நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.
நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது.
வாசகர்களே, கர்மாவில் இருந்து தப்பித்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் நமக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் மூச்சை மூன்று வகைகளாக சொல்வார்கள். அவை, மேல் மூச்சு, நடு மூச்சு மற்றும் அடி மூச்சு என்பர். மேல் மூச்சு என்பது உணர்ச்சிவயப்பட்டநிலை, மனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும்.
மேல் மூச்சு என்பது நுரையீரலுடைய மேல் பகுதியை மட்டும் இயக்கும். இதனால் மூச்சின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்படி மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு அதிகரிக்கும்போது நம்முடைய ஆயுள் குறைந்துவிடும்.
அடிப்படையாக, நம் மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு என்ற அளவில் இருக்கும்போது, இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் நமக்கு கிட்டும். ஆனால், மேல் மூச்சில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.
நடு மூச்சு என்பது, நாம் பல நேரங்களில் சிந்தித்து சில முடிவுகளை எடுக்கும் நிைல இது. அடி மூச்சு என்பது அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு, பக்தி மார்கத்தில் உருவ வழிபாட்டின் மூலமாகவோ அல்லது அகம் நோக்கிய பிரயாணத்திலோ, தன்னையே உணர்ந்து கொள்ள, தியான நிலையில் இருக்கின்ற நிலையாகும். ஆனால் இந்த மூன்று நிலைகளை கடந்து, நான்காவதாக ஒரு நிலை உள்ளது. அது ஞானிகள் அல்லது சித்தர்களின் மூச்சு எனப்படுகிறது.
இந்த மூச்சு ஆனது அடி மனம் என்று சொல்லுகின்ற ஆழ் மனதோடு இணைந்துள்ளது. இங்கிருந்து தான் நமக்கு உள்ளே இருந்து தெய்வத்தின் குரல் கேட்கிறது என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது. எனவே, நமக்குள் உள்ள இறைவனை உணர வேண்டும் என்றல், அந்த மெல்லிய குரலை கேட்டு, உணர வேண்டும் என்றால், நாம் ஞானிகளின் மூச்சோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு இந்த நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது. அப்படி செல்லும்போது நமது பேச்சு அடங்குகிறது.
எனவே, நாம் பேசாது இருக்கும்போது, நமக்குள் உள்ள இறைவன் பேசுகிறார் என்கிறார்கள் மகான்கள். விஞ்ஞான வழியில் சொல்லும்போது, இந்த ஞானிகளின் மூச்சின் மூலமாக நமது உதிரவிதானத்தை இயக்குகிறோம். அப்போது மனம் அமைதி பெறுகிறது. மேலும் உள் உறுப்பு தசைகள் வலுப்பெறுகிறது.
சித்தர்கள் வைத்து இருந்த பயற்சியை, உலகில் உள்ள பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கிலே இந்த மூச்சு பயிற்சியை ஏழு நிலைகளில் செய்யக்கூடிய நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியாக உலகிற்கு அளித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான். நாடி சுத்தி பிராணாயாமமும், வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட, நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியும் ஒரே பலனை கொடுக்கிறது என்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
இந்த ஞானிகளின் மூச்சை இயக்குகின்ற இந்த பயிற்சியை தான் திருமூலர் இதை சர கலை என்று கூறுகிறார். சரம் என்றால் தொடர்ச்சி, வளர்தல், முடிவு, இல்லாதது என்று பொருள். இந்த உடலிலே பிராணன் நீண்ட நாட்கள் தங்குவதற்கு செய்ய கூடிய ஒரு மூச்சு பயிற்சியை தான், திருமூலர் சரகலை என்று குறிப்பிடுகிறார். திருமூலர் ஒரு பாடலிலே சொல்லும்போது சரம் தெரிந்தவரிடம் சரசம் ஆடாதே என்கிறார்.
அதாவது இந்த மூச்சு செய்பவர் இடத்தில் தேவையில்லாமல் யாரும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்கிறார். மேலும் சரம் தெரிந்தவர் பரம் பார்ப்பார் என்கிறார். அதாவது இந்த பயிற்சி செய்பவர்கள் எப்பொழுதும், பரம் என்கின்ற இறைவனோடு இணைந்து இருப்பார்கள். அவர்கள் ஏதாவது நினைத்தாலோ, சொன்னாலோ அது அப்படியே நடந்துவிடும் என்று சரகலையின் முக்கத்துவத்தை குறிப்படுகிறார். இந்த சரகலை தான் நாடி சுத்தி பிராணாயாமம் அல்லது மகரிஷி அவர்களின் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியாகும்.
அது போல இந்த சரீரத்தின் மேலே ஐந்து கோசங்கள் என்று சொல்லுகின்ற ஐவகையான போர்வைகள் (உறைகள்) நமக்கு மேலே உள்ளது. அதை முறையே அன்னமய கோசம், மனோமயசோசம், பிராணமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம் என்கின்ற ஐந்து உறைகள் நமக்கு மேலே ஆடையாக உள்ளது.
இந்த ஐந்து உறைகளை கடந்து உள் சென்றால் நம் ஆன்மாவை நம்மால் உணர முடியும். இந்த பிராணாயாமம் பயிற்சியின் மூலம் நமக்கு ஐந்து கோசத்தில் இருந்து முக்தி கிடைக்கிறது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய இந்த சரீரத்திலும் இருக்கிறது. அவை முறையே, பஞ்ச பூதங்களாகிய நிலம் என்கிற பருவுடலும், நீர் என்கிற இரத்தமும், உமிழ்நீரும் விந்து நாதம் மற்றும் ஹார்மோன்களும் நெருப்பு என்கிற 98.4 வெப்ப நிலையும் ஆகாசம் என்று சொல்லுகின்ற உயிரும் உள்ளது.
மேலும் அண்டத்தில், பரம்வெளி மண்டலம் என்கின்ற பால்வெளி மண்டலங்கள் 3 1/2 (மூன்றரை) அளவு வளைவு உள்ளதாக இயங்கிகொண்டு இருக்கிறது. அது போல தான் இந்த உடலின் இயக்கத்திற்கு காரணமான குண்டலினி சக்தியும் 3 1/2 சுற்று வளைந்து படுத்து இருக்கும் பாம்பாகவே உருவகம் படுத்தப்பட்டுள்ளது.
அன்பர்களே, இந்த பிரபஞ்ச படைப்பிலே அனைத்து இயக்கத்திற்கும் காரணமான சக்தி, ஒன்றே ஒன்றுதான். அண்ட சராசரங்களின் இயக்கத்துக்கும், ஒவ்வொரு தனி மனிதனின் இயக்சுத்துக்கும், காரணமான சக்திக்குதான் குண்டலினி என்று பெயர். எனவே, இந்த குண்டலினி சக்தி என்னும் இறை சக்தியை நமக்குள்ளாக காத்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.
இந்த இறை சக்தியை நமக்குள் நாம் வாழும் காலத்திலேயே உணர்ந்தால் தான், நாம் கர்மவினை பதிவுகளில் இருந்து விடுபட முடியும். ஏனேன்றால் ஆயுள் என்பது நமது மூச்சோடு தொடர்பு உடையது. இதற்கு மூச்சு எப்படி உதவி செய்கிறது என்கிற சந்தேகம் நமக்கு எழும். இதை அட்டாங்க யோகத்தில் பதஞ்சலி முனிவர் நான்காம் அத்தியாயமாக (பிராணாயாமம்) அமைக்கிறார்.
மனித உடல் ஆனது திடமாக இயங்க 108 இடங்களில் உயிர்காற்று நின்று இயங்குகிறது. இதையே நாம் உயிர்நிலை ஓட்டம் என்கிறோம். மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 இடங்களில் உயிர்காற்றை இயக்குவதாக சித்தர்கள் அறிந்தனர். இந்த தச (10) வாயுக்கள் தான், 108 உயிர் இடங்களை, எப்படி இயக்குகிறது என்பதே பிராணாயாமம்.
அதே போல் மனிதனின் கண்களுக்கு புலப்படாத பொருட்கள் நான்கு 1. இறை நிலை 2. மனிதனின் உயிர் 3. காற்று 4. நோய். இவை நான்கும் உணர முடியும். இந்த நான்கும் தான் இந்த சரீரத்தை சூட்சமமாக ஆட்சி செய்கிறது. எனவே சித்தர்கள் கண்ணால் காண முடியாத பிராணனை கொண்டு உடலின் நோய்களை போக்கும் வழியை கண்டுபிடித்த முறையே பிராணாயாமம்.
நாடி சுத்தி என்பது உடலின் நோயை குணப்படுத்தும். மேலும் இந்த உடலை கல்பம் (அழியாதது) ஆக்கும். அறிவை அஜயா என்ற ஒடுக்க நிலைக்கு கொண்டு செல்லும்போது சிற்றறிவு ஆனது பேறறிவோடு இணையும். இதை உணர்ந்த சித்தர்கள், பொய் என்று சொல்லக்கூடிய இந்த தேகத்தை, மெய் என்று நிரூபித்து காட்டி காற்றை பிடித்து, மூலக்கனலை எழுப்பி, மெய்ஞான அமுது உண்டு நரை, திரை, மூப்பு, இன்றி இறவா வரம் பெற்று வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள்.
இப்போது இந்த நான்கு வகையான மூச்சை பற்றி சற்று விஞ்ஞான பார்வையாக பார்க்கும் போது இதன் முக்கியத்துவம் விளங்கும்.
மேல்மூச்சு என்பது உயர் சுவாசித்தல் என்பர். இதை கழுத்தெலும்பு சுவாசம் என்பர். இவ்வாறு சுவாசித்தால், விலா எலும்புகளை மேல் பக்கமாக தூக்கி கழுத்து எலும்பும், தோள்பட்டைகளும் உயர தூக்கும்.அதே நேரம், அடிவயிறு அத்தனையும் உள்ளுக்கு இழுத்து உதிரவிதானத்துக்கு எதிராய் அழுத்தி ஏற்றுவர். இதனால் குறைந்த காற்றே நுரையீரலுக்கு கிடைக்கும். மேலும் உதிரவிதானம் மேல் நோக்கி வந்து விட்டதால் எந்த திசையிலும் விரிவு அடைய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இது மிகக்குறைந்த அளவு பலனையே தரும். எனவே இந்த உயர் சுவாசித்தல் என்பது மிகவும் மோசமானது. பல பாகங்களை அழுத்தி உயர்த்தி அதிக வேலையை நம்மிடம் வாங்கி கொண்டு குறைந்த அளவே கை கூடும்.
நடு மூச்சு என்பது இதை விலா சுவாசித்தல் என்பர். உயர் சுவாசித்தலை விட சற்று கூடுதல் பலன் தரும். இதில் உதிரவிதானம் மேலுக்கு தள்ளப்பட்டு அடிவயிறு அடங்கிய வயிற்றுப்பகுதி உள்நோக்கு இழுக்கப்படுகிறது. இதனால் உயர் சுவாசத்தை விட பலன்கள் சற்று அதிகமாக கிடைக்கும். காரணம் என்னவென்றால், விலா எலும்புகள் சற்ற அதிகமாக தூக்கப்படுவதால், நெஞ்சின் ஒரு பகுதி மட்டுமே விரிவடையும்.
அடி மூச்சு என்பது, இதை அடி வயிறு சுவாசித்தல் என்பர். இந்த மூச்சு உதிரவிதானத்தின் மேல்பகுதி இயக்கப்படுவதால், மேல் மூச்சு, நடு மூச்சை விட நுரையீரல்கள் இயங்க அதிகமான சுதந்திரம் கிடைக்கும். இதனால் காற்று உள் இழுக்கும். இந்த நிலையில் உதிரவிதானம் இயக்கப்படும் போது குன்று போன்ற அமைப்பு கீழ் நோக்கி அழுத்தப்பட உதிரவிதானம், வயிற்றுப் பகுதி பாகங்களை அழுத்தி, அப்பகுதியை உந்தி வெளி தள்ளும். இதனால் கூடுதலான பிராண சக்தி கிடைக்கும்.
ஞானிகள் மூச்சு என்பது, மூச்சை உள் இழுத்து, வெளிவிடும்போது உள்ளே இருக்கும், உடலுக்கு ஒவ்வாதவற்றை அகற்றி, அனைத்து சுவாச உறுப்புகளையும் முழு இயக்கத்திற்கு உட்படுத்தும். நுரையீரலின் ஒவ்வொரு செல்லையும், ஒவ்வொறு பகுதியையும் முழு மையான இயக்கத்திற்கு உட்படுத்தும். குறைந்த சக்தி செலவில் அதிகமான சுவாச பலனை எட்ட வைக்கும்.
மேலும் மார்பு கூடு அனைத்து திசைகளிலும், அதிகப்படியான விரிவுக்கு உட்படுத்தப்பட்டு சுவாசத்தில் ஈடுபடும் அனைத்து உறுப்புகளும் தானாக முழு உழைப்புக்கு தள்ளப்பட்டு விடுவதால் முழு பலனும் கை மேல் கிடைக்கும். இதனால் நெஞ்சு மற்றும் அதன் உதிரி பாகங்களை வயிறு மற்றும் அதன் உதிரி பாகங்களில் இருந்து பிரிக்கும். தசை சுவரான உதிரவிதானம் முழுவதும் வேலை செய்யும். இந்த ஞானிகள் மூச்சின் பலன் நமக்கு நாடி சுத்தி பிராணாயாமம் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சி மூலம் கிடைக்கிறது.
யோகிகளின் இந்த சுவாசக் கலையை, அவர்கள் பவகார யோகம் என்கிறார்கள். அதாவது தொடர் நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியினால், யோகியானவர்கள் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி, அதனோடு மூச்சின் மீதும் மனதின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, புவி ஈர்ப்பு விசை எல்லைகளை கடந்து செல்லும் நிலை கிடைக்கிறது. எனவே, ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலையை வாழும் காலத்திலேயே கொடுக்கக்கூடிய சர கலையை நாம் செய்யும்போது ஆயுள் நீடிக்கிறது.
எப்போது நாம் ஆயுளை நீட்டித்து மரணத்தை வெல்கிறோமோ அப்போதே நமது கர்மவினை பதிவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நமது விதியை மதியால் வெல்லுகின்ற சூட்சமம் கிடைக்கிறது. அந்த சூட்சம ரகசியங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வோம்.