இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அரபு நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேல் ஒரு நாடாக உதயமானதில் இருந்தே தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் ஒரு யூத நாடாக பரிணமித்தது முதலே இஸ்ரேல் தொடர்ச்சியாக பல போர்களை எதிர்கொண்டுள்ளது.
1948–49, 1956, 1967, 1973, 1982 மற்றும் 2006ம் ஆண்டுகளில் அரபு பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டுடனோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளின் கூட்டணியுடனோ இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. அத்தனை போர்களிலுமே இஸ்ரேலின் கையே ஓங்கியிருந்துள்ளது.
மத்திய கிழக்கில் இன்று வரையிலும் ராணுவ ரீதியாக இஸ்ரேல் ஒரு வலுவான நாடாகவே திகழ்கிறது. ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் 6 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலின் தாக்குதல் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.
காஸா போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய சூழலின் பின்னணியில், இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் பிராந்தியத்தையே பதற்றம் கொள்ள வைத்துள்ளது.
சுற்றிலும் தனக்கு எதிரான மனநிலையில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு ராணுவ வலிமை பெற்றிருப்பது எப்படி? இஸ்ரேலிடம் உள்ள ஆயுதங்கள் என்னென்ன? இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை எந்தெந்த நாடுகள் தருகின்றன?
அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் அமெரிக்கா, தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச அளவில் அதிநவீன இராணுவத்தை உருவாக்கவும் இஸ்ரேலுக்கு உதவியது.
ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷ்னல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (SIPRI) தரவுகளின்படி, 2019 மற்றும் 2023 காலகட்டத்துக்கு இடையில் இஸ்ரேலின் முக்கிய ஆயுதங்களின் இறக்குமதியில் அமெரிக்கா 69% பங்கு வகிக்கிறது.
10 வருட ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 28,500 கோடி) மதிப்பிலான வருடாந்திர இராணுவ உதவியை வழங்கி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு எதிராக ‘தரமான இராணுவ முனையம்’ (Qualitative military edge) ஆக இஸ்ரேல் செயல்படுவதை அமெரிக்கா உறுதி செய்கிறது.
இதுவரை தயாரிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களில் மிகவும் மேம்பட்டதாகக் கருதப்படும் F-35 ரக போர் விமானத்தின் (Joint Strike Fighters) தயாரிப்புக்கு நிதியளிக்க இஸ்ரேல் இந்த மானியங்களைப் பயன்படுத்தியது.
இதுவரை 75 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து, அவற்றில் 30க்கும் மேற்பட்ட போர் விமானங்களை பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக F-35 போர் விமானத்தை வாங்கிய மற்றும் போரில் பயன்படுத்திய முதல் நாடு இதுவாகும்.
அமெரிக்கா வழங்கிய நிதியின் ஒரு பகுதி, ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் கூட்டாக உருவாக்கப்பட்ட அயர்ன் டோம், ஏரோ மற்றும் டேவிட்ஸ் ஸ்லிங் அமைப்புகள் உள்ளிட்ட ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.
போரின் போது காஸாவில் உள்ள பாலத்தீன ஆயுதக் குழுக்களின் ராக்கெட், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராகவும், லெபனான், சிரியா, ஈராக் மற்றும் ஏமனை தளமாகக் கொண்ட இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்கு எதிராகவும் நாட்டை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் இத்திட்டங்களை நம்பியுள்ளது.
படக்குறிப்பு, இஸ்ரேலின் விமானப்படைக்கு இதுவரை தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களான F-35களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
ஹமாஸால் நிகழ்த்தப்பட்ட அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு ஒரு சில நாட்களில், அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு அமெரிக்கா “கூடுதல் இராணுவ உதவியை வழங்கி வருகிறது” என்றார். போர் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க இராணுவ விற்பனைகள் இரண்டுமுறை மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டன.
ஒன்று 106 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 14,000 ரவுண்டுகள் டேங்க் வெடிமருந்துகள் வழங்கியது. மற்றொன்று 155எம்எம் பீரங்கி குண்டுகளை தயாரிப்பதற்கான 147 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உதிரிபாகங்கள் வழங்கியதும் ஆகும்.
ஆனால் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் இஸ்ரேலுக்கு 100க்கும் மேற்பட்ட இராணுவ விற்பனையை ரகசியமாக மேற்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் ஆயிரக்கணக்கான துல்லியமான வெடிமருந்துகள், சிறிய குண்டுகள், பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகள் மற்றும் சிறிய ஆயுதங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஆயுத விநியோகங்கள் இருந்த போதிலும், 2023இல் அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலிய ஆயுத இறக்குமதியின் மொத்த அளவு 2022இல் இருந்ததை அதே விகிதத்தில் இருந்தது என்று SIPRI-இன் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அரசு கண்டிப்பாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய ஒரு பெரிய ஒப்பந்தம், 50 F-15 ரக போர் விமானங்களின் 18 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான விற்பனை ஆகும். இது பற்றிய செய்தி இந்த வாரம் வெளிவந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
விமானம் புதிதாக உருவாக்கப்பட வேண்டியிருந்தாலும், உடனடியாக இஸ்ரேலுக்கு வழங்கப்படப் போவதில்லை என்றாலும், இந்த விற்பனை குறித்து பிடனின் ஜனநாயகக் கட்சியினர் பரபரப்பாக விவாதிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அரசாங்கத்தில் உள்ள பல பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.
செனட்டர் எலிசபெத் வாரன், இந்த ஒப்பந்தத்தைத் தடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதோடு, காஸாவில் இஸ்ரேல் கண்மூடித்தனமான குண்டுவீச்சு நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெர்மனி
SIPRI தரவுகளின்படி, 2019 மற்றும் 2023 க்கு இடையில் இஸ்ரேலுக்கு 30% இராணுவ உபகரணங்கள் இறக்குமதி செய்து ஜெர்மனி, இரண்டாவது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது.
2023 இல், இஸ்ரேலுக்கு ஐரோப்பிய நாட்டின் ஆயுத விற்பனை €326.5m யூரோ ($351m, £280m) ஆக உள்ளது – 2022 உடன் ஒப்பிடும்போது ஆயுத விற்பனை 10 மடங்கு அதிகரித்துள்ளது- இந்த ஏற்றுமதி உரிமங்களில் பெரும்பாலானவை அக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பிறகு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
306.4 மில்லியன் யூரோ மதிப்புள்ள இராணுவ உபகரணங்கள் மற்றும் 20.1 மில்லியன் யூரோ மதிப்புள்ள “போர் ஆயுதங்கள்” விற்பனை செய்யப்பட்டதாக ஜெர்மன் அரசாங்கம் ஜனவரி மாதம் கூறியது.
DPA செய்தி நிறுவனத்தின் படி, ஜெர்மனி குறிப்பிட்ட போர் ஆயுதங்கள் விற்பனையில் 3,000 anti-tank எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் தானியங்கி அல்லது செமி தானியங்கி துப்பாக்கிகளுக்கான 500,000 வெடிமருந்துகளை உள்ளடக்கியது.
பெரும்பாலான ஏற்றுமதி உரிமங்கள் தரை வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்குதல், வடிவமைத்தல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் போன்ற தொழில்நுட்பங்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பில் உள்ளது.
ஜெர்மனி சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸ், போர் தொடங்கியதிலிருந்தே இஸ்ரேலின் தற்காப்புக்கு உறுதியான ஆதரவாளராக இருந்து வருகிறார், மேலும் காஸாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்த அவரது பேசும் தொனி சமீப வாரங்களில் மாறினாலும், ஜெர்மனியில் சில விவாதங்கள் ஏற்பட்டாலும், ஆயுத விற்பனை இடைநிறுத்தப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரியவில்லை.
படக்குறிப்பு, காஸாவில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பதில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் நிராகரித்து, அதற்கு பதிலாக ஹமாஸ் மீது குற்றம் சாட்டுகிறது
இத்தாலி
இத்தாலி இஸ்ரேலுக்கு மூன்றாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உள்ளது, ஆனால் அது 2019 மற்றும் 2023 க்கு இடையில் இஸ்ரேலிய இறக்குமதியில் 0.9% மட்டுமே பங்களித்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படை பீரங்கிகளை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
“ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின்” விற்பனை கடந்த ஆண்டு €13.7m ($14.8m; £11.7m) மதிப்பில் இருந்ததாக தேசிய புள்ளியியல் பணியகமான ISTATஐ மேற்கோள் காட்டி Altreconomia இதழ் கூறியுள்ளது. மேலும், € 2.1m மதிப்பிலான ஏற்றுமதிகள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் அங்கீகரிக்கப்பட்டது.
போர் நடத்தும் அல்லது மனித உரிமைகளை மீறுவதாகக் கருதப்படும் நாடுகளுக்கு ஆயுத விற்பனையை தடை செய்யும் சட்டத்தின் கீழ் ஆயுத ஏற்றுமதியை தடுப்பதாக அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் இருந்த போதிலும், ஆயுத ஏற்றுமதிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இராணுவ அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ கடந்த மாதம் நாடாளுமன்றத்தில், “இத்தாலி ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை ஒவ்வொரு வழக்கின் அடிப்படையில் சரிபார்த்த பிறகே அனுமதிப்பதாக” தெரிவித்தார். மேலும் “பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை” என்பதை உறுதிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.
படக்குறிப்பு, இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் காசாவில் பயன்படுத்தப்படும் ஹெர்ம்ஸ் 450 ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV) உருவாக்கியது.
பிற நாடுகள்
பிரிட்டன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2022 இல் £42m ($53m) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிரிட்டனின் இஸ்ரேலுக்கான இராணுவப் பொருட்களின் ஏற்றுமதி “ஒப்பீட்டளவில் சிறியது”.
ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான அமைப்பு (CAAT) குறிப்பிட்ட தகவலின் படி, 2008 முதல், இஸ்ரேலுக்கு மொத்தம் £574m ($727m) மதிப்புள்ள ஆயுத ஏற்றுமதி உரிமங்களை பிரிட்டன் வழங்கியதாக கூறப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு வழங்கப்படும் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் பாகங்களுக்கானவை.
ஆனால் அந்த ஏற்றுமதியை கூட நிறுத்தி வைக்க பிரிட்டன் அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் ரிஷி சுனக், பிரிட்டனில் ஏற்றுமதி உரிமம் வழங்குவதில் மிகக் கவனமாக செயல்படும் ஆட்சி நடப்பதாகவும் இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறும் அபாயம் குறித்து ஆலோசனை வழங்கும் மதிப்பீட்டை பிரிட்டன் அரசாங்கம் தயாரித்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மீது ஆயுதத் தடை “நடக்கப் போவதில்லை” என்று மூத்த அரசு நிர்வாகிகள் வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்தது.
2022 இல் 21.3 மில்லியன் கனடிய டாலர்கள் ($15.7m; £12.4m) மதிப்பில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த கனடா அரசாங்கம், அந்த நாட்டு சட்டத்தின்படி அவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வரை ஆயுதங்களுக்கான புதிய ஏற்றுமதி அனுமதிகளை அங்கீகரிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக ஜனவரி மாதம் கூறியது. இருப்பினும், ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஏற்றுமதிகள் செல்லுபடியாகும்.
படக்குறிப்பு, தனது இருப்பு கையிருப்பில் இருந்து பீரங்கி குண்டுகளை இஸ்ரேல் எடுக்க அமெரிக்கா அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு தொழிற்சாலை
இஸ்ரேல் தனது சொந்த பாதுகாப்புத் துறையை அமெரிக்க உதவியுடன் கட்டமைத்துள்ளது. மேலும் தற்போது உலகின் ஒன்பதாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராகவும் உள்ளது, பெரிய அளவிலான ஆயுதங்களை விட மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது.
இந்தியா (37%), பிலிப்பைன்ஸ் (12%) மற்றும் அமெரிக்கா (8.7%) ஆகிய மூன்று முக்கிய ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளுடன் SIPRI இன் கூற்றுபடி, 2019 மற்றும் 2023 க்கு இடையில் உலகளாவிய விற்பனையில் 2.3% பங்கைக் கொண்டிருந்தது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, 2022 இல் விற்பனை $12.5bn (£9.9bn) மதிப்பில் உள்ளது.
இந்த ஏற்றுமதியில் ஆளில்லா விமானங்கள் (UAVs) 25% ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் (19%) மற்றும் ரேடார் மற்றும் மின்னணு போர் அமைப்புகள் (13%) உள்ளிடவை அடங்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில், போர் தொடங்குவதற்கு சற்று முன்பு, நீண்ட தூர ஏவுகணைகளை இடைமறிக்கும் அதிநவீன ஏரோ 3 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இஸ்ரேலுடன் 3.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தம் மிகப் பெரிய அளவிலானது என்பதால் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக இந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தன.
இஸ்ரேலில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பு
1984இல் நிறுவப்பட்ட ஒரு பரந்த அமெரிக்க ஆயுதக் கிடங்கு இஸ்ரேலில் உள்ளது. இது பிராந்திய மோதல்களின் போது அதன் துருப்புகளுக்கான பொருட்களை முன்கூட்டியே நிலைநிறுத்துவதற்கும், அத்துடன் அவசர காலங்களில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விரைவாக அணுகுவதற்கும் அமைக்கப்பட்டது ஆகும்.
ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து பென்டகன் சுமார் 300,000, 155 மிமீ பீரங்கி குண்டுகளை இஸ்ரேலில் உள்ள இந்த வெடிமருந்து சேமிப்புக் கிடங்கில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பியது. காஸா போர் தொடங்கியதில் இருந்து இந்த கிடங்கில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டேவிட் கிரிட்டன்-பதவி, பிபிசி செய்திகள்