மணலையும் கயிறாகத் திரிக்கும் வேலையைச் செய்யக் கூடிய விரல் விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் ஒருவர் தான் பஷில் ராஜபக்ஷ.
இந்தக் கூற்றில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவரது அரசியலில் , வாழ்வியலில் நேர்மை இருக்கிறதோ இல்லையோ, அரசியல் காய்நகர்த்தல்களில் வேறெந்த அரசியல்வாதியையும் மிஞ்சக் கூடிய திறமை இருக்கிறது என்பது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது தான்
இது பஷிலுக்கான புகழ்ச்சி அல்ல. ஏனைய அரசியல்வாதிகள் அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். 2015 ஜனாதிபதி தேர்தலில், ஏற்பட்ட தோல்விக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் எதேச்சாதிகாரம் தான் காரணம் எனச் சொல்லப்படுவதுண்டு. அவ்வாறான விமர்சனங்கள் வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டன.
அதில் கணிசமான பங்கு பஷில் ராஜபக்ஷவுக்கும் இருந்தது. எத்தனையோ ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய போதும், அவற்றில் சிக்கிக் சிறைக்குள் செல்லாமல், மருத்துவமனைக் கட்டிலுடன் இருந்து விட்டு வெளியே வந்தவர் அவர்.
மஹிந்தவின் தோல்விக்குப் பின்னர் பொதுஜன பெரமுனவை உருவாக்கி அடுத்த சில ஆண்டுகளிலேயே அதிகாரத்தைப் பிடிக்கும் அளவுக்கு அதனை வளர்ச்சியடையச் செய்தவர்.
பொதுஜன பெரமுன என்ற கட்சி இன்றைக்கு சிங்கள அரசியலில் வலுவான ஒன்றாக இருக்கிறது என்றால், மஹிந்தவின் தலைமைத்துவம் மாத்திரம் காரணமல்ல, பஷிலின் திறமையான, சாதுரியமான காய்நகர்த்தல்களும் கூட அதற்கு முக்கிய காரணம்.
எதிரிகளை நண்பனாக்குவது, நண்பர்களை எதிரியாக்குவது என்று அரசியலுக்காக- அதிகாரத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் அவர்.
“அரசியலில் எப்போதும், எதுவும் நடக்கலாம்” , “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை” என்று இரண்டு முக்கியமான வாக்கியங்கள் சொல்லப்படுவதுண்டு. அவையிரண்டும், முற்றிலும் சரியானவை.
அரசியலில் இது தான் நடக்கும் நடக்கவேண்டும் என்ற விதிமுறையெல்லாம் இல்லை. அதனைத் தாண்டிது தான் அரசியல்.
ஏனென்றால், அரசியல் ஒரு கலை. திறமையாக கையாளத் தெரிந்தவர்களால், இலாவகமாக கையாளக் கூடிய ஒன்று.
அவ்வாறானவர்கள் அரசியலைக் கையாளும் போது, நடக்க வேண்டியவை நடக்காது. நடக்காது எனக் கருதப்படுவது தான் நடந்தேறும். இது வரலாற்று உண்மை.
இதற்கு பஷிலுடன் தொடர்புடைய ஒரு உதாரணத்தைக் கூறலாம். 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திடீரென ஒரு நாள் மாலையில், நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பொறுப்பேற்றார் என்ற செய்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாராலும் நம்ப முடியவில்லை. மஹிந்தவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மைத்திரி. அவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.வுடன் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தார்.
திடீரென எப்படி அவர் மஹிந்தவை பிரதமராக நியமித்தார்? என்ற விடை தெரியாமல் மக்கள் குழம்பிப் போயினர். முதல் நாள் இரவு தன்னுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலையில் எதிர்க்கட்சிகளிடம் ஓடிப் போனவர் மைத்திரி என்று கேவலமாக விமர்சித்தவர் மஹிந்த.
அதே மஹிந்த, அதே மைத்திரியின் முன்னால் போய் நின்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டதை யாராலும் நம்ப முடியவில்லை. ஆனாலும் அதனை நம்ப வேண்டியிருந்தது. ஏனென்றால் அதுவே உண்மை.
அரசியலில் நடக்காத அதிசயம் ஏதுமில்லை என்று சொல்வது போல, அந்த அதிசயமும் நடந்தேறியது.
அது ஒரு அரசியல் சூழ்ச்சி. அதில் பஷில் ராஜபக்ஷவின் பங்கு கணிசமானதாக இருந்தது. அந்தச் சூழ்ச்சியில், அரசியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.
எதிரிகள் நண்பர்கள் ஆயினர். நடக்க முடியாது எனக் கருதப்பட்டது நடந்தேறியது.கடைசியில் எல்லாம் கவிழ்ந்து போனது வேறு கதை.
பஷில் ராஜபக்ஷ போன்ற அரசியல் கலையை திறமையாக கையாளக் கூடியவர்கள் குறித்து ஏன் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கான உதாரணமே இது.
கோட்டாவின் ஆட்சிக்குப் பிறகு சரிந்து விழுந்த பொதுஜன பெரமுன சாம்ராஜ்யத்தை மீளக் கட்டியெழுப்பும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் பஷில்.
அவர் மீண்டும் எப்படியாவது, ராஜபக்ஷவினரை அதிகாரத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்தடுத்து சந்தித்து, அவரது உறுதியான நிலைப்பாட்டை அசைத்துப் பார்க்க முயற்சிக்கிறார்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் பஷில் ராஜபக்ஷவின் நிலைப்பாடு.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பஷில், முதல் முறை ஜனாதிபதி ரணிலைச் சந்திக்க சென்ற போதே அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
ஆனாலும், அடுத்து அடுத்து என அவர் அதே கோரிக்கைகளை முன்வைத்து ரணிலுடன் சந்தித்து வருகிறார். ‘எறும்பு ஊரக் கல்லும் குழியும் ‘ என்பது போல, ஒவ்வொரு முறை பஷிலைச் சந்திக்கும் போதும், அவரது கோரிக்கையை ரணில் நிராகரித்து வந்தாலும்- அவரது உறுதி குறையத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஐ.தே.க.வின் மேதினப் பேரணி மிகவும் வெற்றிகரமான ஒன்றாக அமையாததால், அதனை வைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு பஷில் ராஜபக்ஷ அழுத்தம் கொடுப்பதாக ஒரு தரப்பு சொல்கிறது.
மற்றொரு பக்கம், ரணிலை வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், பொதுஜன பெரமுன அவருக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னமும் தீர்மானிக்காமல் இருக்கிறது என்று மற்றொரு தரப்பு கூறுகிறது.
மொட்டுகட்சியின் வேட்பாளராக போட்டியிடலாம் என முன்னர் சொல்லப்பட்ட வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா மேதின மேடையில் முக்கிய தலைவர்களுடன் அமரவைக்கப்பட்டதும், ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத் தான் என்றும் கருதப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், பொதுத் தேர்தல் நடத்தினால், பொதுஜன பெரமுன பெரும் தோல்வியை சந்திக்கும் என்ற பரவலான கருத்து உள்ளது. பஷில் ராஜபக்ஷவுக்கு அது தெரியாத ஒன்று அல்ல.
அதனால் முதலில் பொதுத் தேர்தலை நடத்தி விட்டு ஜனாதிபதி தேர்தலுக்குச் செல்வது பஷிலின் திட்டம்.
முதலில் பொதுத் தேர்தலை நடத்தினால் மட்டும் மொட்டுவுக்கு அதிகாரம் வந்து விடுமா என்ற கேள்வி இருக்கிறது. அது சரியானது தான்.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பஷில் ஒரு செவ்வியில், தற்போது தேர்தல் நடத்தப்பட்டால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று உறுதியாக கூறியிருந்தார். அப்படிப்பட்ட பஷில் ராஜபக்ஷ, முதலில் பொதுத் தேர்தலை நடத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற கனவு காணமாட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், பொதுத்தேர்தலை சந்தித்து பெரும் தோல்வியை சந்திப்பதை விட, முதலில் பொதுத்தேர்தலை சந்தித்து, குறைந்தபட்ச தோல்வியுடன், ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதே மேல் என்பது தான் பஷிலின் திட்டம்.
முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கும் ஆட்சியமைக்கும் பலம் கிடைக்காது. அந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியமான கட்சிக்கு ஆதரவளித்து, தமது அரசாங்கத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்.
அதனை வைத்து, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க முற்படுகிறார். இதற்காகத் தான் ரணிலை அவர் அடுத்தடுத்து சந்தித்து அவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அதற்காக அவர் பல்வேறு உத்திகளையும் கையாளுகிறார்.
கடைசியாக அவர் மொட்டு எம்.பிக்கள் மற்றும், அமைப்பாளர்களை சந்தித்து பொதுத் தேர்தலுக்கு தயாராகவே இருங்கள் என்று உசார்படுத்தியிருக்கிறார்.
ஆக மொத்தத்தில், பஷில் இலங்கையின் அரசியலை தனது கைக்குள் வைத்துக் கொள்வதற்கு முற்படுகிறார். இதற்கு ரணில் இடமளித்தாரேயானால், அரசியல் கடிவாளம் மீண்டும் பஷிலிடம் வந்து விடும்.
அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். அரசியல் நுட்பங்களைக் கையாளத் தெரியாதவர்களுக்குத் தான் அது ஆச்சரியமான ஒன்றாக இருக்கும்.
– சத்ரியன்