“ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.
போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், “உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். “