இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு விவரங்கள் நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இறுதியாக பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2018-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பினை கடந்த 26-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தார்.
26-ம் தேதி தீர்ப்பிற்காக நிர்மலா தேவி வழக்கு எடுத்துக்கொண்ட போது பேராசிரியர் நிர்மலா தேவி நேரில் ஆஜராகாததால், தீர்ப்பினை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
அதன்படி, பரபரப்பான சூழ்நிலையில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை அரசு தரப்பில் ஆவணங்களோடு நிரூபிக்க தவறியதால், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம் வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவி குற்றவாளி எனவும் கோர்ட் தீர்மானித்தது.
இந்த சூழலில் நிர்மலா தேவிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், வழக்கில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு வழங்கப்படும் தீர்ப்பு குறித்து வாதங்களை முன்வைக்க விரும்புவதாக நீதிபதியிடம் பேசினார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சி.பி.சி.ஐ.டி. சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசினார். இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி பகவதியம்மாள் கூறினார்.
தொடர்ந்து நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘வழக்கில் 2-ம் மற்றும் 3-ம் நபர்களாக குற்றம்சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்மலா தேவிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன் வைப்பதற்கு நீதிபதியிடம் அவகாசம் கேட்டிருக்கிறோம்.
வாதங்கள் குறித்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.
சி.பி.சி.ஐ.டி.தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசுகையில், ‘நிர்மலாதேவி வழக்கில் 2,3-ம் நபர்களாக குற்றம் சாட்டப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு எதிராக அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதற்கு போதுமானது தான்.
ஆனால் வழக்கு விசாரணையின்போது முருகன் மற்றும் கருப்பசாமிக்கு எதிராக ஆரம்பக்கட்டத்தில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிறழ் சாட்சிகளாக மாறியதால் நீதிமன்றம் பிறழ்சாட்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்திருக்கிறது. அதேசமயம் நிர்மலா தேவியை குற்றவாளி எனவும் தீர்மானித்துள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருக்குமே தண்டனை பெற்று தருவதில் அரசு தரப்பு உறுதியாக உள்ளது.
இந்த வழக்கிலே அரசுத் தரப்பில் 104 சாட்சிகள் வழங்கப்பட்டதில் 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
194 ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. 46 சான்று பொருட்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் முருகன், கருப்பசாமியின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். அதேசமயம் பிறழ் சாட்சிகளாக மாறிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்வார்கள்.
பிற்பகலில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிர்மலா தேவி வழக்கில் வாதங்களுக்கான சிறப்பு கால அவகாசம் வழங்கக் கூடாது,
இன்றைக்கே வாதங்களை முன்வைக்கவும் நியாயத்திற்கான தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம். எதுவாகினும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு பின்பு எதையும் உறுதியாக சொல்ல முடியும்’ என்றார்.
பிற்பகலில், தீர்ப்பிறக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், ‘இம்மார்டல் ட்ராஃபிக் ப்ரெவென்ஷன் ஆக்ட் சட்டத்தின்படி குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வாதங்களை முன்வைக்க எங்களுக்கு இறுதி வாய்ப்பு தர வேண்டும்.
இதேப்போல, பிரசாந்த் பூஷன் மீதான வழக்கிலும்கூட சுப்ரீம் கோர்டு இறுதிக்கட்டத்தில் எதிர்தரப்புக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது’ என மேற்கோள் காட்டி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், நாளை ஒரு நாள் அவகாசம் அளித்து `தீர்ப்பு நாளை பிற்பகலில் வழங்கப்படும்’ என வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.