பாலியல் வன்முறை மற்றும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் குறித்த விளக்கங்கள் உள்ளன.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களைச் சேகரித்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்த பலர், மனிதர்களின் உடைந்த இடுப்பு எலும்புகளுடன் கூடிய உடல்கள், காயங்கள், வெட்டுக் காயங்களுடன் கூடிய உடல்கள் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கான பல அறிகுறிகளைக் கண்டதாகவும், குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் முதல் ஓய்வூதியம் பெறுவோர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் எங்களிடம் தெரிவித்தனர்.
நோவா இசை விழாவில் நேரில் கண்ட சாட்சியின் காணொளியை செய்தியாளர்களுக்கு இஸ்ரேலிய போலீஸார் காட்டினர். அதில், பாதிக்கப்பட்ட ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன.
தாக்குதல் நடந்த நாளில் ஹமாஸ் காட்சிப்படுத்திய காணொளியில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஹமாஸ் குழுவினர் பெண்களை பாலியல் ரீதியாகத் தாக்குதல் தொடுத்ததாகவும் அந்தக் காட்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சில பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் சொந்தக் கதைகளைச் சொல்வதற்காகவே உயிர் பிழைத்துள்ளனர் என்றே நாங்கள் நம்ப வேண்டியிருக்கிறது.
தாக்குதல் நடந்த பகுதியில் கிடந்த உடல்களைச் சேகரித்தவர்கள், பிணவறை ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த பெண்களின் கடைசி தருணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலின்போது நோவா இசைத் திருவிழா நடந்த தளத்தில் இருந்த ஒரு பெண்ணை ஹமாஸ் குழுவினர் பதிவு செய்த ஒரு பயங்கரமான காட்சியை பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் காட்டியுள்ளனர்.
ஹமாஸ் போராளிகள் ஒரு பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்து அவரைச் சிதைப்பதைப் பார்த்ததை ஒரு சாட்சி விவரித்தார். கடைசியாக அவரைத் தாக்கியவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து, அப்போதே தலையில் சுட்டுக் கொன்றார்.
ஹமாஸ் போராளிகள் அக்டோபர் 7 அன்று நோவா இசைத் திருவிழாவை நடந்த போது தாக்குதல் நடத்தி
நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்தனர்.
இந்த வீடியோவில், சாட்சி எஸ் என்று அழைக்கப்படும் பெண், தாக்குதலுக்கு உட்பட்டவர்களை ஹமாஸ் குழுவினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கடத்துவதையும், பின்னர் அவர்கள் அந்தப் பெண் மீது பாலியல் தாக்குதல் செய்வதையும் சைகை மூலம் தெரிவிக்கிறார்.
“அப்போது அந்தப் பெண் உயிருடன் தான் இருந்தார்,” என்று சாட்சி எஸ் கூறுகிறார். “அவர் முதுகில் இருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.”
இத் தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவரின் உடலின் பாகங்களை ஆண்கள் எவ்வாறு துண்டித்தனர் என்பதை அவர் விரிவாகக் கூறுகிறார்.
“அவர்கள் அவருடைய மார்பகத்தை வெட்டி தெருவில் எறிந்தார்கள்,” என்று அவர் கூறுகிறார். “அதன் பின் அவர்கள் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.”
பாதிக்கப்பட்ட பெண், ஹமாஸ் சீருடையில் இருந்த மற்றொரு நபரிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டார். அவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்தது.
“சீருடையில் இருந்த அந்த ஆண், அப்பெண்னை பாலியல் வன்புணர்வு செய்துகொண்டு, அச்செயலை முடிப்பதற்குள் பெண்ணின் தலையில் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் அவர் தன்னுடைய ஆடைகளைக் கூட முழுமையாக அணிந்துகொள்ளவில்லை. பாலியல் தாக்குதலின் போது ஒரு பெண் மிகக்கொடூரமாக இப்படி கொலை செய்யப்பட்டார்.”
அந்த இசைத் திருவிழா நடைபெற்ற தளத்தில் இருந்து நாங்கள் பேசிய ஒரு சாட்சி, “கொலை செய்யப்படுவது, பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது, தலை துண்டிக்கப்படுவது போன்ற சத்தம் மற்றும் அலறல்களை” கேட்டதாகக் கூறினார்.
அவர் கேட்ட கூச்சல்கள் மற்ற வகையான வன்முறைகளைக் காட்டிலும் பாலியல் வன்கொடுமையைத்தான் குறிக்கின்றன என்பதை, அதைப்பார்க்காமல் எப்படி உறுதியாகக் கூற முடியும் என்ற எங்கள் கேள்விக்கு, அந்த நேரத்தில் கேட்ட போது, அது நிச்சயமாக பாலியல் வன்தாக்குதலாக மட்டுமே இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.
ஒரு ஆதரவு அமைப்பின் மூலம் அவர் வெளியிட்ட அறிக்கை அதை “மனிதாபிமானமற்றது” என்று விவரிக்கிறது.
“சில பெண்கள் இறப்பதற்கு முன் வன்புணர்வு செய்யப்பட்டனர், சிலர் காயம் அடைந்தபோது அதே கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் சிலரின் உயிரற்ற உடல்களுடன் ஹமாஸ் குழுவினர் பாலுறவு கொண்டனர்,” என்று அவரது அறிக்கை கூறுகிறது. “நான் உதவி செய்ய மிகவும் விரும்பினேன். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.”
பாலியல் வன்கொடுமையை நேரில் கண்ட பல சாட்சிகள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து மேலும் விளக்கம் அளிக்கவில்லை. நாங்கள் அவர்களிடம் பேசியபோது, அவர்கள் இன்னும் எஞ்சியிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் செய்யவில்லை எனக் கருதப்படுகிறது.
இஸ்ரேலிய நாட்டின், ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறை‘ அமைச்சர் மே கோலன் பிபிசியிடம் பேசியபோது, பாலியல் வன்புணர்வு மற்றும், பாலியல் கொடுமைக்கு ஆளான சிலர் அந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பியதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது மனநல சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
“ஆனால் மிக மிகக் குறைவான எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இப்படித் தப்பினர். பெரும்பான்மையானவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அவர்களால் என்னுடனோ, அரசிடமோ, அல்லது ஊடகத்திடமோகூட எதுவும் பேச முடியாது,” என்று அவர் கூறினார்.
ஹமாஸால் குழுவினர் காட்சிப்படுத்திய காணொளிகளில், ஒரு பெண்ணின் கைவிலங்கு மற்றும் கைகளில் வெட்டுகளுடன் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அவரது கால்சட்டையின் இருக்கையில் ஒரு பெரிய ரத்தக் கறை படிந்த காட்சிகளும் அடங்கும்.
மற்ற காட்சிகளில், போராளிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் நிர்வாணமாக அல்லது அரை ஆடையுடன் இருப்பதாகத் தெரிகிறது.
இதுபோன்ற கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு பல இடங்களில் இருந்து வரும் புகைப்படங்கள், பெண்களின் உடல்கள் இடுப்பிலிருந்து கீழே நிர்வாணமாக இருப்பதைக் காட்டுகின்றன, அல்லது அவர்களின் உள்ளாடைகள் ஒரு பக்கமாகக் கிழிக்கப்பட்டு, கால்கள் சிதறி, அவர்களின் பிறப்புறுப்பு மற்றும் கால்களில் காயத்தின் அறிகுறிகளுடன் தவிப்பதைக் காட்டுகின்றன.
“இராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் குழு, போஸ்னியாவில் செயல்பட்ட விதத்தில் இருந்து பெண்களின் உடலை எப்படி ஆயுதமாக்குவது என்பதை ஹமாஸ் கற்றுக்கொண்டதைப் போல் உணர்கிறேன்,” என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் டேவிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸின் சட்ட நிபுணர் டாக்டர் கோச்சாவ் எல்காயம்-லெவி கூறினார்.
“பெண்களை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்பது பற்றி அவர்களுக்குத் தெரிந்த விவரங்களை அறிந்துகொள்வது என்னை உறைய வைக்கிறது. அவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, பிறப்புறுப்பைச் சிதைப்பது, பாலியல் வன்புணர்வு போன்றவற்றை அறிவது திகிலூட்டுகிறது.”
“பாலியல் வன்புணர்வுகளை அவர்கள் பார்த்ததால் அவர்களது மனநலம் மிகவும் கடினமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தது மூன்று சிறுமிகளுடன் நான் பேசினேன்,” என்று அமைச்சர் மே கோலன் என்னிடம் கூறினார்.
“அவர்கள் இறந்தது போல் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்தார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களால் சமாளிக்க முடியாத கொடூரங்கள் அங்கே அரங்கேறின.”
இஸ்ரேலின் காவல்துறைத் தலைவர் யாகோவ் ஷப்தாய் பேசும்போது, தாக்குதல்களில் இருந்து தப்பிய பலர் பேசுவதற்கு இயலாத நிலையில் இருப்பதாகவும், அவர்களில் சிலர் தாங்கள் பார்த்த அல்லது அனுபவித்ததைப் பற்றி ஒருபோதும் சாட்சியமளிக்க மாட்டார்கள் என்று, தான் நினைத்ததாகவும் கூறினார்.
“இளைஞர்கள் மற்றும் பெண்கள் 18 பேர் மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்கள் இனி செயல்பட முடியாது,” என்று அவர் கூறினார்.
மற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிர் பிழைத்தவர்களைச் சுற்றியுள்ள குழுக்களில் ஒருவர், பிபிசியிடம் பேசுகையில் ஏற்கெனவே சிலர் தங்களைக் கொன்றுவிட்டதாகக் கூறினார்.
தாக்குதல்களுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட தன்னார்வ உடல் சேகரிப்பாளர்கள் மற்றும் ஷூரா ராணுவத் தளத்திற்கு அடையாளம் காண வந்தவுடன் உடல்களைக் கையாண்டவர்களிடமிருந்து பெரும்பாலான சான்றுகள் கிடைத்துள்ளன.
ஜக்கா என்ற மத அமைப்பில் தன்னார்வத் தொண்டு செய்யும் உடல் சேகரிப்பாளர்களில் ஒருவர், பெண்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது மற்றும் சிதைக்கப்பட்டதற்கான அறிகுறிகளை என்னிடம் விவரித்தார். ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பிடித்த ஹமாஸ் குழுவினர் அவரைக் கொல்வதற்கு முன்பு அவரது வயிற்றைக் கிழித்து, வயிற்றுக்குள் இருந்த கருவை குத்திக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார்.
பிபிசியால் இந்தச் சம்பவத்தை நேரடியாகச் சரிபார்க்க முடியவில்லை. மேலும் இஸ்ரேலிய ஊடக அறிக்கைகள் ஹமாஸ் தாக்குதல்களின் அதிர்ச்சிகரமான பின்விளைவுகளில் பணியாற்றிய தன்னார்வலர்களின் சில சாட்சியங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.
நச்மென் டிக்ஸ்டெஜ்னா என்ற மற்றொரு நபர், கிப்புட்ஸ் பீரியில் இரு பெண்களின் உடல்கள், கைகள் மற்றும் கால்கள் கட்டிலில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து எழுத்துப்பூர்வ சாட்சியம் அளித்துள்ளார்.
“ஒருவர் தனது பிறப்புறுப்பில் கத்தியை வைத்து பாலியல் ரீதியாக பயமுறுத்தப்பட்டார் என்பதுடன், அவரது அனைத்து உள் உறுப்புகளும் குத்திக் குதறப்பட்டன,” என்று அவரது அறிக்கை கூறுகிறது.
இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய தங்குமிடங்கள், “பெண்களின் உடல் குவியல்களால் நிரம்பியிருந்தன. அவர்களின் ஆடைகள் மேல் பகுதியில் கிழிந்திருந்தன. அதே நேரம் அந்த உடல்களின் கீழ் பகுதி முற்றிலும் நிர்வாணமாக இருந்தன. அந்த உடல் குவியல்களை உன்னிப்பாகப் பார்த்தபோது அவர்களது தலைகளில் நேரடியாக மூளையைக் குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே கோலன் பேசுகையில், "முதல் ஐந்து நாட்கள் வரை ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில்தான் இருந்தனர்,” என்றார்.
இந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு அந்தத் தொடக்க கால குழப்பமான நாட்களில், சில பகுதிகளில் அப்போதும் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. அங்கே இருந்த குற்றக் காட்சிகளை கவனமாக ஆவணப்படுத்துவதற்கான தேவை மற்றும் தடயவியல் சான்றுகளை எடுப்பதற்கான தேவைகள் அதிகமாக இருந்தபோது, இப்பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது தவறவிடப்பட்டதாகவோ புலனாய்வாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
“முதல் ஐந்து நாட்களுக்கு, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலில்தான் இருந்தனர்,” என்று தொடர்ந்து பேசிய மே காலன் கூறினார். “அதோடு எல்லா இடங்களிலும் பல நூற்றுக்கணக்கான உடல்கள் இருந்தன. அந்த உடல்கள் அனைத்தும் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. பல உடல்கள் தீக்காயங்களுடன் இருந்தன.”
“இது ஒரு பாரிய உயிரிழப்பு நிகழ்வு” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் டீன் எல்ஸ்டுன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
“முதல் விஷயம், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குற்றம் நடந்த இடத்தில் நடத்திய விசாரணையில் இருந்துதான் தகவல்கள் கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களுடைய உறவினர்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பதை அறியத் துடித்துக்கொண்டுள்ளனர்.”
ராணுவத்தின் ஷூரா தளத்திற்கு உடல்கள் அடையாளம் காண கொண்டு வரப்பட்டன. அந்த தளத்தில் பணியாற்றுபவர்கள் புலனாய்வாளர்களுக்கு மிக முக்கியமான சில ஆதாரங்களை வழங்கியுள்ளனர்.
உடல்களை அடையாளம் காண அங்கு அமைக்கப்பட்ட கூடாரங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட கப்பல் கொள்கலன்களின் தற்காலிக மையத்தில் இருந்து இந்த ஆதாரம் வெளியாகியுள்ளது.
நாங்கள் சென்றபோது, மருத்துவமனை தள்ளுவண்டிகள், ஏராளமான உடல்களைச் சுமந்தவண்ணம் இருந்தன. அந்த வண்டிகள் இறந்தவர்களை அடைத்து வைத்திருந்த கொள்கலன்களுக்கு முன்னால் நேர்த்தியாக வரிசையாக நின்றன.
காஸா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சைத் தொடர்ந்தபோது, போர் விமானங்கள் தலைக்கு மேல் கர்ஜித்தன.
இங்குள்ள குழுக்கள் எங்களிடம் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறையின் தெளிவான ஆதாரங்களைத் தாங்கள் கண்டதாகக் கூறின. தொடர்ச்சியான வன்முறை துஷ்பிரயோகத்தால் உடைந்த இடுப்பு எலும்பு உட்பட ஏராளமான ஆதாரங்களைக் கண்டதாகத் தெரிவித்தது.
“நாங்கள் எல்லா வயதில் உள்ள பெண்களையும் பார்த்தோம்,” என்று தடயவியல் குழுவில் இருப்பவர்களில் ஒருவரான கேப்டன் மாயன் பிபிசியிடம் பேசிய போது கூறினார். “பாலியல் வன்புணர்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் பார்த்தோம். எங்களிடம் நோயியல் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் காயங்களைப் பார்க்கிறார்கள். மேலும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை நாங்கள் அறிவோம்.”
அவர் கையாண்ட உடல்களில் எந்த விகிதத்தில் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், “ஏராளமாக” என்றார்.
“எல்லா வயதிலும் ஏராளமான பெண்கள் இந்த கொடூரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.”
பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதால், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
“இது நிச்சயமாக ஏராளமானோர் இப்படி சிதைக்கப்பட்டதைத் தான் காட்டுகிறது,” என்று அங்கு பணிபுரியும் மற்றொரு ராணுவ வீரர், தனது முதல் பெயரான அவிகயில் என்பதை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டு தெரிவித்தார்.
“சொல்வது கடினம். சில எரிந்த உடல்களை நான் கையாண்டிருக்கிறேன். அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு முன்பே தெரியாது. மேலும் கீழே பாதி காணாமல் போன உடல்கள் கிடந்தன. அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதால்தான் உடல்கள் அப்படி இருந்தனவா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்களா என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. போதுமானதை விட அதிகம்.”
“சில நேரங்களில் பல உடல்கள் மிகச் சிறிய பகுதியுடன் மட்டுமே இருக்கின்றன,” என டாக்டர் எல்காயம்-லெவி என்னிடம் கூறினார். “ஒருவேளை அந்த உடல்களில் உள்ள ஒரு விரல், கால் அல்லது கை, அல்லது வேறு ஏதேனும் உறுப்பைக் கொண்டு அவர்களை அடையாளம் காண முடியும். ஆனால் ஏராளமான உடல்கள் முற்றிலும் எரிக்கப்பட்டுவிட்டன. எத்தனை பேர் இப்படி கொடூரத்துக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை எப்போதும் துல்லியமாகக் கணிக்க முடியாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.”
“டஜன் கணக்கான” பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இங்கே பணிபுரிபவர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் பேசுகிறார்கள். ஆனால் ஆதாரங்கள் இன்னும் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அதனால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
டாக்டர் எல்காயம்-லெவி தலைமையிலான குழுவினர், பாலியல் குற்றங்கள் குறித்த சாட்சியங்களைச் சேகரித்து வரும் நிலையில், அக்டோபர் 7 அன்று நடந்தது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பதால், அதை உலக நாடுகள் முறையாக விசாரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
“நாங்கள் திட்டவட்டமான ஆதாரங்களைப் பார்க்கிறோம்,” என்று அவர் என்னிடம் சொன்னார். “எனவே இது தற்செயலானது அல்ல. அவர்கள் தெளிவான உத்தரவுடன் வந்தனர். இது இனப்படுகொலை போன்ற ஒரு கொடூர வன்முறைத் தாக்குதல் தான்.”
ஷூரா ராணுவ தளத்திற்கு வந்த உடல்களில் வன்முறையின் அடையாளங்கள் இருப்பதை அவிகயில் ஒப்புக்கொள்கிறார்.
“ஒரே இடத்தைச் சேர்ந்த பெண்களின் குழுக்களுக்கு இதேபோன்ற முறையில் வன்முறைகள் நடத்தப்பட்ட மாதிரிகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
“ஒரு விதத்தில் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் தொகுப்பாக இந்த உடல்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து உடல்களிலும் ஏற்பட்டிருக்கும் காயங்களில் ஒற்றுமைகள் இருப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும், பலமுறை வன்முறை செய்யப்படாத உடல்களாகவே இருந்தாலும், ஒரே மாதிரியாக பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு வித்தியாசமான தொகுப்பாகவே அந்த உடல்கள் இருந்தன. எனவே வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த தாக்குதல்தாரிகள் தனித்தனி பாணியில் சரியான திட்டத்துடன் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது.”
“இது ஒரு திட்டமிட்ட, நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்று காவல்துறைத் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் செய்தியாளர்களிடம் கூறினார்.
"அக்டோபர் 7 அன்று இஸ்ரேல். அதற்கு முந்தைய நாளில் எப்படி இருந்ததோ, அப்படியிருக்கவில்லை," என காவல் துறைத் தலைவர் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் கூறுகிறார்.
விசாரணையில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த டேவிட் காட்ஸ், ஹமாஸ் குழுவினரின் தாக்குதலின் ஒரு பகுதியாக பாலியல் வன்கொடுமைகள் திட்டமிடப்பட்டிருந்ததா என்பதைத் தெளிவாகக் கூற முடியாது. இருந்தாலும், தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் அவர்களுடைய செல்போனில் பேசிய விவரங்கள், அவர்கள் பாலியல் வன்கொடுமை குறித்து ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றன என்றார்.
“அதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டதாகக் கூறுவது பொறுப்பற்றதாக இருக்கும். ஆனால், தற்செயலாக எதுவும் நடக்கவில்லை என்பதையும், இந்த குற்றங்கள் அனைத்தும் ஏற்கெனவே திட்டமிட்டு நடத்தப்பட்டன என்பதையும் உறுதியாகக் கூற முடியும்.”
பாலியல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு வலுவூட்டும் ஆதாரங்கள் ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடம் இருந்து கிடைத்திருப்பதாக இஸ்ரேல் அரசும் சுட்டிக்காட்டுகிறது. பிடிபட்ட சில போராளிகளிடம் நடத்திய விசாரணைகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெண்கள் மிகச் சரியாக இந்த நோக்கத்திற்காகக் குறிவைக்கப்பட்டதாக பிடிபட்டவர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம், ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த பெண்களின் குழு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை “ஹமாஸின் மிருகத்தனமான தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தது” என்பதுடன் “அந்தத் தாக்குதல்களின்போது பாலின அடிப்படையிலான அட்டூழியங்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் பற்றிய பல தரவுகள் பீதியை ஏற்படுத்தின,” எனத் தெரிவித்துள்ளது.
சர்வதேச பெண்கள் உரிமை அமைப்புகள் தமது கூற்றுக்கு ஆதரவளிக்க அதிக நேரம் எடுத்ததாக டாக்டர் எல்காயம்-லெவி கூறினார்.
“இது மனிதகுலம் அறிந்த மிகவும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்ட கொடூரம்,” என்று அவர் என்னிடம் சொன்னார்.
“அக்டோபர் 7 அன்று, ஒருநாளைக்கு முன்பு இஸ்ரேல் எப்படியிருந்ததோ, அதேபோல் கண்விழிக்கவில்லை” என்று காவல்துறைத் தலைவர் யாக்கோவ் ஷப்தாய் கூறினார்.
இங்கு பெண்களுக்கு என்ன நடந்தது என்ற திகிலுக்கு மத்தியில், ஷூரா ராணுவ தளத்தில் உடல்களை அடையாளம் காணும் பிரிவைச் சேர்ந்த கேப்டன் மாயன் கூறுகையில், “அவர்களின் கண் இமைகளில் உள்ள மஸ்காரா மற்றும் அன்று காலையில் அவர்கள் அணிந்திருந்த காதணிகள் தான் மிகவும் வேதனையை அளித்த தருணங்கள்,” என்றார்.
ஒரு பெண்ணாக அவருக்குள் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நான் கேட்டேன்.
“பயங்கரவாதம்,” என்று ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளித்தார். “இது எங்களுக்கு உண்மையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”
பிபிசி தமிழ்