இரானால் ஒரே இரவில் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியாவில் உள்ள இரானிய தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் கூறியது.

இந்தப் பிரச்னையில் அடுத்து என்ன நடக்கும் என்பது நேற்றிரவு நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்து அமையும்.

இரானிய ஆட்சியை முற்றிலும் விரும்பாத நாடுகள் உட்பட பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் இந்த விவகாரத்தை நிதானமாக அணுக வலியுறுத்தியுள்ளன.
விளம்பரம்

இரானின் நிலைப்பாடு பின்வருமாறு உள்ளது, “கணக்கு சரி செய்யப்பட்டது, அதுதான் இந்த விஷயத்தின் முடிவு. எங்களைத் திருப்பித் தாக்காதீர்கள் அல்லது உங்களால் தடுக்க முடியாத அளவுக்கு ஒரு வலுவான தாக்குதலை நடத்துவோம்.”

ஒரு குறிப்பிடத்தக்க பதிலைக் கொடுப்போம் என இஸ்ரேல் ஏற்கனவே சபதம் செய்துள்ளது. தற்போதைய இஸ்ரேல் அரசாங்கம், இஸ்ரேலிய வரலாற்றில் மிகவும் கடுமையான மற்றும் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஒரு அரசாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களுக்கு சில மணி நேரங்களுக்குள் இந்த அரசு பதிலடி கொடுத்தது.

எனவே இரானின் இந்த நேரடித் தாக்குதலுக்கு பதிலளிக்காமல் விட்டுவிட வாய்ப்பில்லை, இருப்பினும் களத்தில் அதற்கென சில வரம்புகள் உள்ளன.


படக்குறிப்பு, இரானின் தாக்குதல் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவையைக் கூட்டியுளார்.

இஸ்ரேல் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

இஸ்ரேல், பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளின் பேச்சைக் கேட்டு ‘மூலோபாய பொறுமையைக்’ கடைபிடிக்கலாம். இரானைத் தாக்குவதற்குப் பதிலாக லெபனானில் உள்ள ஹெஸ்புலா அல்லது சிரியாவில் உள்ள ராணுவத் தளங்கள் போன்ற இரானின் நண்பர்களை குறிவைப்பதைத் தொடரலாம். இதை இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

நேற்றிரவு இரான் எந்த தளங்களில் இருந்து ஏவுகணைகளை ஏவியதோ, இஸ்ரேல் அதைக் குறிவைக்கலாம். நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்களால் பதிலடி கொடுக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நடந்தால் இரான் அதை போரின் தொடக்கமாகப் பார்க்கும். ஏனெனில் இஸ்ரேல் நேரடியாக இரானைத் தாக்குவது அதுவே முதல் முறையாக இருக்கும். இதுவரை பிராந்தியத்தைச் சுற்றியுள்ள இரான் ஆதரவு போராளி அமைப்புகளை மட்டுமே இஸ்ரேல் தாக்கியுள்ளது.

அவ்வாறு இல்லையென்றால், இரானின் சக்தி வாய்ந்த புரட்சிகர காவலர் படைக்கு சொந்தமான தளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களைத் தாக்கி, இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம். இது விரிவான பதிலடி தாக்குதலாக இருக்கும்.

பிந்தைய இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை இஸ்ரேல் தேர்ந்தெடுத்தால், இரான் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்ளும் அபாயம் உள்ளது.

படக்குறிப்பு, இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.

அமெரிக்காவையும் முழு போரில் ஈடுபட தூண்டுமா?

இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால், இவை அனைத்தும் இரான் – இஸ்ரேல் பிரச்னையில் அமெரிக்காவையும் இழுத்துவிடுமா என்பது தான். அப்படி அமெரிக்கா உள்ளே நுழைந்தால், இரானுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே முழு அளவிலான போருக்கு அது வழிவகுக்கும்.

ஆறு வளைகுடா அரபு நாடுகளிலும், சிரியா, இராக் மற்றும் ஜோர்டானிலும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளன.

பல ஆண்டுகளாக சர்வதேச தடைகளை மீறி இரான் தயாரித்துள்ள பாலிஸ்டிக் மற்றும் பிற ஏவுகணைகளின் இலக்குகளாக இந்த அமெரிக்க ராணுவத் தளங்கள் மாறக்கூடும்.

ஒருவேளை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தினால், இரான் நீண்ட காலமாக அச்சுறுத்தி வந்த ஒன்றைச் செய்யக்கூடும். அதாவது வெடிகுண்டுகள், ட்ரோன்கள் மற்றும் அதிவேக போர்க் கப்பல்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூட இரான் முயற்சி செய்யலாம்.

அவ்வாறு நடந்தால் உலகின் எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட கால் பகுதியை இரான் துண்டித்துவிடும்.

அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளை பிராந்திய அளவிலான போருக்கு இழுத்துச் செல்லக்கூடிய ஒரு பயங்கர நிகழ்வாக இது அமைந்துவிடும். இதைத் தவிர்க்க தான் பல அரசாங்கங்கள் இப்போது 24 மணி நேரமும் போராடி வருகின்றன.

Share.
Leave A Reply