கடந்த புதன் கிழமை 95 பில்லியன் டாலர்கள் இராணுவச் செலவினங்களுக்கான சட்ட மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடென் கையெழுத்திட்டதை அடுத்து, அமெரிக்க பாதுகாப்புத் துறையானது இன்றுவரை உக்ரேனுக்கு 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் மிகப்பெரிய ஆயுதங்களை அனுப்புவதாக அறிவித்தது.
“இது இன்றுவரை நாங்கள் உறுதியளித்த மிகப்பெரிய பாதுகாப்பு உதவி தொகுப்பு” என்று பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் பென்டகன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
(ஜூலை 26, 2023 அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள உயர் இயக்கம் பீரங்கி ராக்கெட் அமைப்பில் (High Mobility Artillery Rocket System -HIMARS) இராணுவ தந்திரோபாய ஏவுகணை அமைப்பை (Army Tactical Missile System – ATACMS) ஏற்றுவதற்கான கிரேனை ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய் தயார் செய்கிறார். [AP Photo/Sgt. 1st Class Andrew Dickson]
ரஷ்யாவுடனான அமெரிக்க தலைமையிலான பினாமி போருக்காக நேட்டோ நாடுகளில் இருந்து ஆயுத ஏற்றுமதிகளை அமெரிக்கா ஒருங்கிணைத்து வரும் ஜேர்மனியின் ராம்ஸ்டீன் விமான தளத்தில் நடந்த உக்ரேனிய தொடர்பு குழுவின் கூட்டத்தில் ஆஸ்டின் இந்த கொள்முதலை அறிவித்தார்.
“நாங்கள் தடுமாற மாட்டோம், நாங்கள் பின்வாங்க மாட்டோம், நாங்கள் தோல்வியடைய மாட்டோம்” என்று ஆஸ்டின் பெருமையடித்துக் கொண்டார்.
புதன்கிழமை 1 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஆயுத விநியோகம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரேனுக்கு புதிய ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா அறிவித்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிவிப்பு தற்போதுள்ள அமெரிக்க ஆயுத கையிருப்புகளை மாற்றுவது அல்ல, மாறாக முக்கிய அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களுடன் பல பில்லியன் டாலர் கொள்முதல் ஒப்பந்தம் ஆகும்.
கடந்த வாரம் காங்கிரசில் புதிய செலவினங்களை நிறைவேற்றியதைத் தொடர்ந்து இந்த மரண வியாபாரிகளின் பங்கு விலைகள் உடனடியாக உயர்ந்தன. இதுகுறித்து வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) பின்வருமாறு கூறியது:
முன்னர் ரேதியோன் டெக்னாலஜிஸ் (Raytheon Technologies) என்று அறியப்பட்ட லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) மற்றும் RTX, உக்ரேனுக்கு வினியோகிக்கவும், மற்றும் அமெரிக்க ஆயுத கையிருப்புகளை மீண்டும் நிரப்பவும், ஏற்கனவே வழங்கப்பட்ட 30 பில்லியன் டாலர் கூட்டாட்சி ஒப்பந்தங்களில் மிகப்பெரியளவில் ஆதாயம் அடைந்துள்ளன.
ஜெனரல் டைனமிக்ஸ் ((General Dynamics) உள்ளிட்ட பிற நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவு செய்ததால் கடந்த வாரம் வலுவான காலாண்டு விற்பனையை அறிவித்தன.
இன்றுவரை, அமெரிக்கா உக்ரேனுக்கு 44 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுதங்களை வழங்கியுள்ளது, அத்துடன் பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் நேரடி நிதி மானியங்களையும் வழங்கியுள்ளது.
கடந்த வாரம், பைடென் நிர்வாகம் 190 மைல்களுக்கும் அதிகமான தூரத்தை சென்று தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு ரகசியமாக அனுப்பியதை உறுதிப்படுத்தியது.
இந்த மாத தொடக்கத்தில் கிரிமியாவில் உள்ள ஒரு விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த உக்ரேனிய ஆயுதப் படைகள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தின. மற்றொரு தாக்குதலில், அசோவ் கடலில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகத்தைத் தாக்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா ரகசியமாக ஆயுதங்களை வழங்கியதை உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வியாழக்கிழமையன்று, “அவைகள் இப்போது உக்ரேனில் உள்ளன, சில காலமாக உக்ரேனில் உள்ளன. கூடுதல் ஆயுதங்கள் முடிவதற்குள் அவைகள் அங்கு வந்து சேர்ந்தன”என்று கூறினார்.
கடந்த ஆண்டு, ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை அனுப்புவதை திட்டவட்டமாக நிராகரித்தார்.
“உக்ரேனை அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்க நாங்கள் ஊக்குவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை” என்று அறிவித்தார்.
ஆனால் உக்ரேனில் தான் செய்யமாட்டேன் என்று பைடென் கூறிய எல்லாவற்றையும் போலவே, ஏவுகணைகளை அனுப்பும் திட்டங்கள் ஏற்கனவே அந்த நேரத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்தன.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிரிமியாவில் ரஷ்ய பிராந்தியத்தைத் தாக்க இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறினார், “அங்கு, இப்போது, ரஷ்யாவுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புகலிடம் உள்ளது,” என்று நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
உக்ரேனுக்கு ஏராளமான ஆயுதங்களும் பணமும் வழங்கப்பட்டாலும், இராணுவ நிலைமை கியேவிற்கு பேரழிவுகரமாகத்தான் உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், ஆஸ்டினும் அப்போதைய பாதுகாப்புச் செயலர் மார்க் மில்லியும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் “ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரேனை விடுவிப்பதற்கான தாக்குதலில் இறங்கும்” என்று அறிவித்தனர்.
அப்போதிருந்து, அந்த ஆண்டின் அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட உக்ரேனிய தாக்குதல் ஒரு தோல்வியாக மாறியது. உக்ரேனிய படைகள் போர் முன்னரங்கில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டன.
நூறாயிரக்கணக்கான உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதேவேளையில் கட்டாய இராணுவ சேவையைத் தவிர்ப்பதற்காக நூறாயிரக்கணக்கானவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உக்ரேன் பிரதமர் வோலோடிமிர் செலென்ஸ்கி, “ரஷ்ய இராணுவம் போர்க்களத்தில் முன்முயற்சி எடுக்க முடிந்தது, ஆனால் போர் முன்னரங்கை நிலைப்படுத்துவது சாத்தியம்” என்று அறிவித்தார்.
ஞாயிறன்று டெலிகிராம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், உக்ரேனிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, “போர் முன்னரங்கில் நிலைமை மோசமடைந்துள்ளது” என்று அறிவித்து, டோனெட்ஸ்க்கில் உக்ரேனிய படைகள் பின்வாங்கிவிட்டன என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
மிகவும் கடினமான சூழ்நிலை போக்ரோவ்ஸ்க் மற்றும் குராகோவ் திசைகளில் உள்ளது, அங்கு கடுமையான போர்கள் தொடர்கின்றன… உக்ரேனின் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள், எங்கள் பாதுகாவலர்களின் உயிரையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து, பெர்டிச்சி, செமெனிவ்கா மற்றும் நோவோமிகைலிவ்காவுக்கு மேற்கே புதிய முன்னரங்குகளுக்கு நகர்ந்துள்ளன.
சனிக்கிழமையன்று, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரத்தில் நடந்த சண்டையில் உக்ரேனிய இராணுவத்தைச் சேர்ந்த 8,000 க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது. ரஷ்ய ஆயுதப் படைகள் இரண்டு குடியிருப்புகளைக் கைப்பற்றியதாகவும், “முழு முன்னரங்க வரிசையிலும்” தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
உக்ரேனிய அதிகாரிகள் மேலும் மேலும் ஆண்களை போர்முனைக்கு அனுப்ப பெருகிய முறையில் மூர்க்கத்தனமாக உள்ளனர்.
இந்த மாதம், உக்ரேனிய நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, இது மே 1 இல் இருந்து நடைமுறைக்கு வரும், இது இராணுவத்துக்கு அணிதிரட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 27 இல் இருந்து 25 ஆக குறைக்கிறது என்பதோடு, கட்டாய இராணுவ சேவைக்கு தகுதியுள்ள அனைத்து ஆண்களும் ஒரு இணைய தரவுத்தளத்தில் பதிவு செய்யக் கோருகிறது.
அதே நேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் 4.5 மில்லியன் உக்ரேனிய ஆண்களில் சிலர் தாயகம் திரும்பி போரில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தும் முயற்சியில், செலென்ஸ்கியின் உக்ரேனிய அரசாங்கம் இராணுவ வயதுடைய ஆண்களுக்கான அனைத்து தூதரக சேவைகளையும் ரத்து செய்தது.
எகானாமிஸ்ட் (The Economist) பத்திரிகையில் வெளியான ஒரு சமீபத்திய கட்டுரையானது, இராணுவத்தில் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான கொடூரமான போராட்டத்தை, இது கிட்டத்தட்ட மரண தண்டனைக்கு ஒப்பானதாகும் என்று விவரித்தது.
சாஷா போன்ற ஆண்களுக்கு… இது சாத்தியமில்லாத இக்கட்டான நிலையை முன்வைக்கிறது. அவர் நடுவில் சிக்கிக் கொண்டதாக உணர்கிறார், அவர் தனது வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை, ஆனால் ஆட்சேர்ப்பு அதிகாரிகள் அடுத்த கதவைத் தட்டக்கூடும் என்று பயப்படுகிறார்.
“நீங்கள் போகலாம், ஆனால் இது ஒரு வழி டிக்கெட். நீங்கள் போர் முன்னரங்குகளுக்குச் செல்லலாம், ஆனால் அதுவும் ஒரு வழி டிக்கெட்டாக இருக்கலாம்.
அல்லது இங்கேயே இருந்து பயந்து வாழலாம்” என்றார். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு மதிப்பீட்டின்படி, 650,000 போரிடும் வயதுடைய ஆண்கள் உக்ரேனை விட்டு வெளியேறியதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத வழிகளில் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு முறை ஊழல் அதிகாரிக்கு சில ஆயிரம் டாலர்கள் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இப்போது அது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது. போர் முன்னரங்கில் உள்ள தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளன. ஆனால், மேலும் யாரும் போரிடுவதற்கு முன்வரவில்லை.
பேரழிவுகரமான நிலைமை இருந்தபோதிலும், உக்ரேனிய துருப்புக்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா கோருகிறது.
“நாங்கள் வழங்கிய திறன்கள் மற்றும் வளங்கள் மூலம், உக்ரேன் தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், கூடுதல் திறன்களை மீண்டும் உருவாக்கி, தனக்கான விருப்பங்களை உருவாக்குவதற்கான திறனைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஆஸ்டின் ஆயுத விநியோகத்தைபற்றி அறிவிக்கும்போது கூறினார்.
தோல்வியின் சாத்தியக்கூறை முகங்கொடுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், கடைசி உக்ரேனியர் இருக்கும்வரை போரிட வேண்டும் என்று கோருகின்றன.
ஆனால், நூறாயிரக்கணக்கான சண்டையிடும் வயதில் இருந்தவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், உக்ரேனிய படைகளின் மொத்த வீழ்ச்சியைத் தடுப்பதற்கு தவிர்க்கவியலாமல் நேட்டோ படைகளின் அதிக ஈடுபாடு தேவைப்படும்.
கடந்த இரண்டு மாதங்களாக, ஐந்து நேட்டோ அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் உக்ரேனுக்குள் நேட்டோ துருப்புகளை நேரடியாக நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறை எழுப்பியுள்ளனர்— இதற்கான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்