ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களில், அதிகளவு ஆதரவை பெற்றவர் யார் என அறியும் கருத்துக் கணிப்புகளில், கடந்த பல மாதங்களாக முன்னணியில் இருந்து வருபவர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க.
அவருக்கு மாத்திரமன்றி அவரது தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் ஆதரவு அதிகளவில் இருந்து கொண்டிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.இந்த கருத்து கணிப்புகளில் உள்நோக்கம் இருப்பதாகவும், வெளியக செல்வாக்குகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்தாலும்- ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் அநுரகுமார திசாநாயக்கவும், தேசிய மக்கள் சக்தியும் – போட்டி மிக்க , தவிர்க்க முடியாத சக்திகளாக இருக்கப் போவது உண்மை.
இவ்வாறான சூழலில் அநுரகுமார திசாநாயக்க, தன்னைப் பலப்படுத்திக் கொள்வதில் தொடர்ந்தும் ஈடுபட்டிருக்கிறார்.
மாத்தறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் படை அதிகாரிகளின் மாநாடு ஒன்று தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த மாநாட்டில் அநுரகுமார உரையாற்றிய போது, இரண்டு முதன்மையான விடயங்களை முக்கியமாக குறிப்பிட்டிருந்தார்.
“வடக்கு மக்களை சமஷ்டித் தீர்வு, 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம் , அதிகாரப்பகிர்வு தருகிறோம் என்று அழைக்கக்கூடாது, பேரிடரில் இருந்து மீள ஒன்றாக இணைந்து போராடுவோம் என அழைக்க வேண்டும்”
– இது அவர் கூறிய முதலாவது விடயம்.
“இந்திய ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி முழு நாட்டையும் ஒன்றாக இணைக்கும் வரலாற்றை எழுதும்போது, இலங்கை ஆட்சியாளர்கள் மோதல் வரலாற்றையே எழுதும் நிலையை உருவாக்கியுள்ளனர்”.
-இது அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்ட இரண்டாவது விடயம்.
இந்த இரண்டும் பரந்துபட்ட பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கியவை என்பதுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.
அநுரகுமார திசாநாயக்க அண்மையில் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக, அதிகாரப்பகிர்வு தொடர்பாக, சாதகமான சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், அநீதியானவை என்றும், இனரீதியான அந்த வன்முறைகளே நாட்டை போருக்குள் தள்ளியது என்றும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.தமிழ் மக்களுக்கு நியாயமான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், அவர் கூறியிருந்தார்.
ஆனால் மாத்தறையில் முன்னாள் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர், வடக்கு மக்களை அதிகாரப்பகிர்வு தருவதாக அழைக்கக்கூடாது என்றும், பேரிடரில் இருந்து மீள ஒன்றாக இணைந்து போராடுவோம் என அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் தமிழ் மக்கள் என்று குறிப்பிடவில்லை, வடக்கு மக்கள் என்றே கூறியிருக்கிறார்.
வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழரின் தாயகம். இந்திய –- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு ,கிழக்கு மாகாணத்தை, உயர்நீதிமன்றம் சென்று தனித்தனியாக பிரித்தது அநுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி. தான்.
கடந்தவாரம் மரணமடைந்த எச்.எல்.டி. மஹிந்தபால, சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர போன்ற பேரினவாத சிந்தனையாளர்களின் ஆதரவும் அதற்கு இருந்தது.
சிங்களப் பேரினவாத சக்திகளின் பிரதிநிதியாகவே ஜே.வி.பி, வடக்கு, கிழக்கு பிரிப்பை செய்து முடித்தது.
இப்போதும் வடக்கு, கிழக்கை ஒருங்கிணைந்த பகுதியாக அநுரகுமார திசாநாயக்க கருதவில்லை என்பதையே அவரது மாத்தறை உரை உணர்த்துகிறது.
வடக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலா ஷைகளையும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளையும்- “தமிழ் மக்களின் அபிலாஷைகளாக” அடையாளப்படுத்த அவர் தயாராக இல்லை.
வடக்கு மக்கள் என்று குறிப்பிட்டதன் மூலம், தமிழ் மக்களை பிரித்து வைக்கும் சிங்கள- பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இருந்து கொண்டே அவரும் செயற்படுகிறார் என்று தெரிகிறது.
அடுத்து, தமிழ் மக்களுக்கு சமஷ்டியை, 13ஆவது திருத்தத்தை தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்து அரவணைத்துக் கொள்ள அவர் தயாராக இல்லை என்பதும் உறுதியாகிறது.
தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட அநுரகுமார திசாநாயக்கவினால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன என்று கூறுகின்ற – அந்த தீர்வைத் தருவதாக வாக்குறுதியை முன்வைக்கும் திராணி இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
நாட்டை பேரிடரில் இருந்து மீட்க ஒன்றுபடுமாறு அழைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது, முற்றிலும் சுயநல நோக்கம் கொண்டது.
ஏனென்றால், நாட்டை பேரிடரில் தள்ளியது தமிழர்கள் அல்ல. அதனை முற்று முழுதாக செய்து முடித்தது, சிங்கள பேரினவாதமும் , அதனை முன்னெடுத்த ஆட்சியாளர்களும், அவர்களை உருவாக்கிய சிங்கள மக்களும் தான்.
சிங்கப்பூருக்கு முன்னுதாரணமாக விளங்கிய இலங்கைத் தீவை, சோமாலியாவை விட மோசமாக ஒப்பிடக் கூடிய நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்கள் அவர்கள் தான்.
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளும், இனப்படுகொலைகளும், அடக்குமுறைகளும், அதிகாரத்துவமும் பெரும் போர் ஒன்றுக்குள் நாட்டை இட்டுச் சென்றது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்துப் போட்டது அந்தப் போர்.
போருக்கு பின்னர் செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்த சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல சிங்கள மக்களுக்கும் துரோகம் இழைத்தனர்.
ஊழல், மோசடிகள், மோசமான ஆட்சி நிர்வாகத்தின் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடையச் செய்து வரலாறு காணாத வீழ்ச்சிக்குள் கொண்டு சென்றனர்.
இந்தப் பேரிடரில் இருந்து நாட்டை மீட்பதற்குத் தான், ஒன்றிணைந்து வருமாறு தமிழர்களை அழைக்க வேண்டும் என அநுரகுமார திசாநாயக்க கூறி இருக்கிறார்.
அவ்வாறு அழைக்கக் கூடிய எந்த உரிமையும் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட, எந்தவொரு சிங்கள அரசியல்வாதிக்கும் கிடையாது.
ஏனென்றால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போருக்கும், அது சார்ந்த அட்டூழியங்களுக்கும் அவர்கள் அனைவரும் துணை போனவர்கள். துணையாக இருந்தவர்கள்.
போரைத் தூண்டி விட்டவர்களும், போரை நடத்தியவர்களும் எந்த முகத்துடன் , பேரிடரில் இருந்து நாட்டை மீட்க முன்வாருங்கள் என்று தமிழர்களை அழைக்க முடியும்?
போரில் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களும், அதற்கு தடையாக இருப்பவர்களும் எவ்வாறு அத்தகைய அழைப்பை விடுக்க முடியும்?
போருக்கு பின்னர் 15 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றை வழங்க முன்வராதவர்கள், எவ்வாறு அத்தகையை அழைப்பை விடுக்கும் திராணி கொண்டவர்களாக இருப்பார்கள்.
அநுரகுமார திசாநாயக்க, முற்போக்கு சிந்தனை கொண்டவராக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டின் எரியும் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றை முன்வைக்காமல், தமிழ் மக்களுக்கு நீதியான, தீர்வு ஒன்றை முன் வைக்காமல்- அவர்களை கைகோர்க்குமாறு அழைக்க முடியாது.
இந்த அரசியல் யதார்த்தம் அவருக்கு புரியவில்லையா- அல்லது புரிந்து கொண்டும் வடக்கில் ஒரு மாதிரியும் தெற்கில் ஒரு மாதிரியும் பேசுகிறாரா என்று தெரியவில்லை.
இந்திய ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி முழு நாட்டையும் ஒன்றாக இணைக்கும் வரலாற்றை எழுதும்போது, இலங்கை ஆட்சியாளர்கள் மோதல் வரலாற்றையே எழுதும் நிலையை உருவாக்கியுள்ளனர் என்ற அவரது கருத்து சரியானதே.
பல்வேறு மொழிகளை பேசுகின்ற, பல்வேறு இனங்களைக் கொண்ட மக்களை இந்தியா முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கிறது.
இந்தியா அரை சமஷ்டியை கொண்டிருந்தாலும், முக்கால் நூற்றாண்டு காலம் எந்த பிளவுகளும் இல்லாமல் நாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது.
அதற்கு பிரதான காரணம் அதிகாரப்பகிர்வு தான். அங்கு மத்திய அரசுக்கு அதிகளவு அதிகாரம் இருந்தாலும், மாநிலங்கள் கூடுதல் அதிகாரங்களை பெற்றவையாக இருக்கின்றன.
அவற்றுக்கு இணையாகவேனும், ஒரு அதிகாரப்பகிர்வு முறையை இலங்கையினால் உருவாக்க முடியவில்லை.
இந்தியா தேசிய ஒற்றுமை ஊடாக நாட்டை ஒருங்கிணைத்திருப்பதை வரவேற்றிருப்பதன் மூலம், இந்திய சார்பு நிலையை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கிறார் அநுரகுமார திசாநாயக்க.
ஆனால், அவரது கட்சியினரோ, வடக்கில் சீனாவின் நிவாரணப் பொதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தீவில் மோதலை உருவாக்கி விட்டது ஆட்சியாளர்களாக இருக்கலாம். அந்த மோதல்களுக்கு ஜே.வி.பியும், பின்புல காரணமாக இருந்தது.
குறிப்பாக 2006 இல், மீண்டும் போருக்குள் நாட்டைத் தள்ளுவதில் ஜே.வி.பிக்கு இருந்த பங்கு எவராலும் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.
கடந்த காலத் தவறுகளை உணர்ந்தவர்களாலும், அந்த தவறுகளை ஏற்றுக் கொண்டு, பரிகார நீதியை வழங்க கூடியவர்களாலும் தான், தமிழ் மக்களை அரவணைத்துச் செல்ல முடியும்.
அத்தகைய தகமை, அநுரகுமார திசாநாயக் கவுக்கு வந்து விட்டதாக கூறமுடியாது.