கொலம்பியாவின் மனிஸேல்ஸ் நகருக்கு தென்-மேற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகள் ஆர்வலர் ஜான் முரில்லோ பறவை ஒன்றை கண்டபோது, அதில் ஏதோ ஒன்று தனித்துவமாக இருப்பதை உணர்ந்தார்.

இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஆண்-பெண் தன்மைகள் இரண்டுமே அந்த பறவையிடம் இருந்தன. அந்த இனத்தின் பெண் பறவைகளிடம் காணப்படுவது போன்று இடதுபுறத்தில் பச்சை நிற இறகுகளும் வலதுபுறத்தில் ஆண் பறவைகளை போன்று நீல நிற இறகுகளும் இருந்தன.

தான் கண்டுபிடித்ததை பரிணாம மரபியல் நிபுணரும் நியூசிலாந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான ஹேமிஷ் ஸ்பென்சரிடம் பகிர்ந்துகொண்டார்.

”மிகவும் உற்சாகமான தருணமாக அது இருந்தது. பறவை ஆர்வலர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் செலவழித்தாலும் காண முடியாத ஒன்று இது. ஆண்-பெண் தன்மைகளை ஒரே உடலில் கொண்டிருக்கும் இத்தகைய இனத்தை ஜான் முரில்லோவின் கண்டுபிடிப்பின் மூலம் பார்த்து நான் பயனடைந்ததை பெருமையாக நினைக்கிறேன்,” என அந்த சமயத்தில் கொலம்பியாவில் விடுமுறையை கழித்துக்கொண்டிருந்த ஹேமிஷ் ஸ்பென்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இத்தகைய அதிசயம் பறவைகளிடம் காண்பது மிக அரிதானது. தன் சொந்த நாடான நியூசிலாந்தில் இருந்து அப்படி ஒரு உதாரணம் கூட இல்லை என்கிறார் அவர்.

மிகவும் அரிதான சூழல்

“இந்த அரிதான சூழலில் ஒரு உயிரினம் ஒருபுறத்தில் ஆண் தன்மைகளையும் மற்றொரு புறத்தில் பெண் தன்மைகளையும் கொண்டிருக்கும்” என்கிறார் அவர்.

இந்த பறவை குறித்து பறவையினங்கள் குறித்து வெளியிடப்படும் ஆய்விதழான ’ஃபீல்ட் ஆர்னிதாலஜி’ எனும் இதழில் பேராசிரியர் ஹேமிஷ் ஸ்பென்சர், ஜான் முரில்லோ உள்ளிட்டோருடன் இணைந்து கட்டுரை எழுதியுள்ளார்.

“இந்த அதிசயம், அதிகளவில் விலங்குகளிடையே காணப்படுகிறது. அதில் பெரும்பாலானவை இருவகையான பாலியல் பண்புகளை கொண்டிருக்கும் (பெரும்பாலும் எளிதில் கண்டறிய முடியும்)” என்கிறார் அவர்.

இது, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த இனங்களில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உதாரணம்.

“பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். இது அவற்றின் பாலின நிர்ணயம் மற்றும் பாலியல் நடத்தை பற்றிய நமது புரிதலுக்கு முக்கியம்” என, ஒட்டாகோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பேராசிரியர் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார்.

“ஆனால், ஒருபுறம் ஆண் தன்மையும் மறுபுறம் பெண் தன்மையும் கொண்ட இந்த பறவையில், இருபுறமும் பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருக்கலாம்,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருபால் பறவையாக உருவெடுத்தது எப்படி?

“இருபால் இறகுகளை பறவைகள் கொண்டிருப்பது, உடல் முழுவதும் உள்ள ஹார்மோன் வேறுபாட்டைக் காட்டிலும் அதன் அருகே அமைந்திருக்கும் செல்களின் குரோமாசோம்கள் அமைப்பால் ஏற்படுகிறது,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது, பல்வேறு பூச்சியினங்களிடையே காணப்படுகிறது. குறிப்பாக, பட்டாம்பூச்சிகள், கணுக்காலிகள், சிலந்திகளிலும் பல்லி, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளிலும் காணப்படுகிறது.

இந்த நிகழ்வு “ஒரு முட்டையை உற்பத்தி செய்ய பெண்ணின் உயிரணுப் பிரிவின் போது ஏற்படும் பிழையிலிருந்து எழுகிறது, அதைத் தொடர்ந்து இரண்டு விந்தணுக்களால் இரட்டை கருத்தரித்தல் ஏற்படுகிறது” என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஹனி க்ரீப்பர் அதிசய பறவை  21 மாத கவனிப்பு

இரண்டாம் நிலை காடுகளின் பெரிய பகுதிகளைக் கொண்ட ஒரு பண்ணையான டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகளுக்கான உணவு நிலையம் உருவாக்கப்பட்டது.

அங்கு பறவைகளுக்கு புதிய பழங்கள் மற்றும் சர்க்கரை தண்ணீர் வழங்கப்படுகிறது. இது பறவைகளை கண்காணிக்க சிறந்த இடமாக உள்ளது.

இந்த பறவை அங்கு “குறைந்தபட்சம் 21 மாதங்கள் இருந்தது. மேலும் அதன் நடத்தை, மற்ற பச்சை ஹனி க்ரீப்பர் இன பறவைகளுடன் பொருந்துகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அப்பறவை, “மற்ற பறவைகளிடமிருந்து தனித்திருந்தது. மேலும், அதன் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுக்கு உணவளிக்க விடாமல் தடுத்தது,” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் அந்த பறவை அப்படி செய்கிறது என்பதை தங்களால் உறுதியாக கூற முடியவில்லை என ஆய்வாசிரியர்கள் சுட்டிக்காடுகின்றனர்.

“பொதுவாகவே அந்த இனத்தின் மற்ற பறவைகளை அந்த பறவை புறக்கணிக்கிறது. மற்ற பறவைகளும் அதை புறக்கணிக்கின்றன. எனவே, அந்த பறவைக்கு இனப்பெருக்கம் செய்வதற்கான எந்த வாய்ப்பும் கிடைத்திருக்காது” என அந்த அறிக்கை கூறுகிறது.

அந்த பறவை தன் வாரிசுகளை விட்டுச்செல்லா விட்டாலும் ஏற்கனவே விலங்குகள் ராஜ்ஜியத்தில் அதன் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply