யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யால்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும். வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.