கஜினியின் முகமது குஜராத்தின் சோமநாதர் கோவிலைத் தாக்கி, அதன் பொக்கிஷங்களை கொள்ளையடித்ததாகவும், அப்போது நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன.

கஜினியின் முகமது சோம்நாத் கோவிலைக் கைப்பற்றியது எப்படி? எவ்வளவு பணம் மற்றும் பொக்கிஷங்களை அவர் கொள்ளையடித்துச் சென்றார்?

குஜராத்தின் சோலங்கி அரசர்களுக்கு அது பிரச்னையான காலம். அந்த நேரத்தில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குர்ஜார் ராஜ்ஜியத்தின் மதத் தலைநகராக சோம்நாத் கருதப்பட்டது. சௌராஷ்டிரா கடற்கரையில் உள்ள சோமநாதர் கோவிலின் காரணமாக இப்பகுதி அவ்வாறு திகழ்ந்ததாக கருதப்படுகிறது.

சௌராஷ்டிரா கடற்கரையில் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் சுவர்கள் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த ஆலயம் பெரிய கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 56 தூண்களுக்கு மேலே இந்த கோவிலின் மேற்கூரை கட்டப்பட்டுள்ளது.

 


பொக்கிஷங்கள் நிறைந்த சோமநாதர் கோவில்

கோவிலின் உச்சியில் 14 தங்க உருளைகள் இருந்தன. சூரியன் ஒளியில் அவை பிரகாசிக்கும் மற்றும் நீண்ட தூரத்திலிருந்து கூட அவற்றை பார்க்க முடியும். கோவிலில் நிறுவப்பட்ட சிவலிங்கம் ஏழு முழ உயரம் கொண்டது.

அதில் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. சிவலிங்கத்தை அலங்கரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் பயன்படுத்தப்பட்டது.
விளம்பரம்

கருவறைக்கு அருகில் உள்ள கூரையில் சிவபெருமானின் அடியார்களின் அடையாளமாக தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட பல சிலைகள் இருந்தன. கருவறையில் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்குகள் பிரகாசித்தன.

ஒரு பெரிய தங்கச் சங்கிலி சிலையில் தொங்கவிடப்பட்டிருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் ரத்தினங்கள், தங்கம் மற்றும் வெள்ளி சிலைகள் நிறைந்த ஒரு களஞ்சியம் இருந்தது.

டாக்டர் முஹம்மது நாஜிம் எழுதிய “கஜினியின் சுல்தான் முகமதுவின் வாழ்க்கை மற்றும் காலங்கள்” என்ற நூலில் கஜினி முகமதுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் பல விஷயங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

கஜினி என்பது சுல்தான் முகமது பிறந்து ஊர். தற்போதைய ஆப்கானிஸ்தானில் தென்கிழக்குப் பகுதியை அது குறிப்பிடுகிறது. அதனால் அவரை கஜினியின் முகமது (Mahmud of Ghazni) என்கிறார்கள்.

கொள்ளையடிக்கப்படுவதற்கு முன்பு சோம்நாத் கோவில் எப்படி இருந்தது என்பது பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் அல் பரூனி மற்றும் இபின் ஜாஃபிர் ஆகியோரின் குறிப்புகளை இந்த நூல் மேற்கோள் காட்டியுள்ளது.

சோமநாதர் கோவில் சிறப்புகள்

‘பிரபாஸ் யானே சோம்நாத்’ என்ற புத்தகத்தில் சோம்நாத் கோவிலைப் பற்றி விவரித்துள்ளார் சம்புபிரசாத் ஹரிபிரசாத் தேசாய்.

அந்த நூலில் கூறப்பட்டுள்ளதாவது, “ஈயம் பூசப்பட்ட 56 மரத் தூண்களால் கட்டப்பட்டது சோம்நாத் கோவில். உள் அறையில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. ஐந்து முழ உயரமும், பூமிக்கு அடியில் இரண்டு முழ ஆழமும் கொண்ட கோள வடிவில் சிலை உள்ளது. அறை முழுவதும் விளக்குகளால் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.”

“தங்கச் சங்கிலி மற்றும் மணிகளால் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த சங்கிலி நகரும், அதனால் மணி ஒலிக்கும். கோவிலில் நிறைய தங்க சிலைகள் இருந்தன. அதில் மிகவும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜவனிகாவும் இருந்தது. சோமநாதரின் சிலை தான் இந்திய சிலைகளில் தலைசிறந்தது.”

“மறுபிறவி கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட இந்துக்கள், ‘உடலை விட்டு வெளியேறிய ஆன்மா’ சோமநாதரிடம் வந்து வழிபடுவதாக நம்புகின்றனர்.

பக்தர்கள் தங்களுடைய மதிப்புமிக்க பொருட்களை இங்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். கோவிலின் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கான பணிகள் பல்லாயிரக்கணக்கான கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.”

“மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மதிப்புமிக்க ரத்தினங்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள சிலைகளை வழிபடவும், யாத்ரீகர்களுக்காகவும் ஆயிரம் பிராமணர்கள் இங்கு தங்கியிருந்தனர்.

யாத்ரீகர்களின் தலை முடியை வெட்ட 300 முடிதிருத்தும் பணியாளர்கள் இருந்தனர்”. என்று தனது புத்தகத்தில் சோம்நாத் கோவிலைப் பற்றி விவரித்துள்ளார் சம்புபிரசாத் ஹரிபிரசாத் தேசாய்.

சோம்நாத் கோவிலின் மறுசீரமைப்பின் போது பூர்வாங்க ஆராய்ச்சி செய்த வரலாற்றாசிரியர் ரத்னமணி ராவ் பீம் ராவும் தனது புத்தகத்தில் நிறைய எழுதியுள்ளார்.

பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சோமநாதரின் புகழ், நாடு முழுவதும் பரவியது. சோமநாதரின் செல்வமும் பெரியது. எனவே சுல்தான் முகம்மது, சோமநாதரின் புகழிலும் செல்வத்திலும் கவனம் செலுத்தினார்.
கஜினி முகமது

சுல்தானகத்தின் விரிவாக்கம்

உலகத்தின் எல்லைகள் வாளின் பலத்தால் தீர்மானிக்கப்படும் காலம் அது. கி.பி 998ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் மண்ணில் கஜினியின் சமவெளியில் இரு சகோதரர்களும் தங்கள் படைகளுடன் மோதிக்கொண்டனர்.

பகலில் நடந்த போரில் கஜினியின் முகமது வெற்றி பெற்று, மாலையில் அரியணை ஏறினார். முகமது அரியணை ஏறிய பிறகு, அவர் சுல்தான் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். இந்த பட்டத்தை பெற்ற உலகின் முதல் பேரரசர் இவரே. இது முஸ்லீம் கலீஃபாவிற்கு சமமாக கருதப்படுகிறது.

கஜினியின் சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, சுல்தான் தனது ராஜ்ஜியத்தின் (சுல்தானியத்தின்) எல்லைகளை விரிவுபடுத்த முடிவு செய்தார்.

வடக்கில் மத்திய ஆசியாவிலிருந்து தெற்கே சிந்து வரை, சுல்தானகம் தனது பேரரசை விரிவுபடுத்தியது. முகமது ஹிந்துஸ்தானின் பல பகுதிகளை கைப்பற்றினார். அங்கிருந்த கோவில்கள் அழிக்கப்பட்டன.

சோம்நாத் நோக்கிய பயணம்

முகமதுவின் வாழ்க்கை வரலாற்றின் படி, யாமின்-உத்-தவ்லா (முகமதுவின் பெயரைக் கொண்ட மற்றொருவர்) ராஜ்ஜியங்களை கைப்பற்றியதற்காகவும் கோவில்களை அழித்ததற்காகவும், கடவுள் சோம்நாத் மீது அவர் கோபம் கொண்டதாக இந்துக்கள் மத்தியில் ஒரு வதந்தி பரவியது.

பின்னர் சோம்நாத் செல்ல முடிவு செய்தார் முகமது. 1025ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி குதிரைகளில் 30,000 பேர் கொண்ட படையுடன் சோம்நாத் நோக்கி அணிவகுத்துச் சென்றார்.

இருப்பினும், வரலாற்று புத்தகங்களில் இந்த வீரர்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. 54,000 கூலித் தொழிலாளிகளும் 30,000 மத வீரர்களும் சோம்நாத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லத் தொடங்கினர் என ரத்னமணி தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

அரபு வரலாற்றாசிரியர் அலி இபின் அல்-ஆதிரின் கூற்றுப்படி, கஜினியிலிருந்து சௌராஷ்டிரா கடற்கரைக்கு 1,420 கிலோமீட்டர் பயணம் செய்த முகமது, 1026 ஜனவரி 6 அன்று குஜராத்தில் உள்ள சோம்நாத்தை அடைந்தார்.

சோம்நாத்தைக் கைப்பற்றிய முகமது

கஜினியிலிருந்து சோம்நாத் வரையிலான தூரத்தை அதிக தடையின்றி கடந்தார் முகமது. பயணத்தில் முகமது சந்தித்த சூழ்நிலைகளை ‘பிரபாஸ் யானே சோம்நாத்’ புத்தகத்தில் விளக்கியுள்ளார் சம்புபிரசாத் தேசாய்.

மாளவபதி முஞ்ச், போஜ் பர்மர், சேதிராஜா கர்ணன், சிந்து அரசர்களுடன் போரிட்டவர் அன்ஹில்வாட் பட்டான் சாம்ராஜ்யத்தின் அரசர் பீம் தேவ். முகமதுவின் பெரும் படையைக் கண்டு பயந்தார் அவர்.

பீம்தேவ் கட்ச் நோக்கிச் சென்றது முகமதுவுக்கு சாதகமாக அமைந்தது. மொதேராவை அடைந்ததும், முகமது தனது முதல் பெரிய சவாலை எதிர்கொண்டார்.

20 ஆயிரம் வீரர்கள் மோதேராவில் சுல்தானின் படைகளைத் தாக்கினர். சுல்தான் போரில் வெற்றி பெற்றதாக டாக்டர் நாஜிம் ‘தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சுல்தான் முஹம்மது ஆஃப் கஸ்னா’ (The Life and Times of Sultan Muhammad of Gazna) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அரேபிய வரலாற்றாசிரியர் அல்-இபின் அல்-ஆதிரையின் குறிப்பை மேற்கோள் காட்டி சம்புபிரசாத் தேசாய் பின்வருமாறு எழுதுகிறார், “ஒரு தளபதி இல்லாமலே ராணுவ வீரர்கள் முகமதுவுடன் போரிட்டனர்”.

மொதேரா போரும் முடிவடைந்ததால், சோம்நாத்தின் மீது படையெடுப்பது முகமதுவுக்கு எளிதாகிவிட்டது. ‘பிரபாஸ்-சோம்நாத்’ புத்தகத்தின்படி, “சோம்நாத் மிகவும் சக்திவாய்ந்தவர், தங்களை அந்நியர்களிடமிருந்து காப்பாற்றி எதிரிகளை அழிப்பார் என்று மக்கள் நம்பினார்கள்”.

விரட்டப்பட்ட முகமதுவின் படை

டாக்டர். நாஜிமின் கூற்றுப்படி அப்போது கடற்கரையில் ஒரு பெரிய கோட்டை இருந்தது, அதன் சுவர்களில் ஏராளமான பிராமணர்கள் கூடியிருந்தனர். இந்தியக் கடவுள்களை அவமதித்த சுல்தானை அழிக்க ‘சோமேஸ்வரா’ அவரை சோம்நாத்துக்கு அழைத்து வந்ததாக நம்பி, முகமதுவை அந்தக் குழு விமர்சித்தது.

ரத்னமணி ராவின் கூற்றுப்படி, முதல் நாள் சண்டையில் பல முகமதிய வீரர்கள் கொல்லப்பட்டனர், இரண்டாவது நாளும் அதுதான் நடந்தது.

கோட்டையில் ஏறும் முயற்சியில் வீரர்கள் தோல்வியடைந்தனர். டாக்டர் நாஜிமின் கூற்றுப்படி, “ஜனவரி 7ஆம் தேதி காலையில், மக்கள் முகமதுவின் படைகளின் தாக்குதலைத் தாங்க முடியாமல் திரும்பிச் சென்றனர். அன்று மதியம், முகமதுவின் வீரர்கள் கோட்டையை அடைந்தனர்”.

மேலும், “கோட்டை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதால், சோம்நாத் வாசிகள் கோவிலை அடைந்து சோமநாதரின் சிலைக்கு பிரார்த்தனை செய்தனர். பின்னர் இந்துக்கள் முகமதுவின் படையைத் தாக்கினர். மாலையில் அவர்கள் முகமதின் படைகளை விரட்டியடித்து, கைப்பற்றப்பட்ட கோட்டையை மீட்டனர்” என்று கூறுகிறார் டாக்டர் நாஜிமின்.

 


எவ்வளவு பணம் திருடப்பட்டது?

மூன்றாம் நாள் முகமதுவின் படை இரண்டு முறை தாக்கி கோட்டையை கைப்பற்றியது. இபின் அல்-ஆதிரின் கூற்றுப்படி, கோட்டையைக் கைப்பற்றிய பிறகு உள்ளூர் குழுக்கள் சோம்நாத் கோவிலை அணுகினர்.

அங்கு அவர்கள் மீண்டும் முகமதுவின் வீரர்களைத் தாக்கினர். இருப்பினும், முகமதுவின் படைகளால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

‘பிரபாஸ்-சோம்நாத்’ புத்தகத்தில், “இங்கு இந்துக்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்பது முகமதுவுக்குத் தெரியும். ‘சோம்நாத் வீரர்கள்’ அவருடன் சண்டையிட, உதவிக்காக காத்திருந்தனர்.

மேலும் ராஜ்ஜியத்தையும் இஷ்ட தெய்வத்தையும் காப்பாற்ற மிகவும் தாமதமாகவே ஆயத்தங்களைச் செய்தார் பீம்தேவ். மங்ரோலின் ஆட்சியாளரான அவரது மகன் ஜெய்பாலும், தந்தை பீம்தேவின் உதவிக்காக காத்திருந்தார்” என்று எழுதியுள்ளார் ரத்னமணி ராவ்.

போரை விரைவாக முடித்துவிட்டு கஜினிக்குத் திரும்ப முகமது விரும்பியதாக எழுதுகிறார் ரத்னமணி ராவ்.

‘பிரபாஸ்-சோம்நாத்’ புத்தகத்தில் ரத்னமணி ராவ் கூறியபடி, “முகமது தனது படையில் ஒரு சிறிய பிரிவை அமைத்து அவர்களை கோட்டையில் நிறுத்தினார்.

சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ‘சோம்நாத் வீரர்களுக்கு’ உதவி வருவதைத் தடுக்க மற்ற படைகள் அனுப்பப்பட்டன. இதற்கிடையில் பீம்தேவ் ராணுவ பலத்தை திரட்டி தாக்க வருவதை அறிந்த முகமது, தானும் அவ்வழியே சென்றான்.

பீம் தேவுக்கும் முகமதுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. அதன்பிறகு, பீம்தேவ் மீண்டும் ஓடினார். அந்தப் போருக்குப் பிறகு முகம்மது சோம்நாத் திரும்பினார், கோட்டையை அழித்தார்.”

இபின் ஜாஃபிரின் கூற்றுப்படி, “சோமநாதரைக் காப்பாற்றும் முயற்சியில் குறைந்தது 50 ஆயிரம் பக்தர்கள் உயிர் இழந்தனர். சோமநாதரின் கோவில் பொக்கிஷத்தை கொள்ளையடித்த பிறகு, மற்ற அனைத்தையும் எரிக்குமாறு முகமது கட்டளையிட்டார்.”

அலி இபின் அல்-ஆதிரின் கூற்றுப்படி, கோவிலின் கொள்ளையால் சுல்தானுக்கு 20 லட்சம் தினார்கள் கிடைத்தன. ‘தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சுல்தான் முஹம்மது ஆஃப் கஸ்னா’ புத்தகத்தின்படி, முஹம்மது பெற்ற தினார் மொத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே.

இந்த தினார்களின் சராசரி எடை 4.2 கிராம்கள். அந்தப் பணத்தின் மதிப்பைக் கணக்கிட்டால், மொத்தம் தோராயமாக இந்திய மதிப்பில் நூற்றி ஐந்து கோடியே நாற்பத்தி மூன்று லட்சம் ரூபாயாக இருக்கும்.

கொள்ளையடிக்கப்பட்ட புதையலின் மதிப்பை மதிப்பிடும் இந்நூல் 1931ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

 

புதையலைத் திருடிவிட்டு எப்படி தப்பினர்?

“சோம்நாத்திலோ சௌராஷ்டிரத்திலோ முகமதுவுடன் போரிட வேறு எந்த அரசரும் இல்லை. மொதேராவில் இருபதாயிரம் ‘வீரர்கள்’ இறந்தனர்.

இருப்பினும், சோம்நாத்தில் புதையல் கிடைத்த பிறகு, முகமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. புதையல் கிடைத்தவுடன், முகமது அதை சௌராஷ்டிராவிலிருந்து விரைவில் எடுத்துச் செல்ல முடிவு செய்தார்.

இதற்கிடையில் பீம்தேவை தாக்க கட்ச் சென்றார். எனினும், இந்த தாக்குதலில் முகமது வெற்றி பெற்றாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.” என சர் ஹரோல்ட் வில்பர்ஃபோர்ஸ்-பால் எழுதிய ‘ஹிஸ்டரி ஆஃப் கத்தியவார் ஃப்ரம் தி ஏர்லிஸ்ட் டைம்ஸ்’ நூலில் கூறப்பட்டுள்ளது.

‘பிரபாஸ் யானே சோம்நாத்’ புத்தகத்தின்படி, சோம்நாத்தை தாக்கி இந்து மன்னர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் முகமது.

மால்வாவின் மன்னர் போஜ் பர்மர், சம்பர்வாவின் விஷால்தேவ் சௌஹான் மற்றும் படானின் பீம் சோலங்கி ஆகியோர் முகமதுவுக்கு எதிரான போருக்கு வியூகம் வகுத்தனர். அப்போது கஜினி ராஜ்ஜியத்திற்குத் திரும்ப முகமதுவுக்கு மூன்று வழிகள் மட்டுமே இருந்தன.

மால்வானா வழியில் போருக்கு தயாராக இருந்தார் ராஜபோஜா, மவுண்ட் அபு பகுதியில் தயாராக இருந்தார் விஷால்தேவ் சவுகான். கட்ச் சென்றால் அவரது முகமதுவைத் தடுக்க பீமின் படைகள் தயாராக இருந்தன. ஆனால் முகமது அந்த மூவரையும் விட புத்திசாலியாக இருந்தார். பாலைவனப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உளவாளிகளிடமிருந்து மன்னரின் நடமாட்டம் பற்றிய வழக்கமான தகவல்களை அவர் பெற்றார்.

‘பிரபாஸ்-சோம்நாத்‘ புத்தகத்தின்படி, முகமது ராஜ்ஜியத்திற்கு வந்த வழியில் திரும்பிச் செல்லவில்லை. கட்ச் முதல் சிந்து வரை பாலைவனம் வழியாக சென்றுள்ளார்.

பீம்தேவ் மூன்று மன்னர்களில் மிகக் குறைந்த சக்தி வாய்ந்தவர் மற்றும் அவரது ராஜ்ஜியம் முகமதுவின் பாதையில் இருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்துடன் கஜினிக்கு செல்வது எளிதானது அல்ல என்பதை அறிந்த முகமது, பீம்தேவ் இருந்த கோட்டையைத் தாக்க முயன்றார்.

‘தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் சுல்தான் முஹம்மது ஆஃப் கஸ்னா’ நூலின் படி, முகமது பீம்தேவை கொன்ற பிறகு கட்ச்சை விட்டு சிந்துவிற்கு சென்றார். அந்த இடத்தை சேர்ந்த போமியோ என்பவரிடம் உதவி கேட்டார்.

ஆனால் பொம்யா சோமநாதரின் பக்தர். முகமதுவால் சோமநாதருக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்கும் வகையில், சுல்தானின் படையை பாலைவனத்தில் வீழ்த்தினார் போமியோ.

பணம் பறிப்பதற்காக தாக்குதல்

கஜினியின் பாரசீகக் கவிஞர் ஃபரூக் சிஸ்தானியின் கூற்றுப்படி, பல நாட்கள் அலைந்து திரிந்த சுல்தான் இறுதியாக சிந்துவை அடைந்தார். ஆனால், ‘பிரபாஸ்- சோம்நாத்’ புத்தகத்தின்படி போமியோவிடமிருந்து தப்பியது உண்மையாக இருக்காது. இங்கிருந்து சுல்தான் நேரடியாக மன்சூராவை அடைந்துள்ளார்.

சுல்தானால் மன்சூராவில் ஓய்வெடுக்க முடியவில்லை. அங்கேயும் போராட வேண்டியிருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கைப்பற்றுவதற்காக காஃபிஃப் அவர் மீது தாக்குதல் நடத்தினார். முகமதுவிடம் போதிய படைகளும், அதிக உழைப்பாளிகளும் இல்லை. ஆனாலும் காஃபிப்பை எதிர்கொண்டு, சுல்தான் வெற்றிபெற்று பின்னர் முல்தானுக்கு அணிவகுத்துச் சென்றார்.

டாக்டர் நாஜிம் தனது புத்தகத்தில் “முகமது சிந்துவைக் கடந்து கஜினிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். இருப்பினும், பாலைவனப் பகுதியைச் சுற்றி வாழும் ஜாட் இனத்தவர்கள் முகமதுவைத் தாக்கினர். இதனால் சுல்தான் பல வீரர்களை இழந்தார்” என்று கூறுகிறார்.

‘பிரபாஸ்- சோம்நாத்’ புத்தகத்தின்படி, பஞ்சாபின் ஜாட்கள் முகமுதுவைத் தடுத்தனர். முகமுது தான் கொள்ளையடித்த புதையலை பத்திரமாக வைத்திருந்தார். ஆனால் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் பிற விலங்குகள் ஜாட்களால் கொண்டு செல்லப்பட்டன.

“முகமது இறுதியாக 2 ஏப்ரல் 1026 அன்று கஜினியை அடைந்தார்” என்று தனது புத்தகத்தில் கூறுகிறார் டாக்டர் நாஜிமின்.

 

Share.
Leave A Reply