புரதான இஸ்ரேலின் வம்சாவளியினராக விவிலியம் கருதும் இஸ்ரவேலர்கள். இந்த இஸ்ரவேலர்கள் எகிப்தியர்களிடம் பல தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கிறார்கள்.
அவர்களை மோசே தலைமையில் மீட்டெடுக்கிறார், ஆண்டவர். எகிப்தை விட்டு வெளியேறச் செய்வது திட்டம். இரவு நேரத்தில் செங்கடலுக்கும் பாலைவனத்திற்கும் இடையில் இஸ்ரவேலர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள்.
எகிப்தின் பாரோ மன்னனுக்கு கோபம் வருகிறது. நமக்கு சேவகம் செய்தவர்கள் தப்பிச் செல்கிறார்களே என்று ஆத்திரப்படுகிறான்.
இஸ்ரவேலர்கள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக, 600 பேர் கொண்ட படையைத் திரட்டி வருகிறான்.
படைகள் மக்களை நெருங்குகின்றன. மக்கள் அழுகிறார்கள். படைகளிடம் சிக்கி மடிவதை விடவும், அடிமைகளாக வாழ்வது மேல் என்று மோசஸிடம் முறையிடுகிறார்கள். ஆண்டவர் மோசேயிற்கு கட்டளையிடுகிறார். மோசே கைத்தடியை கடலை நோக்கி உயர்த்துகிறார். கடல் இரண்டாகப் பிரிகிறது. காற்று நிலத்தை உலரச் செய்கிறது.
இஸ்ரவேலர்கள் உலர்ந்த தரைமேல் நடந்து தப்பிக்கிறார்கள். இருபுறங்களிலும் கடல்நீர் மதிற்கோட்டை போல உயர்ந்து உறைந்து நிற்கிறது.
மக்கள் கடலை கடக்கிறார்கள். பாரோவின் படைகள் பின்தொடர்கின்றன. கடலை நோக்கி கையை உயர்த்துமாறு மோசேயிற்கு கடவுள் கட்டளையிடுகிறார்.
கடல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. தண்ணீர் புரண்டு பாரோவின் படைகளை அடியாழத்தில் மூழ்கடித்து விடுகிறது.
அனைவரும் ஆண்டவரின் சக்தியை உணர்கிறார்கள். மோசேயின் சகோதரி கடவுளைப் பாடுகிறாள்.
இது செங்கடல் பிரிந்த கதையை விவிலியத்தின் பழைய ஏற்பாடு விபரிக்கும் கதையின் சாராம்சம்.
கடவுளின் கட்டளைக்கு அமைய பிரிந்து நின்று இஸ்ரவேலர்கள் தப்பிக்க உதவி செய்த செங்கடல், மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
யேமன் மண்ணில் இருந்து ஆயுதமேந்திப் போராடும் ஹெளத்தி இயக்கம். அதற்கு சக்தி இருந்தால் செங்கடலைப் பிரித்து இஸ்ரேலிய கப்பல்களை மூழ்கடித்திருக்கும்.
ஆண்டாண்டு காலம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காஸா மக்கள் மீதான கரிசனையை சுயபிரகடனம் செய்த இயக்கம்.
இந்த இயக்கம் சமகால இஸ்ரேலிய இராஜ்ஜியத்தின் பிரஜைகளுக்கு எந்தவகையிலேனும் உதவியாக அமையக் கூடிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்து வருகிறது.
பலஸ்தீனர்கள் மீதான அக்கிரமத்தை நிறுத்தும் வரையில், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீதான தாக்குதல் ஓய மாட்டாதென ஹெளத்தி இயக்கம் சூளுரைத்துள்ளது. அன்று இஸ்ரவேலர்களுக்காக பிரிந்து நின்று வழிவிட்ட செங்கடல், இன்றைய இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்களின் பிரதான பயண வழி.
அது மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் எரிபொருளையும் தானியங்களையும் கொண்டு செல்லும் வணிகக் கப்பல்களுக்கும் பிரதான பயண மார்க்கம்.
பலஸ்தீனர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலகிற்கு உரத்துக் கூற, ஹெளத்தி இயக்கம் செங்கடலில் வணிகக் கப்பல்களையும் தாக்கியது.
இதன் காரணமாக, செங்கடலில் பயணித்து சுயஸ் கால்வாய் ஊடாக செல்ல வேண்டிய கப்பல்கள், ஆபிரிக்க கண்டத்தை சுற்றிப் பயணிக்க நேர்ந்தது.
இது செங்கடல் பிரிந்து பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் தப்பிக்க வழி கொடுக்கும் காலம் இல்லையே. சுற்றிச் சென்றால், கப்பல்கள் அதிக கட்டணம் வசூலிக்கும் காலம்.
அது தவிர, ஆபத்து உண்டென்றால், கப்பல்களை காப்பீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். கம்பனிகள் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் ஹெளத்தி இயக்கம் வணிகக் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, செங்கடலில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சரக்குக் கப்பல் போக்குவரத்து குறைந்து உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை தோன்றியிருக்கிறது.
சமகாலத்தில், இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக இருப்பதும், எங்கும் பிரசன்னமாக இருப்பதும் வேறு யாருமல்ல. அமெரிக்கா தான்.
ஹெளத்தி இயக்கத்திடம் இருந்து செங்கடலையும், கப்பல்களையும், இஸ்ரேலியர்களையும் பாதுகாக்க அமெரிக்கா ‘சுபீட்சத்தின் காவல் தெய்வங்களை’ அழைத்தது.
ஆம், செங்கடலில் கப்பல்களைப் பாதுகாக்க பல நாடுகளை அழைத்து அமெரிக்கா அமைத்த கூட்டணியின் பெயர் அது தான். ஆங்கிலத்தில் Operation Prosperity Guardians.
செங்கடலில் கப்பல்களைக் காக்க அமெரிக்கா என்ற ஆபத்பாந்தவன், காவல் தெய்வங்களாக கருணை காட்டுமாறு 39 நாடுகளுக்கு அழைப்பு விடுத்தாலும், அதில் இணைந்ததென்னவோ பத்து நாடுகள் தான்.
அவற்றில் பிரிட்டன், பஹ்ரேன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, சீஷெல்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளும் உண்டு.
ஹெளத்தி இயக்கத்தை வில்லத்தனம் புரியும் அரக்கன் என்றால், அதற்கு எதிரான செங்கடல் யுத்தத்துக்கு அனைவரையும் அழைக்க வேண்டும் அல்லவா?
யாரை அழைத்தாலும் சீனாவை அமெரிக்கா அழைக்காது. சீனாவின் செல்வாக்கு அதிகம். செங்கடலில் சீனக் கப்பல்களின் பிரசன்னமும் அதிகம்.
இருந்தபோதிலும், இந்த உலகில் இரு ஆபத்பாந்தவர்கள் இருக்க முடியாது அல்லவா? தான் மட்டுமே ஆபத்பாந்தவனாகத் திகழ விரும்பும் அமெரிக்காவின் சுயநல அரசியல். செங்கடலில் வணிகக் கப்பல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின் கூட்டணி என்ன செய்யும்? அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்.
உலகின் வெவ்வேறு கடற்பாகங்களில் இத்தகைய கூட்டணிகளை அமைத்து, கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன.
சோமாலியாவிற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க ஐரோப்பிய நாடுகள் ஸ்தாபித்த கடற்படைக் கூட்டணி சிறந்த உதாரணம்.
செங்கடலின் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க கூட்டணி அமைப்பது ஆக்கபூர்வமான செயலாக அமெரிக்கா வர்ணிக்கலாம்.
ஆனால், சீனா போன்ற ஜாம்பவான்களை விலக்கி வைத்து விட்டு சர்வதேச பாதுகாப்பு பற்றி பேசுவது எந்தளவு நியாயம் என்பது தெரியவில்லை.
இப்போது செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் என்பது, சோமாலிய கடற்கொள்ளையர்கள் போன்றதொரு பிரச்சினை அல்ல.
இது காஸாவில் நிகழும் மனிதப் பேரவலத்தை நிறுத்தக் கோரும் எத்தனிப்பின் அடிப்படையிலான பிரச்சினை.
வரலாற்றுக் காலத்தில் எகிப்தியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் காப்பாற்ற ஆண்டவனின் துணையுடன் மோசஸ் முன்வந்ததை வரவேற்கலாம்.
காஸாவில் வாழும் பலஸ்தீனர்களைக் காப்பாற்ற இதுவரை எந்தவொரு மோசஸும் வரவில்லை. அந்த மக்கள் தப்பிப்பதற்காக செங்கடலும் பிளவுபடுவது கிடையாது.
இருந்தபோதிலும், பலஸ்தீன மக்கள் மீதான அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக மக்கள் கூட்டாக கோரிக்கை விடுக்கிறார்கள். அந்தக் கோரிக்கைக்கு வன்முறை வடிவமொன்று இருக்குமாயின், அதுவே ஹெளத்தி இயக்கத்தின் தாக்குதல்கள் என்று கூற முடியும்.
எனவே, பிரச்சினை காஸாவில் வாழும் பலஸ்தீனர்கள் என்றால், அதற்குரிய தீர்வு காஸாவை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும். கடற்படை பாதுகாப்புக் கூட்டணியை அதுவும் சிக்கலானதொரு கூட்டணியை அமைப்பது இராணுவ பலத்தைக் காட்டும் பொருத்தமற்ற நடவடிக்கை.
இராணுவ பலத்தில் மிகையாக தங்கியிருப்பதை விடவும் அரசியல் பேச்சுவார்த்தைகளை, கலந்துரையாடல்களை மேற்கொள்வதே பொருத்தமானது.
இன்று செங்கடல் போக்குவரத்துப் பிரச்சனையால் பதற்றநிலை அதிகரித்துள்ளது. பொருளாதார ஸ்திரமற்ற நிலை தீவிரம் பெறுகிறது.
இத்தகைய பின்புலத்தில் பயன்தரக்கூடிய இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம். அவை பிரச்சினையின் மூலமான காஸாவின் அவல நிலையை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும்.
காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை அனுமதித்து, இஸ்ரேலின் முற்றுகையை நிறுத்த வேண்டும் என்பது ஈரானின் உதவியுடன் இயங்குவதாகக் கூறப்படும் ஹெளத்தி இயக்கத்தின் கோரிக்கை.
இந்தக் கோரிக்கை ஒட்டுமொத்த உலகம் கொண்டுள்ள பொதுவான அபிலாஷையின் பிரதிபலிப்பாக இருந்தபோதிலும், இதற்குள் மிகவும் சிக்கலான புவிசார் அரசியலின் நீரோட்டங்களை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த நீரோட்டங்கள் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக மாறுவதைத் தடுக்க வேண்டும்.
அதற்குப் பொருத்தமான வழி, பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய புதிய வழிமுறைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது தான்.
மலரும் புதுவருடத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் உலகம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், காஸா மக்களின் பேரவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதி வழியில் பிரச்சினையை தீர்ப்பது மாத்திரமே சிறப்பான அணுகுமுறையாக இருக்கும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை