பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டை நடத்தி முடித்திருக்கின்ற நிலையில், இதுவரையில் அமைதியாக இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தாம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அவர் இந்த அறிவிப்பை கடந்த திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டதாகவும், அமைச்சர்களை ஒத்துழைக்குமாறு கோரியிருந்தார் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் கொழும்பில் நடந்த பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் நிகழ்த்திய உரை, மீண்டும் கட்சியை பழைய நிலைக்கு கொண்டு வருவதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியது.
சிங்கத்தை சீண்ட வேண்டாம் என்று எச்சரித்தார் பஷில் ராஜபக்ஷ. மீண்டும் அதிகாரத்துக்கு வருவோம் என்று கர்ஜனை செய்திருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் யாரை போட்டியில் நிறுத்துவது என்ற எந்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படவில்லை. அத்துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
அதேவேளை, பஷில் ராஜபக் ஷ முன்னர் வகித்த தேசிய அமைப்பாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
அந்த இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம் கூறப்படவும் இல்லை. இந்த மாநாடு முடிந்த கையோடு, பஷில் ராஜபக் ஷ அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
அவர் சில வாரங்களுக்குப் பின்னரே நாடு திரும்புவார். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாயின், தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டு நாடு திரும்ப வேண்டும்.
எவ்வாறாயினும், பஷிலின் தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாக இருப்பதற்கான காரணம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது பல்வேறு ஊகங்களை உருவாக்கி வருகிறது.
இந்தநிலையில் தேசிய அமைப்பாளர் பதவிக்கு வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நியமிக்க வேண்டும் என்றும், அவரையே மொட்டுவின் வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சியினர் சிலர் கோரியிருக்கின்றனர்.
தம்மிக்க பெரேரா உள்ளிட்ட நான்கு பேர், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான பரிசீலனையில் இருப்பதாகவும், ஆனால், எந்த முடிவும் நிறைவேற்றுக் குழுவில் எடுக்கப்படவில்லை என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தான், அமைச்சரவைக் கூட்டத்தில், தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
அடுத்த ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்த தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், முதலில் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்ட உரையில் கூறியபடி, முன்னரோ பின்னரே, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும், ஜனாதிபதி தேர்தலும் நடத்தப்படும் என்று தெரிகிறது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தான் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம்.
அதுவே தனது வெற்றியை உறுதி செய்யும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
அதேவேளை, இந்தப் போட்டியில் சஜித் பிரேமதாச குதிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சஜித் பிரேமதாச போட்டியில் குதித்தால், ஐ.தே.கவின் பாரம்பரிய வாக்குகள் பிளவுபடும். அது தனது வெற்றியைப் பாதிக்கும் என்பதால், சஜித்தை போட்டியில் இருந்து விலகச் செய்வதற்கு ரணில் தரப்பு கடுமையான முயற்சிகளை முன்னெடுக்கும்.
அதேவேளை சஜித்துக்கு இது சவாலான தேர்தலாக இருக்கும். ஏனென்றால், பலமுறை வாய்ப்புகளை நழுவ விட்டவர் அவர். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் பிரதமராகப் பதவியேற்குமாறு பலமுறை அவரைக் கேட்டிருந்தார். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை.
பின்னர், பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில், கோட்டாபய ராஜபக் ஷவும், சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு அழைத்திருந்தார். அதனையும் அவர் நிராகரித்தார்.
அதற்குப் பின்னர் தான் ரணில் விக்கிரமசிங்கவை ராஜபக் ஷவினர் பிரதமராக்கினர். அதன் மூலமே அவர் ஜனாதிபதி பதவியை அடையவும் முடிந்தது.
பிரதமராகப் பதவியேற்கும்படி தன்னிடம் 70 தடவைகளுக்கு மேல் கோரப்பட்டதாக சஜித் பிரேமதாச பெருமையாக பலமுறை கூறியிருக்கிறார்.
அவர் இப்போது அரசாங்கத்தை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். விமர்சனங்களை முன்வைக்கிறார். பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில், ஒவ்வொரு நாளும் உரையாற்றிய அவர், அரசாங்கத்தை விளாசித் தள்ளிக் கொண்டேயிருந்தார்.
அவரது இந்தச் செயற்பாட்டினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே ஆடிப் போனார். அதனால் தான் அவர், வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, நெருக்கடியான நேரத்தில் நாட்டுக்கு தலைமை தாங்கும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவர்கள், வாய்ச் சவடாலில் ஈடுபடுகின்றனர் என்று சஜித்தை குத்திக் காட்டியிருந்தார்.
குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை நிராகரித்தவர் என்ற பெயர் தனக்கு சாதகமானது என்று கருதியிருந்தார் சஜித்.
ஆனால், பொருளாதார நெருக்கடியில் நாட்டை பொறுப்பேற்க மறுத்தார் என அவர் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கும் பிரசாரத்தை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்திருக்கிறார்.
இவ்வாறான நிலையில் மீண்டும் ரணிலுடன் மோதுவதை தவிர்த்துக் கொண்டால், துணிச்சல் இல்லாத, முதுகெலும்பற்ற அரசியல் தலைவராக அடையாளப்படுத்தப்படும் நிலை சஜித்துக்கு ஏற்படும்.
அதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தன்மானமாகவே பார்க்கும் நிலை உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அமைதியாக இருந்திருந்தால், சஜித் ஒருவேளை இறங்கி வந்திருக்க கூடும். அவரை சவாலை எதிர்கொள்ளத் துணிவில்லாத தலைவராக அடையாளப்படுத்த முயன்றதன் எதிர்விளைவு, இப்போது அவருக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
இனிமேல் சஜித் பிரேமதாசவை போட்டியில் இருந்து விலகச் செய்வது கடினமானது. அவ்வாறு போட்டியிடத் தயங்கினால், அவர் தலைமைத்துவத்துக்கு தகுதியற்றவர், போட்டிக்கு துணிச்சலில்லாத தலைவர் என்ற அடையாளம் நிலைத்து விடும்.
அவரது அரசியல் எதிரிகள் அத்தகைய தோற்றப்பாட்டை உருவாக்கி விடுவார்கள்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் போட்டியிட்டாலும், அதன் ஆதரவு இல்லாமல் போட்டியிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி தேர்தல் ஒன்றும் இலகுவானதாக இருக்காது.
பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாட்டை மீட்பது மட்டும் தான் தனது இப்போதைய இலக்கு என்று கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பை அமைச்சரவையில் வெளியிட்டிருக்கிறார்.
நாடு நெருக்கடியில் சிக்கியிருந்த நேரத்தில் அவர் நாட்டைப் பொறுப்பெடுத்தார் என்பது உண்மை.
வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டதாகவும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.
அடுத்த சில நாட்களிலேயே மத்திய வங்கி ஆளுநர் அதற்கு முரணான கருத்தை வெளியிட்டார்.
நாடு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதே தவிர, வங்குரோத்து நிலையை அடையவில்லை, அவ்வாறான அறிவிப்பு வெளியிடப்படவும் இல்லை என்று, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியிருந்தார்.
அவ்வாறாயின் நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்டார் என்பது மட்டுமே சரியானது, வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டார் என்று பெருமை கொள்ள முடியாது.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக் ஷவின் தவறான முடிவுகளால் நெருக்கடியில் சிக்கிய நாட்டை, ஓரளவுக்கு சரியான திசைக்கு திருப்பி விட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
இது மட்டும் அவரது வெற்றிக்குப் போதுமானதல்ல. அவர் நாட்டு மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தைப் பலப்படுத்துவது என்ற போர்வையில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து, அவர் எடுத்த பல முடிவுகள் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.
அந்த நெருக்கடியின் விளைவுகளை அவர் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சிங்கள மக்களின் ஆதரவு மட்டும் அவருக்கு போதாது, தமிழ் மக்களின் ஆதரவும் தேவை.
அதனைப் பெற்றுக் கொள்வதில் அவர் இதுவரை வெற்றி பெறவில்லை. அது அவருக்கு இலகுவானதாக இருக்கப் போவதும் இல்லை.
இத்தகைய கட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிக்கை, அரசாங்கத்தில் தாங்கள் அங்கம் வகித்தாலும், அரசாங்கத் தலைவரதும் அவரது கட்சியினதும் கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை என்று கூறியிருக்கிறார்.
முன்னர் தங்களின் அரசாங்கம் தான் நடக்கிறது என்று கூறிய மஹிந்த ராஜபக் ஷ, இப்போது, ரணிலின் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக கூறுகிறார்.
வற் வரி அதிகரிப்பு விவகாரம் அடுத்த தேர்தலில் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் அர்த்தம், அரசாங்கத்தின் வரி கொள்கையுடன் உடன்படவில்லை என்பது தான்.
ஆனால் வற் வரி அதிகரிப்பு மற்றும் வரவுசெலவுத் திட்டத்துக்கு பாராளுமன்றத்தில் தனது கட்சியின் ஆதரவுடன் ரணில் வெற்றி பெறவில்லை.
பொதுஜன பெரமுனவே இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தது.
ஆனால், இப்போது, அதனை ரணிலின் நடவடிக்கைகளாக அடையாளப்படுத்தி விட்டு ஒதுங்கப் பார்க்கிறார் மஹிந்த.
ரணில் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துக்காகவே ஆதரவை வழங்கியதாக அவர்கள் கூறலாம்.
அதேவேளை, தேர்தலில் அதனையே ரணிலுக்கு எதிரான ஆயுதமாகவும் ராஜபக் ஷவினர் மாற்றக் கூடும்.
இவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு போட்டியும் சவாலும் கடுமையானதாகவே இருக்கப் போகிறது.
Virakesari