எந்தவொரு செயலுக்கும் நோக்கம் இருக்கலாம். ஒன்றல்லாமல் பல நோக்கங்களும் இருக்கக்கூடும். இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் அழிப்பது தானென்றால், அழித்தொழிப்பது தானென்றால், அதற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததாக கருதலாம்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் 1,100 பேரை பலியெடுத்து, இரண்டு மாதங்கள் ஆகவில்லை. இதற்குள் இஸ்ரேலிய படைகள் தரைவழித் தாக்குதல் நடத்தியும், வான்வழியாக குண்டுகள் போட்டும் 20,000 பலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பெண்களும், சிறுபிள்ளைகளும் என காஸாவை நிர்வகித்த ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சு கூறுகிறது. இந்தத் தகவல்களை உலக சுகாதார ஸ்தாபனமும் ஏற்றுக் கொள்கிறது.
உயிரழிவு மாத்திரமல்ல, காஸாவில் கட்டடங்கள் தரைமட்டமாகி, மொத்தமாக 20 சதவீத நிலப்பரப்பு நிர்மூலமாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
காஸாவில் வாழும் மக்களில் பாதிப்பேர் பட்டினியால் வாடுகிறார்கள். அங்குள்ள மக்களில் 85 சதவீதமானவர்கள் வேலைவாய்ப்புக்களை இழந்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் நோய்கள் பரவுகின்றன. எங்கும் அழிவு, எதிலும் அழிவு
ஆனால், காஸாவைப் பொறுத்தவரையில் தமது நோக்கங்கள் பரந்துபட்டவை என்ற சித்திரத்தை வரையும் பிரசாரப் போரில் கடும்போக்கு அரசின் அமைச்சர்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.
நோக்கங்களின் அடிப்படையில், ஒவ்வொரு ஆயுதமோதல்களும் வித்தியாசமானவை. இஸ்ரேலின் காஸா யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு பல நாட்கள் கழிந்த பின்னரே இலட்சியங்கள் பட்டியலிடப்படுகின்றன. முழுமை பெற்ற இலட்சியங்கள் எனவும் கூற முடியாது.
ஹமாஸை இல்லாதொழிப்பதும், அதன் தலைவர்களை கைது செய்வதும் அல்லது கொல்வதும், ஹமாஸின் இராணுவ ஆற்றல்களை சிதைப்பதும், காஸாவில் ஹமாஸின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இஸ்ரேலின் முதன்மை நோக்கம்.
இது தவிர, ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மீட்க வேண்டும் எனவும் இஸ்ரேல் விரும்புகிறது.
இதுபோன்றே, லெபனானில் ஈரானின் கைப்பாவையாக இயங்கி வருவதாக தான் நம்பும் ஹிஸ்புல்லா, இன்னொரு தடவை கடும் தாக்குதலை நடத்தி விடாமல் தடுப்பதும் இஸ்ரேலின் நாட்டங்களுள் ஒன்று.
இது தவிர, சர்வதேச சமூகத்தின் – குறிப்பாக அமெரிக்காவின் – ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அரேபிய நாடுகளுடன் உடன்படிக்கை செய்து உறவை ஏற்படுத்தியதால் இராஜதந்திர ரீதியாக கிடைத்த நன்மைகளையும் பேண வேண்டும்.
தமது பாதுகாப்பு நிறுவனங்கள் மீது மக்கள் மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலைத் தொடர்ந்து, அது வேரோடு தகர்ந்தது. அந்த நம்பிக்கையை கட்டியெழுப்பும் தேவையும் இஸ்ரேலுக்கு உண்டு.
இந்த நோக்கங்கள் எளிதானவை அல்ல. சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நோக்கத்தை அடையவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றைய நோக்கத்தை சிக்கலாக்கலாம்.
உதாரணமாக, இஸ்ரேலியப் படைகள் ஹமாஸின் தரப்பில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை தான்.
ஆனால், இராணுவ நடவடிக்கை காஸாவில் பெரும் உயிர்ச்சேததத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்துவதுடன் நின்று விடவில்லை. அதன் விளைவாக மனிதப் பேரவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேல் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழந்து நிற்கிறது.
இஸ்ரேலின் அரசியல் தலைவர்களுக்கு சகல இலக்குகளையும் அடையும் பேராசை உண்டு. எனினும், இந்த இலக்குகளில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாலப்பொருந்தும்.
ஹமாஸை இல்லாதொழித்தல் என்பதை ஆராய்வோம். இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைப்பது ஹமாஸின் இராணுவ பிரிவைத் தான். இதில் 25,000 முதல் 30,000 வரையிலான அங்கத்தவர்கள் இருப்பார்கள் இஸ்ரேல் மதிப்பிடுகிறது.
இவர்களில் 7,000 பேரைக் கொன்றிருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினாலும், கொல்லப்பட்டவர்கள் யார் என்பதைத் தெளிவாக சொல்ல முடியாது.
இவர்களில் இஸ்ரேலியப் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிய சாமானிய பலஸ்தீன பிரஜைகளும் இருக்கலாம்.
இது தவிர, ஹமாஸ் என்பது வெறுமனே ஆயுதப்படை மாத்திரமல்ல. அதுவொரு கோட்பாடு. அந்தக் கோட்பாட்டை உயிர்ப்புடன் இருக்க படைப்பலம் தேவையில்லை. சுதந்திரம் என்ற உணர்வு வேரூன்றிய ஒரேயொரு பலஸ்தீன சிறுவன் எஞ்சியிருந்தாலும், ஹமாஸ் அடைய விரும்பும் கோட்பாடு உயிர்ப்புடன் தானிருக்கும்.
ஹமாஸ் என்பது காஸா மக்களது சமூக வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்ததாகவும் இருக்கிறது. எனவே, ஹமாஸின் இராணுவப் பிரிவை ஒழித்து விடுவதால் மாத்திரம் ஹமாஸை வேரோடு களைந்து விடும் இலட்சியத்தை இஸ்ரேல் அடைய முடியாது.
பணயக் கைதிகள் என்ற விவகாரத்திற்கு வருவோம். ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இயக்கம் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது.
இவர்களில் பாதிப் பேரேனும் விடுதலை செய்யப்படவில்லை. எஞ்சியவர்களில் 20 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என இஸ்ரேல் நம்பும் பட்சத்தில், 129 பேர் காஸாவில் இருக்கிறார்கள்.
இவர்கள் மிகப்பெரும் தலையிடி. பணயக் கைதிகளில் வெளிநாட்டவர்களும் இருப்பதால், இவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாமல் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது கத்தி மேல் நடப்பதை விடவும் சவாலான காரியம்.
இஸ்ரேலிய படைவீரர்களின் துப்பாக்கி ரவைகளுக்கும், குண்டுகளுக்கும் பணயக் கைதிகள் பலியானதாகக் கூறப்படும் சம்பவங்களும் உள்ளன.
கடந்த காலத்தில் பணயக் கைதிகளை விடுதலை செய்யப்பட்ட விதத்தை ஆராய்ந்தால், அது ஹமாஸ் இயக்கத்திற்கு சாதமாகவே இருந்திருக்கிறது.
2011இல் ஹமாஸ் இயக்கம் கடத்திய இராணுவ வீரரை பெறுவதற்காக, இஸ்ரேல் ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டியிருந்தது.
ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர், ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்த 100 பணயக் கைதிகளுக்கு பதிலாக பலஸ்தீனக் கைதிகள் 240 பேரை இஸ்ரேல் விடுதலை செய்ய நேர்ந்தது.
எஞ்சிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க விரும்பினால், ஹமாஸ் இயக்கத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரம் பேச வேண்டும். இது எளிதானது அல்ல.
அடுத்து ஹிஸ்புல்லா இயக்கம் பற்றிய இலட்சியம். இஸ்ரேலின் வடபகுதி எல்லைக்கு அப்பால் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேலின் மீது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தாக்குதலை நடத்திக் கொண்டு தானிருக்கிறது.
இந்தத் தாக்குதலைத் தடுப்பதைத் தவிர இஸ்ரேலியப் படைகளால் வேறொன்றும் செய்ய முடியாது.
ஏனெனில், எல்லைக்கு அருகில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் கமாண்டோ படையணிகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் படைகள் தூண்டுப்படும் பட்சத்தில், ஒக்டோபர் ஏழாம் திகதி காஸாவில் நடந்ததைப் போன்று வடக்கிலும் நடக்கலாம் என்ற அச்சம் இஸ்ரேலுக்கு உண்டு. ஹிஸ்புல்லா இயக்கம் எல்லை தாண்டினால், அதன் விளைவுகள் ஹமாஸை விடவும் பயங்கரமானதாக இருக்கும் என்பதை இஸ்ரேல் அறியும்.
அடுத்ததாக, இஸ்ரேலின் வெளிநாட்டு நட்புகளைப் பேணுதல் பற்றி பேசலாம். கணிசமான இராணுவ ஆற்றல் இருந்தாலும், இஸ்ரேல் ஒன்றும் பெரிய நாடல்ல.
அது நீண்ட நாட்கள் தனித்து இயங்க முடியாது. தம்மை ஜனநாயக நாடு என்று கருதிக் கொண்டு, மேலைத்தேய நாடுகளின் வலயத்திற்குள் தம்மைப் பொருத்திக் கொள்ள இஸ்ரேல் எப்போதும் பாடுபடுகிறது.
இந்த பிரயத்தனத்தில் விமர்சனங்களை ஏற்காமல் இருக்க முடியாது. இன்று இந்நாடு மேலைத்தேய நண்பர்களின் ஆதரவை இழந்து வருகிறது. இன்று ஐரோப்பா முழுவதும் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்.
இஸ்ரேல் விரும்பாத போர் நிறுத்தம் பற்றிய தீர்மானம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 அங்கத்துவ நாடுகளில் 17 நாடுகள் ஆதரவாகவே வாக்களித்தன. இது இஸ்ரேலுக்கு பின்னடைவு.
அமெரிக்காவின் முயற்சியால் பஹ்ரேன், மொரோக்கோ, சூடான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் சமீபத்தில் சமாதான உடன்படிக்கைகளை ஏற்படுத்தியது உண்மை தான்.
இன்று இந்நாடுகளின் தலைவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் இஸ்லாமிய கோட்பாடுகளை பெரிதாக விரும்புவது இல்லை.
இன்று இந்தப் பேதங்கள் மறந்து பலஸ்தீனர்களுக்காக குரல் கொடுக்கும் போக்கை காணக்கூடியதாக இருக்கிறது.
இது தவிர, அயல்நாடுகளில் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிரான பொதுக்கருத்து கடும்போக்கு திசைநோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது இஸ்ரேலின் இருப்பிற்கு சவால் விடும் விடயமாகக் கூட இருக்கலாம்.
இஸ்ரேல் காஸா மீது இராணுவ தாக்குதலைத் தொடங்கியபோது, காஸாவில் வாழும் பலஸ்தீனர்களின் எதிர்காலம் பற்றிய எந்தவொரு நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
ஹமாஸையும், காஸாவின் உட்கட்டமைப்பையும் நிர்மூலமாக்கி விட வேண்டுமென்ற முனைப்பிற்குள், அங்கு வாழும் மக்களின் எதிர்காலம் பற்றிய கரிசனைகள் விழுங்கிக் கொள்ளப்பட்டன.
இன்றும் கூட, ஹமாஸ் இல்லாத காஸாவின் எதிர்காலம் பற்றி பேசினாலும், அங்கு யார் வாழப் போகிறார்கள், எந்தவிதமான ஆட்சிக் கட்டமைப்பு இருக்கப் போகிறது, யார் ஆளப் போகிறார்கள் என்பதெல்லாம் இஸ்ரேலுக்கு பொருட்டல்ல.
ஒட்டுமொத்த உலகமும் காஸாவில் வாழும் பலஸ்தீனர்கள் மீது அக்கறை காட்டுகையில், அந்த மக்களின் இருப்பு பற்றியோ, எதிர்காலம் பற்றியோ கவலைப்படாமல் இருப்பது தான் இன்று இஸ்ரேலுக்கு மிகவும் பிரச்சனையாகி இருக்கிறது என்பதை மறக்க முடியாது.
இலக்கில்லாத இராணுவ நடவடிக்கையின் மூலம் இஸ்ரேல் பொறியொன்றில் சிக்கியிருக்கிறது, இதில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்படுகிறது என்பது தான் யதார்த்தம்.
–சதீஷ் கிருஷ்ணபிள்ளை-