சதீஷ் கிருஷ்ணபிள்ளை
கிராண்ட் கிரெம்ளின்; மாளிகை. அங்கு த்ஸார் மன்னரும் கிரீடம் சூட்டிக் கொண்ட மண்டபம். கால் நூற்றாண்டு காலம் தனிக்காட்டு ராஜா போல் ரஷ்யாவை ஆட்சி செய்த ஜனாதிபதி விளாடிமிர் புட்டீன். கடந்த மார்ச்; மாதம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்தாவது தடவையாகவும் ரஷ்யத் தலைவராக சத்தியப்பிரமாணம் செய்யும் வைபவம்.
ஒரு வல்லரசு தேசத்தின் அதிகார பலம் சகலதிலும் பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோலாகலமான அரச சடங்கு. மேடையேறிய புட்டீனின் வீரமுழக்கம் செய்தார். எல்லாவற்றை விடவும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக சூளுரைத்தார்.
உக்ரேனுக்கு எதிரான யுத்தம் பற்றி பேசியபோது, ரஷ்யா வெல்லுமென புட்டீன் முழங்கினார். அவரது பேச்சைத் தொடர்ந்து 30துப்பாக்கி வேட்டுக்கள் தீர்;க்கப்பட்டன. தம்மையும், தமது ஆற்றல்களையும் நிரூபித்துக் காட்ட வேண்டிய தேவை ரஷ்ய ஜனாதிபதிக்கு இருந்து.
முதலில் தமது நாட்டு மக்களுக்கும், அடுத்ததாக தம்மை விமர்சிக்கும் மேலைத்தேய நாடுகள் மத்தியிலும் தாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் 88சதவீத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியது என்னவோ உண்மை தான்.
ஆனால், அந்தத் தேர்தல் பற்றிய மேலைத்தேய சமூகங்களின் விமர்சனங்களைத் தாண்டியும் ரஷ்ய மக்களுக்கும் சந்தேகங்கள் இருந்தன. உக்ரேனுக்கு எதிரான யுத்தம் ரஷ்யாவை பாதுகாப்பற்றதாக மாற்றி விட்டதா? புட்டீன்; பிரசாரப் பொருளாக யுத்தத்தைப் பயன்படுத்தினாரா என்ற சந்தேங்கள் முதன்மையானவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் உணர்வுபூர்வமானதொரு தளத்தில் இடம்பெற்றது. இந்தத் தேர்தலில் தாம் முதலில் போட்டியிடுவதாக அறிவி;த்த பொரிஸ் நதெஸ்தின் என்பவர், போர் வேண்டாம் என்ற பிரசாரத்தை முன்னிறுத்தியே களத்தில் குதித்தார்.
அவர் ஆரம்ப கட்ட சோதனைகளில் தகுதி பெற்ற போதிலும், வாக்கெடுப்பிற்கு ஒரு மாதம் எஞ்சியிருந்த சமயத்தில், தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிக்கும் சிலரது கையெழுத்துக்களில் இருந்த குறைபாடுகள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு, பொரிஸ் நதெஸ்தினை தகுதிநீக்கம் செய்திருந்தது.
Alexey Navalny
அடுத்ததாக, எதிரணியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்த அலெக்ஸே நவால்னி. ஊழல் மோசடிகளுக்கு எதிராக போரிடும் செயற்பட்டாளர்.
கடந்த கால குற்றச்செயலொன்றை காரணம் காட்டி, இந்த மனிதரையும் தேர்தல் ஆணைக்குழு தகுதி நீக்கம் செய்திருந்தது. இவர் பெப்ரவரி மாதம் சிறைச்சாலையொன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிருடன் இருந்த காலத்தில், நவால்னியை நஞ்சூட்டிக் கொல்வதற்கு பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும், அவருக்கு மேலைத்தேய நாடுகளில சிகிச்சை அளிக்கப்பட்டதையும் மறந்து விட முடியாது.
தமக்கு சவாலாகத் திகழும் எந்தவொரு பகையாளியையும் இல்லாதொழிக்கத் தயங்காதவர். அதற்காக, தாம் குவித்துக் கொண்டுள்ள எந்தவொரு அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயங்காதவர் என்ற விமர்சனம் புட்டீன்; மீது உண்டு. இந்த விமர்சனத்தைத் தாண்டி, ரஷ்யாவை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் தம்மிடம் மாத்திரமே உண்டென்பதை நாட்டு மக்களுக்கு நிரூபிக்கும் அவசியம் அவருக்கு இருந்தது.
என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும், பொருளாதார சீர்குலைவில் இருந்து மீண்டெழக்கூடிய தேசமாக ரஷ்யாவை மாற்றியது, புத்தினின் தலைமைத்துவ ஆற்றல் தான் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இரு வருடங்களுக்கு முன்னர், ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது போர் தொடுத்ததை அடுத்து, அந்தப் போர் இரண்டாம் மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய ஆயுத நெருக்கடியாக பரிணமித்ததைத் தொடர்ந்து, மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் மீது தீவிர பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன.
இந்தப் பொருளாதாரத் தடைகளை சகித்துக் கொண்டு, சீனா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளின் உதவியுடன் இன்று தமது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலையில் வைத்திருக்கிறார் என்றால், அது புட்டீனின் ஆற்றலால் மாத்திரம் சாத்தியப்பட்ட விடயம் என்று ரஷ்ய மக்கள் நம்புகிறார்கள்.
கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம், 2030ஆம் ஆண்டு வரை ரஷ்யாவை ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம் புட்டீனுக்குக் கிடைக்கிறது.
தமது ஆட்சிகாலத்தில் 2020ஆம் அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்து, பதவியில் உள்ள ஜனாதிபதியொருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஏற்பாட்டை புத்தின் செய்திருக்கிறார்.
இதன் பிரகாரம், 2030ஆம் ஆண்டு தாண்டியும் தேர்தலில் வெற்றி பெற்று அவர் ஜனாதிபதியாக தெரிவாகக்கூடிய சாத்தியம் உண்டு. இப்போது புட்டீனுக்கு 71 வயது. அடுத்து வரும் ஆறாண்டுகளில் அவர் என்னவெல்லாம் செய்யப் போகிறார் என்பது சமகாலத்தின் முக்கியமான கேள்வி.
போர்க்களத்தில் உக்ரேனியப் படைகளுக்கு போதிய ஆளணி வளமும், ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் ரஷ்யப் படைகளின் கை மேலோங்குவதைப் போன்றதொரு தோற்றப்பாடு உள்ளது
இருந்தபோதிலும், உக்ரேனிய தரப்பில் இருந்து ரஷ்ய மண்ணின் மீது ஏவுகணைத் தாக்குதல்களும், ட்ரோன் தாக்குதல்களும் நடத்தப்பட்டதை அடுத்து, இந்த யுத்தம் ரஷ்ய மண்ணை நோக்கி நகர்ந்துள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.
நேட்டோ நாடுகளின் உதவியுடன் உக்ரேன் எல்லைமீறிச் செல்லூமாயின், இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான யுத்தமாகக் கூட பரிணமிக்கலாம் என்று தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புத்தின் கூறியிருந்தார். உள்நாட்டைப் பொறுத்தவரையில், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு மேம்படுத்துகிறார் என்பதில் தான் அவரது செல்வாக்கு தங்கியிருக்கிறது.
2018இல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது, ரஷ்யாவை உலகின் சிறந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்றாக மாற்றப் போவதாக புத்தின் உறுதியளித்திருந்தார்.
தற்போது ரஷ்ய பொருளாதாரம் போருக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பிற்காக பெருந்தொகை பணம் செலவிடப்படுகிறது.
எதிர்காலத்தில் வரிகளை அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடும். கூடுதலான ஆண்கள் படைகளில் சேர வேண்டுமென நிர்ப்பந்திக்கவும் நேரிடலாம்.
மேலோட்டமாக பார்க்கையில் அமைதியாகத் தெரிந்தாலும் கூட, போருக்கு எதிராகவும், பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் ரஷ்யாவில் ஆங்காங்கே எதிர்ப்பலைகள் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த நவால்னி கைது செய்யப்பட்டதொரு சந்தர்ப்பத்திலும் ஒரு மக்கள் போராட்டம் உருவானது.
கடந்த சில வருடங்களாக, ரஷ்ய அதிகாரபீடம் எதிர்ப்பலைகளை இதுவரை காணாத முனைப்புடன் வலுவாக அடக்கியொடுக்கி வருவது தெளிவாக புலப்படுகிறது. இது தொடருமென எதிர்பார்க்கலாம்.
சர்வதேச அரங்கிலும் புட்டீனுக்கு சவாலொன்று உண்டு. கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தின் பெற்ற வெற்றியை அங்கீகரிக்க முடியாதென சில ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நாடுகள் தனித்தனியாக எந்தவொரு நிலைப்பாட்டை எடுத்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் என்ற கூட்டமைப்பாக புட்டீனை நிராகரிக்க முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
புட்டீனை ரஷ்ய ஜனாதிபதியாக ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் கூட்டாக எடுக்குமாயின், உக்ரேனிய – ரஷ்ய யுத்தம் பற்றி யாருடன் பேசுவது என்ற கடினமான கேள்வி தலைதூக்கும். இது ஒட்டுமொத்த ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி விடலாம்.