காஸாவின் தெற்கு நகரமான ரஃபா மீது ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை இஸ்ரேல் பாரிய வான்வழி குண்டுவீச்சை நடத்தியது, இதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சூரியன் உதயமானபோது, வரும் வாரங்களில் என்ன நடக்கவிருக்கிறது என்பதற்கு உறைய வைக்கும் காட்சியாக, குழந்தைகளின் சிதைந்த உடல்களின் காட்சிகளால் உலகமே மிரண்டு போனது.


பிப்ரவரி 12, 2024 திங்கட்கிழமையன்று, ரஃபாவில் உள்ள மருத்துவமனை பிணவறையில் காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினர்களுக்கு பாலஸ்தீனியர்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். [AP Photo/Fatima Shbair]

வார இறுதியில், இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு முற்றுகையிடப்பட்ட அந்நகருக்கு எதிராக ஒரு முழு அளவிலான இராணுவ தாக்குதலை நடத்த சூளுரைத்தார்,

“எங்கள் இலக்கு … அது முழுமையான வெற்றி.” இஸ்ரேலிய ஆட்சியைப் பொறுத்தவரை, “முழுமையான வெற்றி” என்பது முடிந்தவரை பல பாலஸ்தீனியர்களைக் கொல்வதும் மீதமுள்ளவர்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து விரட்டுவதும் ஆகும்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் —காஸாப் பகுதியின் மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதியளவு— ரஃபாவில் கூட்டம் கூட்டமாக உள்ளனர்,

இவர்களில் பெரும்பாலானவர்கள் சுத்தமான தண்ணீர், உணவு அல்லது கழிவுநீர் அமைப்புமுறைகள் கூட இல்லாத சுகாதாரமற்ற கூடாரங்களில் வாழ்கின்றனர்.

மருத்துவமனை அமைப்பு சீர்குலைந்துவிட்டதால், நோய் கட்டுக்கடங்காமல் பரவுகிறது, பட்டினி அதிகரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகின் பசியால் வாடும் மக்களில் ஐந்தில் நான்கு பேர் தற்போது காஸாவில் வசிக்கின்றனர்.

ரஃபா மீதான முழு அளவிலான தாக்குதல், காஸாவில் இறப்பு எண்ணிக்கையை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும், அங்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சுகளும், முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட பாரிய வெகுஜனப் படுகொலைகள் 35,000 க்கும் மேலானவர்களைக் கொன்றுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நிர்வாகம் ஒப்புதலை வழங்கிய வெறும் ஒரு நாளுக்குப் பின்னர், ரஃபா மீதான இந்த இரவுநேரப் படுகொலை நடந்தது, ரஃபாவிலிருந்து வெளியேற்றும் தாக்குதலுக்கு ஒரு ‘திட்டம்’ தேவை என்ற அறிவிப்புடன் தாக்குதல் ‘தொடங்க முடியாது’ என்ற கூற்றையே இது மாற்றுகிறது.

வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட பைடெனுக்கும் நெதன்யாகுவிற்கும் இடையிலான தொலைபேசி அழைப்பின் அறிக்கையின்படி, “ஹமாஸ் தோற்கடிக்கப்படுவதைக் காண்பதற்கும் இஸ்ரேல் மற்றும் அதன் மக்களின் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எங்கள் பகிரப்பட்ட இலக்கை பைடென் மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று ஜோர்டானின் அரசர் இரண்டாம் அப்துல்லா உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, பைடென் இந்த வெற்று நிபந்தனையை மீண்டும் கூறினார்,

அதேவேளை ‘ரஃபாவில் எமது இராணுவ நடவடிக்கை’ என்று குறிப்பிடும் அவரது ‘தவறுகளில்’ ஒன்று அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது.

இது உண்மையில் “நமது இராணுவ நடவடிக்கை” — அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருங்கிணைப்புடன் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். பைடென் இதை “எங்கள் இனப்படுகொலை” எனச் சரியாக அழைக்க முடியும்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உருவாக்கப்பட்ட இந்தத் “திட்டம்” வடிவம் பெற்றதாகத் தெரிகிறது, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டது, “இஸ்ரேலிய வெளியேற்ற முன்மொழிவில் காஸா பகுதியின் தென்மேற்கு பகுதி முழுவதும் தலா 25,000 கூடாரங்கள் கொண்ட 15 முகாம்களை நிறுவுவதும் அடங்கும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.”

கூடார நகரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் கூட்டாளிகளால் நிதியளிக்கப்படும், சர்வாதிகாரி எல்-சிசி தலைமையிலான எகிப்தால் இயக்கப்படும் என்று ஜேர்னல் எழுதியது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவின் நேரடி உடந்தையுடனும், நிதி மற்றும் பங்கேற்புடனும், ஒரு மில்லியன் நோய்வாய்ப்பட்ட, பட்டினியால் வாடும் மற்றும் களைப்படைந்த மக்கள் பாலைவனம் முழுவதும் அணிவகுப்பாக அழைத்துச் செல்லப்பட்டு கூடார நகரங்களுக்குள் நெரிசலாக அடைக்கப்படுவார்கள்.

குறிப்பிடத்தக்க வகையில், ரஃபாவை “வெளியேற்றுவதில்” ஐக்கிய நாடுகள் சபை பங்கேற்குமா என்று கேட்கப்பட்ட போது, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “மக்களை பலவந்தமாக இடம்பெயரச் செய்வதில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க மாட்டோம்,” என்று அறிவித்தார்,

“இப்போதுள்ள நிலையில், காஸாவில் தற்போது எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

இந்த “பலவந்தமான இடப்பெயர்வுக்கு”, அதாவது இனப்படுகொலை மற்றும் இன சுத்திகரிப்பில் அமெரிக்கா துல்லியமாக ஒரு தரப்பாக உள்ளது என்பதே இதன் தெளிவான உட்குறிப்பு ஆகும்.

கடந்த 24 மணி நேர நிகழ்வுகள் எந்த அளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் காஸா இனப்படுகொலையில் நேரடியாக உடந்தையாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

பைடென் நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் இஸ்ரேல் எந்த முக்கியமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை, அது வெறுமனே நிதியுதவி மற்றும் ஆயுதம் கொடுப்பது மட்டும் இல்லாமல், காசா மக்களை வெகுஜனப் படுகொலை செய்வதற்கு அரசியல்ரீதியாக வழிநடத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் காஸா படுகொலை பங்களிப்பினால் அவரது ஆதரவு சரிவின் மத்தியில், வாரயிறுதியில் அமெரிக்க அரசியல் நெருக்கடி பெருமளவில் தீவிரமடைந்துள்ள நிலையிலும், இனப்படுகொலைக்கான தனது ஆதரவை பைடென் மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பாக அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

கடந்த வாரம், நியூ யோர்க் டைம்ஸ் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஜோன் ஃபைனர் நடத்திய ஒரு கூட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டது, அவர் மிச்சிகன், டியர்போர்னில் அரபு அமெரிக்க அரசியல்வாதிகளின் ஒரு குழுவிடம் நிர்வாகமானது இஸ்ரேலுக்கு அதன் வெளிப்படையான ஆதரவில் தொடர்ச்சியான “தவறான நடவடிக்கைகளை” செய்துள்ளது என்று கூறினார்.

டைம்ஸ் செய்தியின்படி, ஃபைனர் இவ்வாறு கூறினார், “ஜனாதிபதி, நிர்வாகம் மற்றும் நாடானது பாலஸ்தீனியர்களின் உயிர்களை எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதற்கு முற்றிலும் போதுமானதாக இல்லாத பொதுக் கணக்கீட்டின் அடிப்படையில் நாங்கள் மிகவும் சேதப்படுத்தும் தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளோம்.”

“இஸ்ரேலின் இப்போதைய அரசாங்கத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை” என்பதையும் சேர்த்துக் கொண்ட அவர், இஸ்ரேலிய அரசியல்வாதிகள் “காஸாவில் வசிப்பவர்களை விலங்குகளுடன் ஒப்பிட்டனர்”, அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து எந்தவொரு விமர்சனமும் இதற்கு இல்லை. “அந்த வகையான உணர்வுகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரித்தோம் மற்றும் உடன்படவில்லை என்பதை நாங்கள் போதுமானளவுக்கு சுட்டிக்காட்டவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

இருப்பினும், பைடெனின் நடவடிக்கைகள் ஃபைனரின் வார்த்தைகளை விட சத்தமாக பேசுகின்றன.

வெள்ளை மாளிகையால் பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு பகிரங்கமாக மனிதாபிமானமற்றவர்களாக சித்தரிப்பது, காஸாவில் நெத்தனியாகுவின் படுகொலைக்கு பைடென் நிர்வாகத்தின் ஆதரவில் இருந்து துல்லியமாக ஊற்றெடுக்கிறது.

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் கையைப் பிசைவதும் இதேபோல் செல்கிறது, அவர்கள் இஸ்ரேலின் கொள்கையின் சில அம்சங்களை விமர்சித்துள்ளனர், அதேவேளையில் உண்மையில் இனப்படுகொலைக்கு ஆதரவும் நிதியும் வழங்குகின்றனர்.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான ஆதரவை பைடென் நிர்வாகம் அதன் மத்திய கிழக்கு மூலோபாயத்தின் முக்கிய அம்சமாக பார்க்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அக்டோபர் 7 நிகழ்வுகளை பயன்படுத்தி மத்திய கிழக்கு முழுவதிலும் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட இராணுவ தாக்குதலை நடத்தியது, இது ஏற்கனவே ஈராக், சிரியா மற்றும் யேமன் மீது குண்டுவீச்சுக்கு வழிவகுத்ததுடன், இது இறுதியில் ஈரானுடன் ஒரு நேரடி மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

ஈரான் உடனான மோதலே ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான உலக மேலாதிக்கத்திற்கான ஓர் உலகளாவிய போராட்டத்தின் பாகமாகும், பைடென் நிர்வாகம் எதை “தீர்மானகரமான தசாப்தம்” என்று அழைத்ததோ, அது “பிரதான சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் போட்டியின் விதிமுறைகளை” அமைக்கும்.

ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் ஆதரிக்கப்படும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சூறையாடும் நலன்களுக்காக பேசும் பைடென், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இன்னும் ஆழ்ந்த தேவைகளால் உந்தப்படுகிறார்,

இது போரை அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்தையும் அமெரிக்க டாலரின் உயிர்வாழ்வையும் தூக்கி நிறுத்துவதற்கான ஒரு வழிவகையாக பார்க்கிறது.

ஈரான், ரஷ்யா, சீனா அல்லது இந்த மூன்றுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியம் எந்த அளவுக்கு ஒரு முழு அளவிலான போரை நடத்தும் என்பது குறித்த ஒரு காட்சியை காஸாவில் கட்டவிழ்ந்து வரும் கொடூரங்கள் மனித இனத்திற்கு வழங்குகின்றன.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக கடந்த நான்கு மாதங்களாக முடிவில்லாத மற்றும் அதிகரித்துவரும் மிருகத்தனமும் காட்டுமிராண்டித்தனமுமானது, ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் நிறுவனத்தின் எந்தப் பிரிவிற்கும் அழைப்புவிடுவது பயனற்றது என்பதை நிரூபித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டிக்கும் அதன் அறிக்கைகள் எதுவாக இருந்தாலும், ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சக்திகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நிற்கும் ஐக்கிய நாடுகள் சபையில் தங்கியிருக்க முடியாது.

ரஃபா மற்றும் இனப்படுகொலை மீதான வரவிருக்கும் தாக்குதலை நிறுத்துவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

இது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும்.

காஸாவில் நடந்த இனப்படுகொலை அதன் மிகக் கொடூரமான வடிவத்தில் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனமாகும். இனப்படுகொலைக்கு எதிரான போராட்டம் எப்படி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமோ, அதேபோல் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் அவசியமாக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்,

தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், உலக அளவில் பொருளாதார வாழ்வை சோசலிச முறையில் மறுஒழுங்கமைப்பதற்குமான போராட்டமாகும்.

Share.
Leave A Reply