மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய் விரட்டும் ஆலயத்தில் பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளதாகவும், தாக்குதல் நடத்திய பூசாரி தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் உயிரிழந்த மட்டக்களப்பு, புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுர ஜெயலத் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரியின் காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக, மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்துக்கு இருவரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினமான கடந்த புதன்கிழமை இந்த சகோதரர் மற்றும் சகோதரியும் காரில் பௌத்த ஆலயத்துக்குச் சென்றனர்.
தனது மனைவிக்கும் குறித்த சகோதரருக்கும் தொடர்பிருப்பதை அறிந்திருந்த பூசகர், அன்றைய தினம் தன்னை நாடி வந்த நபரதும் அவரது சகோதரியினதும் முன்னிலையில் மனைவியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது பூசகரின் மனைவி அங்கிருந்து தப்பியோட, மனைவியுடன் தொடர்புடைய நபர் மற்றும் அவரது சகோதரி மீது பூசகர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அத்தோடு, அவர்களது காரையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து பூசாரி தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை (07) மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.